Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ரூ.பல லட்சம் வாடகை பாக்கி மாட்டுத்தாவணி கடைகளுக்கு பூட்டு : மாநகராட்சி நடவடிக்கை

Print PDF

தினமலர் 21.01.2010

ரூ.பல லட்சம் வாடகை பாக்கி மாட்டுத்தாவணி கடைகளுக்கு பூட்டு : மாநகராட்சி நடவடிக்கை

மதுரை : மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில், பல மாதங்களாக பல லட்சம் ரூபாய் வாடகை பாக்கி வைத்துள்ள கடைகளை, நேற்று மாநகராட்சி அதிகாரிகள் பூட்டினர். இந்நடவடிக்கையால் ஒரே நாளில் 15 லட்சம் ரூபாய் வசூலானது.

இங்கு மொத்தம் 193 கடைகள் இருக்கின்றன. இவற்றில் பல கடைகள், பல மாதங்களாக வாடகை செலுத்தவில்லை. சில கடைகள், தலா 40 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வாடகை பாக்கி வைத்துள்ளன. அனைத்து கடைகளும் சேர்த்து, ஒரு கோடி ரூபாய் வாடகை பாக்கி உள்ளன. அங்குள்ள ஒரு ஓட்டல் மட்டும் 10 லட்சம் ரூபாய் பாக்கி வைத்துள்ளது.

இக்கடைகளுக்கு நேற்று காலை உதவி கமிஷனர் (வருவாய்) ஆர்.பாஸ்கரன், வடக்கு மண்டல உதவி கமிஷனர் ராஜகாந்தி மற்றும் அதிகாரிகள், போலீஸ் பாதுகாப்புடன் சென்றனர். பாக்கி செலுத்த தவறிய, கடைகளை பூட்டினர். சில கடைகளுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

இந்நடவடிக்கையை அடுத்து நேற்று மட்டும் ஒரே நாளில் 15 லட்சம் ரூபாய் வசூலானது. பாக்கியை செலுத்திய கடைகள், மீண்டும் செயல்பட அனுமதிக்கப்பட்டன. மற்ற கடைகள், ஒரு வாரத்தில் பாக்கியை செலுத்த வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும், மார்ச் மாதத்திற்குள் அனைத்து வாடகை பாக்கியும் வசூலிக்கப்பட வேண்டும். இந்த ஆண்டு ஜனவரி மாதம் மட்டும் வசூலாக வேண்டிய வாடகையில், இதுவரை 45 சதவீதம் தான் வசூலாகி உள்ளது. எனவே "கெடுபிடி'யாக, வாடகை பாக்கியை வசூலிக்க மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

Last Updated on Thursday, 21 January 2010 07:33