Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரியை தரம் உயர்த்த நகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம்

Print PDF

தினமலர் 02.02.2010

மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரியை தரம் உயர்த்த நகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம்

மன்னார்குடி:மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரியை மாவட்ட ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்த நகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மன்னார்குடி நகராட்சிக் கூட்டம் தலைவர் கார்த்திகா உத்தமன் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் தமிழரசி, ஆணையர் மதிவாணன், பொறியாளர் முருகானந்தம் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், ராஜகோபாலசுவாமி கோயிலில் கும்பாபிஷேக ஏற்பாடுகளைச் செய்வதற்குத் தமிழக அரசிடம் மானியமாக 10 கோடி ரூபாய் கோருவது, நகரில் உள்ள டெப்போ சாலை, நீதிமன்றம் செல்லும் சாலை, உப்புக்காரத்தெரு, சர்ச் அக்ரஹாரம், கே.கே. நகர் சாலை உட்பட சாலைகளை சீரமைக்கப்பதற்காக 80 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்வது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் உறுப்பினர்களிடையே நடந்த விவாதம்;கண்ணதாசன்: கோயில் நிலங்களில் பட்டா இல்லாமல் குடிசை போட்டு வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கப்படுமா?

வீரகுமார்: இலவச வீட்டு மனைப்பட்டா நிச்சயம் கொடுக்கப்படும்.
கலைவாணன்: அசேஷம் பகுதி மெயின் ரோட்டில் செப்டிக் டேங்க் நிரம்பி சாலையில் கழிவுநீர் செல்கிறது.

வீரகுமார்: எனது வார்டில் உள்ள மீன் மார்க்கெட் புதிதாகக் கட்டப்படுமா?

கலைவாணன்: குடிநீர் வரி விதிப்பின் மூலம் 24 லட்சம் ரூபாய் வரப்பெற்றுள்ளது. அந்த நிதியை வளர்ச்சி பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும்.

ஆனந்தராஜ்: என்து வார்டில் உள்ள நல்லூரான் குட்டை தூர்வாரி சீரமைக்கப்படுமா?

கலைவாணன்: எனது வார்டில் பலர் குடிநீர் இணைப்பு பெற விரும்புகின்றனர். ஆனால் அப்பகுதியில் பைப்லைன் போடப்படாமல் உள்ளது.

ஆணையர்: ஒரு தெருவில் 50 வீடுகள் இருந்தால் குறைந்தபட்சம் 5 வீடுகளைச் சேர்ந்தவர்களை குடிநீர் இணைப்பு கேட்டு பணம் கட்டச் சொல்லுங்கள். பைப் லைன் அமைக்க ஏற்பாடு செய்கிறோம்.

வீரகுமார்: நகரில் கொசு மருந்து அடிப்பதைத் தீவிரப்படுத்த வேண்டும்.

வசந்தி: எனது வார்டில் கொசு மருந்து அடிப்பதே இல்லை.

கோபி: வீதிகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து பட்டியில் அடைக்க வேண்டும். உரிமையாளர்கள் வந்து கேட்டால் அபராதம் வசூலித்து விட்டு திரும்ப ஒப்படைக்கலாம்.

ஆனந்தராஜ்: குடிநீர்த் திட்டப்பணிகளை ஆய்வு செய்ய புதிதாக வாங்கப்பட்டுள்ள வாகனத்திற்கு உதிரி பாகங்கள் வாங்குவதற்கு 50 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்ய வேண்டுமா?

ஆணையர்: உத்தேச செலவினம் என்று தான் தீர்மானம் வைக்கப்பட்டுள்ளது. பொருள் வாங்கும் போது கவனமாகப் பார்த்துக் கொள்கிறோம்.

கோபி: பஸ் ஸ்டாண்ட் ரோடு சரியாக இல்லை. கீழ்ப்பாலத்தில் ஆக்கிரமிப்புகள் அதிகம்உள்ளது. இவ்வாறு விவாதம் நடந்தது. மேலும், மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரியை மாவட்ட ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்தி அறிவிக்க வேண்டும் என்று கவுன்சிலர் சந்திரசேகர் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Last Updated on Tuesday, 02 February 2010 06:29