Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மதுரை மாநகராட்சியுடன் இணைக்கலாமா? : திருப்பரங்குன்றம் நகராட்சி மக்கள் கருத்து

Print PDF

தினமலர் 25.01.2010

மதுரை மாநகராட்சியுடன் இணைக்கலாமா? : திருப்பரங்குன்றம் நகராட்சி மக்கள் கருத்து

சென்னையைச் சுற்றியுள்ள பல்வேறு நகராட்சிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளை இணைத்து, அம்மாநகராட்சியுடன் இணைக்க அரசு முடிவு செய்துள்ளது.

மதுரையைச் சுற்றியுள்ள உள்ளாட்சி அமைப்புகளையும் சேர்த்து அதே போல விரிவுபடுத்தும் திட்டம், பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது. மதுரை மாநகராட்சியுடன் இணைந்தால், நிதி ஒதுக்கீடு அதிகம் கிடைக்கும். பாதாள சாக்கடை, புதிய சாலை, தெரு விளக்குகள், குடிநீர், சுகாதாரம் போன்ற வசதிகள் கிடைக்கும். இது பற்றி, மாநகராட்சியுடன் இணையும் வாய்ப்புள்ள திருப்பரங்குன்றம் நகராட்சி மக்கள் கருத்து:

கே.கலைவாணி (கல்லூரி மாணவி): மாநகராட்சியுடன் இணைந்தால் குடிநீர் உள்பட அனைத்து வசதிகளும் கிடைக்கும். ஏழை, நடுத்தர மக்களை பாதிக்காத வகையில் இத்திட்டம் இருக்க வேண்டும்.

எஸ்.சண்முகம் (பேராசிரியர்): பெரிய நகரங்களை விரிவாக்குவதைவிட சிறிய ஊர்களின் வளர்ச்சியில் கவனம் செலுத்தலாம். மாநகராட்சியாகி விட்டால் பணிகள் நடக்காது, திணிக்கப்படும்.

எம்.கருப்பசாமி (விரிவுரையாளர்): மாநகராட்சியுடன் இணைந்தால் அதிகாரிகளை அணுகுவது கடினம். முக்கியமாக சுகாதாரத்துறை செயல்இழந்துவிடும்.

எஸ்.விக்னேஷ் (கல்லூரி மாணவர்): வரிகள் அதிகரிக்கும். திருப்பரங் குன்றத் தில் ஏழை, நடுத்தர மக்கள் அதிகம் உள்ளனர். அவர்கள் பாதிக்கப்படுவர்.

கு.பால்பாண்டியன் (வர்த்தக சங்க தலைவர்): மாநகராட்சியுடன் இணைத்தால் அதிக சலுகைகள் பெறலாம். பாதாள சாக்கடை, குடிநீர், நவீன கழிப்பறைகள் வசதிகள் கிடைக்கும். தற்போது இட நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் நூலகத்திற்கு வசதியாக கட்டடம் கிடைக்கும். வங்கிகள் திருப்பரங்குன்றத்திற்கு பதிலாக திருநகரில் செயல்படுகின்றன. மாநகராட்சியாகிவிட்டால், அவை திருப்பரங்குன்றத்திற்கு வரும்.

ஜி.ரவி (வக்கீல்): தற்போதுவரை திருப்பரங்குன்றம் நகராட்சி பகுதிகள் போதிய வளர்ச்சியடையவில்லை. மாநகராட்சியுடன் இணைந்துவிட்டால், உலக வங்கி மற்றும் மத்திய அரசு நிதிகள் அதிகம் கிடைக்கும். ஊர் வளர்ச்சிபெறும். நிலங்களின் விலை உயரும். மக்களை பாதிக்காத வகையில், மாநகராட்சியுடன் இணைவது நல்லது.

ஆர்.ராமதாஸ் (பெட்டிக்கடை): நகராட்சியாகவே இருப்பது நல்லது. மாநகராட்சியானால், வீட்டுவரி உட்பட அனைத்து வரிகளும் அதிகரிக்கும். மாநகராட்சி பகுதிகளிலேயே தற்போது பணிகள் சரிவர நடப்பது இல்லை. அதன் எல்லை விரிவடைந்தால், மாநகராட்சி பகுதிகள் மட்டுமின்றி விரிவாக்க பகுதிகளிலும் பணிகள் நடக்காமல், நிர்வாகம் முடங்கிப்போகும்.

செ.ராமமூர்த்தி (விவசாயி): நகராட்சி என்ற அந்தஸ்தை விடுத்து பேராட்சியாக மாற்றினால்கூட நல்லதுதான். திருப்பரங் குன்றம் அதிக அளவு விவசாயிகள் நிறைந்த பகுதி. தற்போது எங்களுக்கு அரசின் உழவர் அட்டை கிடைக்கவில்லை. அதனால் நாங்கள் துன்புறும்போது எங்களுக்கு கிடைக்க வேண்டிய அல்லது அரசு எங்களுக்கு கொடுக்கும் உதவிகளை இப்பகுதியினர் பெற முடியவில்லை. மாநகராட்சியாகிவிட்டால், இங்குள்ள அனைத்து நிலங்களிலும் வீடுகள் கட்டப்பட்டுவிடும். விவசாயம் முற்றிலும் பாதிப்படையும். தற்போதுள்ள நிலையில் ஒரு போக விவசாயத்திற்கு போதுமான தண்ணீரை பெற்றுத்தர அதிகாரிகள் முன்வருவதில்லை. மாநகராட்சி ஆகிவிட்டால், அதிகாரிகள் என்ன நடவடிக்கை எடுத்துவிடுவார்கள்?

.வாசுகி(குடும்பத்தலைவி): தற்போது தெருக்களில் உள்ள குறைகளை இந்த வார்டில் குடியிருக்கும் கவுன்சிலரிடம் தெரிவிக்கிறோம். மாநகராட்சியாகிவிட்டால், கவுன்சிலரை கண்டுபிடிப்பதே அபூர்வமாகிவிடும். மண்டலங்களாகி
விடும். அலைச்சல் அதிகரிக்கும்.

எஸ்.சீனிவாசன் (வர்த்தகர்): மாநகராட்சியானால் அனைத்து வரிகளும் மூன்றுமடங்காக உயரும். அதற்கேற்ற வருமானம் அதிகரிக்காது. நடுத்தர மக்கள் அதிகம் பாதிக்கப்படுவோம். அனைத்திலும் லஞ்சம் அதிகரிக்கும்.

எம்.முத்துராமலிங்கம் (மார்க்கெட் சங்க தலைவர்): அனைத்து காய்களின் விலைகளும் உயரும். ஏலத்தில் போட்டிகள் அதிகரித்து, தொகை அதிகரிக்கும். ஏலம் எடுத்தவர்கள் வாடகையை உயர்த்துவர். வியாபாரிகள் அந்த சுமையை பொதுமக்களிடம்தான் திணிக்க வேண்டிவரும்.

Last Updated on Monday, 25 January 2010 06:32