Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கோடைகாலம் வரும் பின்னே... பிளாஸ்டிக் குடம் வரும் முன்னே!

Print PDF

தினமலர் 09.02.2010

கோடைகாலம் வரும் பின்னே... பிளாஸ்டிக் குடம் வரும் முன்னே!

ஈரோடு: கோடை காலம் துவங்குவதற்கு முன்பே ஈரோட்டில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், பிளாஸ்டிக் குடம் விற்பனை சூடுபிடித்துள்ளது. கோடையின் போது, நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை ஈடு செய்யும் வகையில் ஒவ்வொரு வீட்டிலும் பிளாஸ்டிக் குடிநீர் தொட்டி, சிமென்ட் தொட்டி மற்றும் பெரிய டிரம்களில் குடிநீரை நிரப்பி வைப்பர். வசதியில்லாதவர்கள் காலி பிளாஸ்டிக் குடங்கள், வாளிகளில் தண்ணீர் பிடித்து வைப்பர். குடம் விற்பனையும் விறுவிறுப்பாக நடக்கும். நடப்பாண்டு ஈரோட்டில் தற்போதே பிளாஸ்டிக் குடம் விற்பனை சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது.

மேட்டூர் அணையில் டெல்டா பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டதால், ஒரு வாரமாக ஈரோட்டில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. சென்ற வாரம் முன் குடிநீர் ஆதாரத்துக்காக மேட்டூர் அணையிலிருந்து 2,000 கனஅடி நீர் திறந்து விடப்பட்டது. இதனால், குடிநீர் விநியோகம் செய்ய திணறிவந்த உள்ளாட்சி அமைப்புகள் நிம்மதி பெருமூச்சுவிட்டுள்ளன. குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் நீர் திறந்துவிடப்பட்டாலும், உள்ளாட்சி அமைப்புகள் வினியோகம் செய்யும் குடிநீரில் துர்நாற்றம் வீசுவதுடன், கலர் கலராக குடிநீர் உள்ளது. சமீபத்தில் ஈரோடு மாநகராட்சி சார்பில் வினியோகிக்கப்பட்ட குடிநீர் கழிவுநீர் கலந்து வந்ததாக கவுன்சிலர் ராதாமணி பாரதி சென்ற வாரம் கலெக்டர் அலுவலகத்தில் புகார் தெரிவித்தார். குறிப்பாக கருங்கல்பாளையம் பகுதியில் நான்கு நாட்களுக்கும் மேலாக குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

கோடைக்கு முன்னரே ஈரோட்டில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதால், தண்ணீரை சேமித்து வைப்பதில் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால், பிளாஸ்டிக் குடம் விற்பனை அதிகரித்துள்ளது. தவிர, தண்ணீர் டேங்குகள், தொட்டிகள் விற்பனை சுறுசுறுப்படைந்துள்ளது. பிளாஸ்டிக் குடங்கள் 40 ரூபாய் முதல் 80 ரூபாய் வரையான விலையில் விற்கப்படுகின்றன.

Last Updated on Tuesday, 09 February 2010 10:30