Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சென்னையில் பிறக்கும் குழந்தைகள் பெயரில் வீடு தோறும் மரக்கன்றுகள்: மேயர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்

Print PDF

மாலை மலர் 12.02.2010

சென்னையில் பிறக்கும் குழந்தைகள் பெயரில் வீடு தோறும் மரக்கன்றுகள்: மேயர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்

சென்னையில் பிறக்கும்      குழந்தைகள் பெயரில்      வீடு தோறும் மரக்கன்றுகள்:       மேயர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார் சென்னை, பிப். 12-

சென்னை நகரை பசுமையாக்க மரம் நடும் திட்டத்தை புதிய முறையில் மாநகராட்சி அறிமுகப்படுத்தி உள்ளது. பிறக்கும் குழந்தைகள் பெயரில் ஒவ்வொருவரும் மரம் நடும் இந்த புதிய திட்டத்தை கடந்த செப்டம்பர் 15-ந் தேதி முதல்- அமைச்சர் கருணாநிதி தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்தின்கீழ் கடந்த 3 மாதங்களில் சென்னையில் பிறந்த 41 ஆயிரத்து 471 குழந்தைகள் பெயரில் மரக் கன்றுகள் நடும் விழா ராஜா அண்ணாமலைபுரத்தில் இன்று நடந்தது. அங்குள்ள விளையாட்டு திடலில் 20 குழந்தைகள் பெயரில் மரக் கன்றுகளை மேயர் மா.சுப்பிரமணியன் நட்டார்.

ஒவ்வொரு குழந்தையின் பெற்றோரிடமும் ஒரு மரக்கன்று மற்றும் அந்த குழந்தையின் பெயர் பொறித்த வாழ்த்து சான்றிதழ் ஆகியவை வாங்கப்பட்டன. மரக்கன்றை பாதுகாப்பதற்கான இரும்பு வேலியும் வழங்கப்பட்டது. இந்த திட்டத்தை தொடங்கி வைத்து மேயர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:-

பிறந்த குழந்தைகள் பெயரில் மரக்கன்றுகள் நடும் திட்டம் கடந்த செப்டம்பர் 15-ந்தேதி தொடங்கியது. அன்று முதல் ஜனவரி 31-ந்தேதி வரை 41 ஆயிரத்து 471 குழந்தைகள் பிறந் துள்ளன. இந்த குழந்தைகள் பெயரில் மரக்கன்றுகள் இன்று நடப்படுகிறது.

இனிமேல் மாதந்தோறும் ஒவ்வொரு வட்டத்திலும் கவுன்சிலர்கள் தலைமையில் அந்த பகுதியில் பிறக்கும் குழந்தைகள் பெயரில் மரக்கன்றுகள் நடப்படும். மாநகராட்சியின் 200-க்கும் மேற்பட்ட விளையாட்டு திடல்கள், 3,500 கட்டிடங்கள், 1,500 பூங்காக்களில் மரங்கள் நடலாம். அவரவர் வீடுகள் முன்பு இடம் இருந்தால் மரக்கன்றுகள் நடலாம்.

சுற்றுச்சூழலை பாதுகாக்க மரம் நட வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கி யவர் முதல்- அமைச்சர் கலைஞர். அவர் தனது ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் அதிகாலை 3.30 மணிக்கு எழுந்து மரம் நட்டு தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

மரத்தை நாம் வளர்த்தால், மரம் நம்மை வளர்க்கும் என்பது கலைஞரின் பொன் மொழி. அந்த வாசகம் பொறிக்கப்பட்ட வாழ்த்து சான்றிதழ் மாநகராட்சி சார் பில் வழங்கப்படும். அதில் குழந்தையின் பெயர் மற்றும் பெற்றோரின் பெயரும் இடம் பெற்று இருக்கும்.

இன்று 41 ஆயிரத்து 471 மரங்கள் நடுகிறோம். சென்னையில் ஆண்டுக்கு 1 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறக்கின்றன. பிறக்கும் ஒவ்வொரு குழந்தையின் பெயரிலும் ஒரு மரம் நட்டால் உலகிலேயே மரங்கள் நிறைந்த மாநகரமாக சென்னை மாறும்.

முதல் -அமைச்சர் கலைஞர், துணை முதல்- அமைச்சர் மு..ஸ்டா லின் ஆகியோரின் வழிகாட்டு தல்படி பல நல்ல திட்டங்களை மாநகராட்சி நிறைவேற்றி வருகிறது.

எல்லா திட்டங்களையும் விட மனநிறைவையும் மகிழ்ச்சியையும் இந்த திட்டம் தந்துள்ளது. பொருட்களாக தருவதெல்லாம் விரைவில் மறந்து விடும். ஆனால் இன்று நடப்படும் மரங்கள் எதிர்காலத்தில் இந்த பூமியை பாதுகாக்கும்.

இவ்வாறு மேயர் மா.சுப்பிரமணியன் பேசினார்.

நிகழ்ச்சியில் கமிஷனர் ராஜேஷ் லக்கானி, துணை மேயர் சத்யபாமா, எஸ்.வி.சேகர் எம்.எல்.., ஆளுங்கட்சி தலைவர் ராமலிங்கம், எதிர்க்கட்சி தலைவர் சைதைரவி ஆகியோர் கலந்து கொண்டனர்.