Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாமன்ற உறுப்பினர் நிதி சரிவர பயன்படுத்தப்படுவதில்லை

Print PDF

தினமணி 29.01.2010

மாமன்ற உறுப்பினர் நிதி சரிவர பயன்படுத்தப்படுவதில்லை

சென்னை, ஜன. 28: மாமன்ற உறுப்பினர் நிதி சரவர பயன்படுத்தப்படுவதில்லை என்பது உள்ளிட்ட பல்வேறு குறைகளை மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.

கவுன்சில் எதிர்க் கட்சித் தலைவர் சைதை ரவி, கவுன்சிலர் ஆம்ஸ்டிராங் ஆகியோர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியது:

சைதை ரவி: மாநகராட்சிக்கு வருவாயை அதிகப்படுத்தும் வகையில் தனியார் பள்ளிகளுக்கு சொத்து வரி விதிக்கவேண்டும். சென்னையில் செயல்பட்டு வரும் பொழுதுபோக்கு கிளப்புகளுக்கும் வரி விதிக்கவேண்டும்

கவுன்சிலர்களின் மேம்பாட்டு நிதி சரிவர செயல்படுத்தப்படுவதில்லை. ஒவ்வொரு மண்டலத்திலும் ஆய்வு மேற்கொண்டு, நிதியை சரிவர பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். செல்பேசி கோபுரங்களுக்கு வரி விதிக்கப்படும் என்று ஏற்கெனவே கூறப்பட்டது. ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என்றார் சைதை ரவி.

இதுபோல் கவுன்சிலர் நிதி சரிவர பயன்படுத்தாதது குறித்து கவுன்சிலர் ஆம்ஸ்டிராங்கும் கூறினார்.

கவுன்சிலர் கிருபாகரன்: என்னுடைய வார்டில் (11) 15}வது வட்டத்தில் உள்ள மாநகராட்சிப் பள்ளியில் 600 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் போதிய அளவில் ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை.

போர்க்கால அடிப்படையில் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவேண்டும் என்றார்.

கவுன்சிலர் கலாவதி: மாநகராட்சி பள்ளிகள் பலவற்றில் கழிவறைகள் சரிவர சுத்தம் செய்யப்படுவதில்லை. இதனால் பெரும் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. ஒப்பந்ததாரர்கள் மூலம் மேற்கொள்ளப்படும் இந்த பணியை, இனி மாநகராட்சியே எடுத்துக் கொண்டு நேரடியாக பராமரிக்க வேண்டும் என்றார்.

கவுன்சிலர் மீனா: மூலக்கொத்தளம் மயான பூமி மதில் சுவரை, உடைத்து அப்பகுதி மக்கள் ஆக்கிரமித்து வருகின்றனர். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு மேயர் அளித்த பதில்கள்:

தனியார் பள்ளிகளுக்கு சொத்து வரி விலக்கு அளித்து தமிழக அரசு கடந்த 2003}ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த அரசாணையை திரும்பப்பெற தமிழக அரசுதான் நடவடிக்கை எடுக்கவேண்டும். இதற்கான கோரிக்கை தமிழக அரசிடம் வைக்கப்பட்டு, தனியார் பள்ளிகளுக்கு வரி விதிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னையில் அமைக்கப்பட்டிருக்கும் செல்பேசி கோபுரங்களுக்கு வரி விதிப்பதற்கான நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சென்னையில் 2,217 செல்பேசி கோபுரங்கள் உள்ளன என்று கண்டறியப்பட்டுள்ளன. இவற்றுக்கு மார்ச் மாத இறுதிக்குள், முதல் அரையாண்டு வரி வசூலிக்கப்படும்.

மாமன்ற உறுப்பினர்கள் நிதி சரிவர செயல்படுத்தப்படவில்லை என்று குற்றச்சாட்டு கூறப்படுகிறது. இதற்காக மண்டல வாரியாக ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு, நிதியை சரிவர பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.