Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பெங்களூர் மாநகராட்சித் தேர்தல் தமிழ் அமைப்புகள் நாளை ஆலோசனை

Print PDF

தினமணி 25.01.2010

பெங்களூர் மாநகராட்சித் தேர்தல் தமிழ் அமைப்புகள் நாளை ஆலோசனை

பெங்களூர், ஜன.24: பெங்களூர் மாநகராட்சித் தேர்தலில் தமிழர்களின் நிலை என்ன என்பது குறித்து கர்நாடகத் தமிழ் அமைப்புகளின் கலந்துரையாடலுக்கு செவ்வாய்க்கிழமை ஏற்பாடு செய்துள்ளது கர்நாடகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு.

இதுகுறித்து குழுவைச் சேர்ந்த தேவதாசு வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தில் இருந்து பெங்களூர் பிரிக்கப்பட்ட பிறகு இங்கு பல்லாண்டு காலமாக வசித்து வரும் தமிழர்களுக்கு அரசியல், சமூக மற்றும் கல்வி, வாழ்வுரிமை போன்றவை மறுக்கப்பட்டு வருகிறது. தமிழர்கள் அதிகம் வசிக்கும் பெரும்பாலான பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்துதரப்படவில்லை.

எந்தவோர் அரசியல் கட்சியும் தேர்தல்களில் தமிழர்களை வேட்பாளர்களாக அறிவிக்கவில்லை. தமிழகத்தில் பல பகுதிகளில் தெலுங்கு, மலையாளம், கன்னடம், உருது போன்றவை துணை ஆட்சி மொழிகளாக உள்ளன. அங்கு மொழிச் சிறுபான்மையினர் முழு உரிமையோடு வாழ்கிறார்கள்.

ஆனால் கர்நாடகத்தில் வசிக்கும் ஒரு கோடிக்கும் அதிகமான தமிழர்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகிறார்கள். கடந்த மக்களவைத் தேர்தலில் கர்நாடக தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஆணித்தரமான முடிவெடுத்ததால்தான் காங்கிரஸ் தோற்கடிக்கப்பட்டு பாஜக ஆட்சி அமைந்தது. அல்சூரில் 18 ஆண்டுகளாக மூடிக் கிடந்த திருவள்ளுவர் சிலையைத் திறக்க முடிந்தது.

எனவே, வரும் மாநகராட்சித் தேர்தலில் கட்சிக்கு அப்பாற்பட்டு வட்டார வாரியாக தகுதி, வெற்றி வாய்ப்புள்ள தமிழர்களை ஆதரிப்பது என்பது குறித்து விவாதிக்க கலந்துரையாடல் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. சிவாஜி நகர் பஸ் நிலையம் எதிரே உள்ள ராம்பிரசாத் ஹோட்டலில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு இந்தக் கூட்டம் துவங்குகிறது. இதில் அனைத்து தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் கலந்துகொள்ள வேண்டும். ஜெர்மனி தமிழர் பழ.விஸ்வநாதன், . நகைமுகன், முருகேசன், சென்னையைச் சேர்ந்த பாண்டியன் ஆகியோரை சிறப்பு அழைப்பாளர்களாக கூட்டத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

Last Updated on Monday, 25 January 2010 07:12