Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மதுரை மாநகராட்சியுடன் இணைக்கலாமா? : அவனியாபுரம் நகராட்சி மக்கள் கருத்து

Print PDF

தினமலர் 01.02.2010

மதுரை மாநகராட்சியுடன் இணைக்கலாமா? : அவனியாபுரம் நகராட்சி மக்கள் கருத்து

சென்னையைச் சுற்றியுள்ள பல்வேறு நகராட்சிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளை இணைத்து, அம்மாநகராட்சியுடன் இணைக்க அரசு முடிவு செய்துள்ளது. மதுரையைச் சுற்றியுள்ள உள்ளாட்சி அமைப்புகளையும் சேர்த்து அதே போல விரிவுபடுத்தும் திட்டம், பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது. மதுரை மாநகராட்சியுடன் இணைந்தால், நிதி ஒதுக்கீடு அதிகம் கிடைக்கும். பாதாள சாக்கடை, புதிய சாலை, தெரு விளக்குகள், குடிநீர், சுகாதாரம் போன்ற வசதிகள் கிடைக்கும். இது பற்றி, மாநகராட்சியுடன் இணையும் வாய்ப்புள்ள அவனியாபுரம் நகராட்சி மக்கள் கருத்து:எம்.ஜீவானந்தம் (தனியார் நிறுவன மேலாளர்): கொசுத்தொல்லை அவனியாபுரத்தில் அதிகம். காய்ச்சல் போன்ற தொற்றுநோய்கள் பரவுகின்றன. இதை ஒழிக்க பாதாள சாக்கடை திட்டம் அவசியம். மாநகராட்சியுடன் இணைத்தால் தான் அது சாத்தியம். நலதிட்ட உதவிகள், தரமான ரோடுகள் தொய்வின்றி கிடைக்கும்.

என்.பால்பாண்டி (சட்டக்கல்லூரி மாணவர்): நகராட்சி பகுதிகளில் அடிப்படை வசதிகள் குறைவாக உள்ளன. குடிநீர் வினியோகம் சீராக இல்லை. மத்திய அரசின் பல திட்டங்கள், வார்டுகளுக்கு கிடைக்கவில்லை. அடிப்படை வசதிகள் மக்களிடம் முழுமையாக சேரவில்லை. உடனே மாநகராட்சியுடன் இணைக்கவேண்டும்.

எஸ்.பட்டாபிராமன் (பிராமணர் சங்க மாவட்ட ஆலோசகர்): அவனியாபுரத்தை பொறுத்தளவு, அதை இரு ஊராட்சிகளாக குறைக்க வேண்டும். இங்கு விவசாயம், மாடு வளர்ப்பு முக்கிய தொழிலாக உள்ளது. மாநகராட்சியாக மாறுவதால், வரிச் சுமை தான் கூடும்.

எஸ்.சிவக்குமார் ("பியூப்பிள் பார் அனிமல்ஸ்' செயலாளர்): இது வரவேற்க வேண்டிய விஷயம். மாநகராட்சிக்கு கிடைக்கும் மத்திய, மாநில அரசு திட்டங்கள் உடனடியாக நம்மை வந்தடையும். தெருநாய்களுக்கு கருத்தடை மற்றும் வெறிநோய் தடுப்பு ஊசி போடும் திட்டத்தை சில மாநகராட்சிகள் சரிவர செய்தன. இந்த நகராட்சியில் அதற்கான இடம் இதுவரை ஒதுக்கவில்லை. மாநகராட்சியாக மாறினால், மனிதர்கள் மற்றும் பிராணிகள் நலன் காக்கலாம்.

ஆர்.தாமோதரன் (வில்லாபுரம்-அவனியாபுரம் வட்டார தொழில் வர்த்தக சங்க துணைதலைவர்): நகராட்சியிடம் பலமுறை பலரிடம் கையெழுத்து வாங்கி கொடுத்தால் தான் சாக்கடை தள்ளும் பணியை நடக்கிறது. போதுமான ஆட்கள் இல்லை. வில்லாபுரத்திலிருந்து அவனியாபுரம் செல்லும் ரோடை ஒருவழிப் பாதையாக மாற்றவேண்டும். அதற்கு வில்லாபுரம் ஹவுசிங்போர்டு முடிவில் உள்ள ரோடை பயன்படுத்தலாம். மாநகராட்சியானால் நகர் போலீஸ் கட்டுப்பாட்டிற்கு அவனியாபுரம் வரும். போலீஸ் எண்ணிக்கை உயரும், போக்குவரத்துபிரிவு தனியாக செயல்பட்டு, விபத்துகளை தடுக்கலாம்.

பிரபு (டிராவல்ஸ் உரிமையாளர்): குடிநீரில் சாக்கடை கலப்பு, கலங்கலான குடிநீர் போன்றவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். பாதாள சாக்கடைதிட்டம் நிறைவேறினால், சுகாதாரம் சீராகும். தரமான ரோடுகள் கிடைக்கும். பிறப்பு, இறப்பு சான்றிதழுக்காக பலநாட்கள் காத்திருக்க வேண்டியதில்லை.

பன்னீர் செல்வம் பெரியசாமிநகர் (திருப்பதிநகர் நலசங்க செயலாளர்): மாநகராட்சியாக மாறினால் தெருவிளக்கு
பராமரிப்பு சீராகும். இங்குள்ள உயர்நிலை பள்ளி பல ஆண்டுகளாக தரம் உயராமல் உள்ளது. மாநகராட்சி வசம் சென்றால் இது மேல்நிலை பள்ளியாக மாறும்.

ஜி.ஆறுமுகம் (டெய்லர்): குப்பை லாரிகள் "கவர்' போடாமல் செல்வதால், ரோட்டில் பைக் ஓட்ட முடியவில்லை. துர்நாற்றம் வீசுகிறது. குழந்தைகளை பள்ளிக்கு பைக்கில் அழைத்து செல்லும்போது கவனமாக செல்லவேண்டியுள்ளது. மாநகராட்சியாக மாறினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் போக்குவரத்து அவனியாபுரத்தில் இருக்கும். குப்பை லாரிகள் அதிகாரிகளின் கண்காணிப்பில் இருக்கும்போது பிரச்னைகள் தீரும்.

யு.பாண்டி(ஏட்டு, ஓய்வு): மாநகராட்சியில் ஏற்கனவே பல லட்சம் ரூபாய் முறைகேடு என செய்தி வந்தது. அத்துடன் நல்ல வருமானம் வரும் அவனியாபுரம் நகராட்சியை சேர்த்தால் எப்படி? நகராட்சி நிர்வாகத்தினருக்கு பயிற்சிகள் கொடுத்து, சீர்படுத்தினால் நன்றாக இருக்கும். மாநகராட்சியுடன் இணைப்பு தேவை இல்லை.

Last Updated on Monday, 01 February 2010 06:27