Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

செம்மொழி மாநாட்டுக்கு ரூ.100 கோடிக்கு பணிகள் : கோவை மாநகராட்சி கமிஷனர் புதிய தகவல்

Print PDF
தினமலர் 03.02.2010

செம்மொழி மாநாட்டுக்கு ரூ.100 கோடிக்கு பணிகள் : கோவை மாநகராட்சி கமிஷனர் புதிய தகவல்

கோவை : உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்கு, 100 கோடி ரூபாய் மதிப்பில், கோவை பகுதியில் பணிகள் மேற்கொள்ள இருப்பதாக, மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கை விபரம்: கோவையில் நடைபெறவுள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்காக, மாநகராட்சியில் மேற்கொள்ள உள்ள பணிகளுக்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்டுள்ள விபரங்களின் அடிப்படையில் தகவல் வெளியாகியுள்ளது. இந்த மாநாட்டுக்காக, அரசிடமிருந்து நிதி பெற்று, மாநகராட்சி மூலமாக பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. கோவை மாநகராட்சியால், ஏழு கோடியே 24 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிய பூங்காக்களும், ஆறு கோடியே 42 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் வடிகால்களுடன் கூடிய நடைபாதையும், இரண்டு கோடியே 35 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் சாலை சந்திப்புகளும் அமைக்கப்பட உள்ளன.

இந்த பணிகள் அனைத்தும், அரசு நிதி ஒதுக்கீட்டின் மூலமாக செயல்படுத்தும் பணிகள் இல்லை. மாநகராட்சியின் நிதியிலிருந்தே செயல்படுத்தப்பட உள்ளன. மாநகராட்சி செய்யும் இந்த பணிகள், ஜன.18 அன்று மேயரால் தொடங்கி வைக்கப்பட்டு, நடந்து வருகின்றன. "அரசு நிதியில்லாமல் மாநகராட்சியின் நிதியில் பணியை மேற்கொள்ள ஆய்வு நடக்கிறது' என்று கோவை மாநகராட்சிப் பொறியாளர் கூறியிருப்பது, அரசு அளிக்கும் நிதி தவிர, கூடுதலாக மாநகராட்சியின் சொந்த நிதியிலிருந்து செலவு செய்து, பணிகள் மேற்கொள்வதையே குறிக்கிறது. மாநகராட்சி மேற்கொள்ள வேண்டிய பல்வேறு பணிகளுக்காக அரசிடமிருந்து நிதி கேட்டு மாநகராட்சி நிர்வாகம் கோரியதற்கு, நிதி வழங்குவதற்கான உயர் மட்டக்குழுவும் ஒப்புதல் அளித்துள்ளது என்பதே உண்மை நிலையாகும். நிதி ஒதுக்கீடு கோரிய இரு வாரத்துக்குள் இந்த ஒப்புதல் கிடைத்துள்ளது.

இந்த சிறு இடைவெளியில் பெற்ற தகவல்களின் அடிப்படையில், மிகுந்த காலதாமதம் ஏற்படுத்தப்பட்டுள்ளது போன்ற தகவல் வெளியாகியுள்ளது. செம்மொழி மாநாட்டுக்காக, மாநகராட்சியின் சொந்த நிதியிலிருந்து 24 கோடியே 82 லட்ச ரூபாய்க்கு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. அரசிடமிருந்து 33 கோடியே 34 லட்ச ரூபாய்க்கும் நிதி பெற்றும், பொதுத்துறை, தனியார் துறை பங்களிப்புடன் 48 கோடி ரூபாய்க்குமாகச் சேர்த்து மொத்தம் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பில், கோவை மாநகராட்சி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகள் பயனடையும் வகையில் பணிகள் நடக்கவுள்ளன.

இவற்றைத் தவிர்த்து, 60 கோடி ரூபாய்க்கு நெடுஞ்சாலைத்துறைக்கும், 55 கோடி ரூபாய்க்கு மின் வாரியத்துக்கும், ஒரு கோடியே 41 லட்ச ரூபாய்க்கு ஊராட்சிப் பகுதிகளுக்கும், 2 கோடியே 56 லட்ச ரூபாய்க்கு பேரூராட்சிப் பகுதிகளுக்கும் நிதி அளித்து பணிகள், மாநகராட்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஓரிரு வாரத்தில் தொடங்கப்பட உள்ளன. இவ்வாறு, அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கமிஷனரா? கலெக்டரா? செம்மொழி மாநாட்டுக்காக இதுவரை ஒரு பைசா கூட நிதி வரவில்லை என்ற தகவலை மறுத்து அறிக்கை கொடுத்துள்ள, கோவை மாநகராட்சி கமிஷனர், தனது அறிக்கையில் எங்குமே "இவ்வளவு கோடி நிதி வந்துள்ளது' என்று கூறவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. நெடுஞ்சாலைத்துறைக்கும், மின் வாரியத்துக்கும், ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கும் நிதி ஒதுக்கப்பட்டிருப்பது குறித்து அவர் தகவல் கூறியிருப்பதன் மூலம், கலெக்டருக்குரிய அதிகாரத்தை கமிஷனராகவே எடுத்துக் கொண்டதாகவே தெரிகிறது
Last Updated on Wednesday, 03 February 2010 07:33