Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ரூ.2.5 கோடி மதிப்பில் பூங்கா அமைக்கும் பணி நிறுத்தம்! கோவில் நிலத்தை ஒதுக்க எதிர்ப்பு

Print PDF

தினமலர் 29.01.2010

ரூ.2.5 கோடி மதிப்பில் பூங்கா அமைக்கும் பணி நிறுத்தம்! கோவில் நிலத்தை ஒதுக்க எதிர்ப்பு

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் நகரில் இரண்டரை கோடி ரூபாய் மதிப்பில் பூங்கா அமைக்கும் பணி துவக்கப் பட்ட வேகத்தில் நிறுத்தப் பட்டது. கோவில் நிலத்தை நகராட்சிக்கு ஒதுக்குவதை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டதால், பணி நிறுத்தப் பட்டுள்ளது.அண்ணாதுரை நூற்றாண்டு விழாவையொட்டி, காஞ்சிபுரத்தில் பல்வேறு திட்டப் பணிகளை மேற்கொள்ள தமிழக முதல்வர் 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளார். இந்நிதியில், நகராட்சி சார்பில் காஞ்சிபுரம் குரு கோவில் அருகே அமைந்துள்ள கச்சபேஸ்வரர் நகர் பகுதியில், 5 ஏக்கர் பரப்பளவில் மூன்று கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில், நவீன பூங்கா அமைக்கப்பட உள்ளது.பூங்கா அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடம் கச்சபேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமானது. அவ்விடத்தில் எவ்வித கட்டுமானப் பணிகளும் மேற் கொள்ளக் கூடாது. நிலத்திற்கு பட்டா வாங்கக் கூடாது. எப்போதும் நிலத்திற்கு உரிமை கோரக்கூடாது.கோவில் நிர்வாகம் எப்போது கேட்டாலும் நிலத்தை ஒப்படைத்து விட வேண்டும் உட்பட பல்வேறு நிபந்தனைகளுடன் கோவில் நிலத்தில் பூங்கா அமைத்து பராமரிக்க இந்து சமய அறநிலையத்துறை நகராட்சிக்கு அனுமதி அளித்தது.அதைத் தொடர்ந்து, நகராட்சி நிர்வாகம் சார்பில் பூங்கா அமைய உள்ள இடத்தை சுத்தம் செய்யும் பணி துவக்கப்பட்டது. இயந்திரங்கள் உதவியுடன் 5 ஏக்கர் பரப்பளவு உள்ள இடத்திலிருந்த முட்செடிகள் அகற்றப் பட்டன. தரை சமன்படுத்தப் பட்டது.இந்நிலையில், காஞ்சிபுரம் நகர செங்குந்த மகாஜன சங்கம் நிர்வாகிகள் கோவில் நிலத்தை எவ்வித வாடகையும் வசூலிக்காமல் இலவசமாக நகராட்சிக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்து அறநிலையத்துறை நிலத்தை வழங்குவதை தடுக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

கோவில் செயல் அலுவலர் ரமணி, இடம் தொடர்பாக வழக்கு உள்ளதால் மேற்கொண்டு பூங்காப் பணிகளை தற்போது செய்ய வேண்டாம் என நகராட்சிக்கு கடிதம் அனுப்பினார். அதன்பேரில் தற்போது பூங்கா பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இது குறித்து, தி.மு.., கவுன்சிலர் ஆறுமுகம் நகராட்சிக் கூட்டத்தில் கேள்வி எழுப்பினார். ஆனால், கமிஷனர் முறையாக பதில் அளிக்கவில்லை.இது குறித்து, சங்க நிர்வாகிகள் கூறும்போது, பூங்கா அமைக்க நிலத்தை நகராட்சிக்கு கொடுக்க வேண்டாம் எனக் கூறவில்லை.சம்மந்தப்பட்ட 5 ஏக்கர் நிலத்தின் தற்போதைய மதிப்பு 20 கோடி ரூபாய். 2001ம் ஆண்டு அப்போதைய கலெக்டர் சமூக நலத்துறைக்கு அவ்விடத்தை ஏழு கோடி ரூபாய்க்கு கேட்டுள்ளார். எனவே, இடத்தை இலவசமாக நகராட்சிக்கு கொடுக்காமல் குறிப்பிட்ட வாடகை நிர்ணயித்து விட்டு, கொடுக்கலாம். இதன் மூலம் கோவிலுக்கும் வருவாய் கிடைக்கும்.இது தொடர்பாக, அதிகாரிகள் தகுந்த பதில் அளிக்காததால் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளோம் என்றனர்.நகராட்சி கமிஷனர் மகாலட்சுமிதேவி கூறும்போது, நிலம் தொடர்பான வழக்கிற் கும், நகராட்சிக்கும் தொடர் பில்லை.கோவில் நிர்வாகம் வழக்கை சந்திக்கும். நிலம் நகராட்சிக்கு வழங்கப்பட்டால் நகராட்சி சார்பில் பணி துவக்கப்படும். தற்போது வழக்கு உள்ளதால் பூங்கா பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன, என்றார்.