Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மதுரையில் 50 இடங்களில் சாலையோர இரு சக்கர வாகனம் நிறுத்துமிடங்கள்

Print PDF

தினமணி 19.02.2010

மதுரையில் 50 இடங்களில் சாலையோர இரு சக்கர வாகனம் நிறுத்துமிடங்கள்

மதுரை, பிப். 18: மதுரை மாநகரில் இரு சக்கர வாகனங்கள் திருடுபோவதைத் தவிர்க்கும் விதமாக, 50 இடங்களில் புதிய சாலையோர நிறுத்துமிடங்களை அமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதற்கான இடங்கள் குறித்த விவரப் பட்டியலை, மாநகர் போக்குவரத்து போலீஸôர் மாநகராட்சி நிர்வாகத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மதுரை நகரில் தற்போது மாநகராட்சி சார்பில், பெரியார் பஸ் நிலையம், ஆரப்பாளையம், மாட்டுத்தாவணி ஆகிய பகுதிகளில் இரு சக்கர வாகனக் காப்பகங்களும், 32 இடங்களில் வாகன நிறுத்துமிடங்களும் செயல்பட்டு வருகின்றன.

மேலும், வணிகப் பகுதிகள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போக்குவரத்து போலீஸôர் சார்பில், இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கு எவ்விதக் கட்டணமும் இல்லை.

இதனால், நிறுத்தப்படும் வாகனங்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே, நகருக்குள் இரு சக்கர வாகனங்கள் திருட்டும் அதிகரித்து வருகின்றன. இத்திருட்டைக் கண்காணிக்க, போலீஸôரும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

அனுமதி பெறாத நிறுத்தங்கள்: இந்நிலையில், மாநகரில் பல இடங்களில் அரசியல் பிரமுகர்கள் பெயர்களைக் கூறிக்கொண்டு, மாநகராட்சி அனுமதி பெறாமலேயே வாகன நிறுத்தும் இடம் என பலகை வைத்து, சிலர் வசூலில் ஈடுபட்டு வருவதாகவும் புகார்கள் எழுந்தன.

இவற்றைத் தவிர்க்க, மாநகராட்சி நிர்வாகம், போக்குவரத்து போலீஸôர் இணைந்து மேற்கொண்ட ஆலோசனைக் கூட்டத்தில், சலுகைக் கட்டணத்தில் (ஒரு ரூபாய் கட்டணம்), மாநகர் பகுதியில் வாகன நிறுத்தங்கள் ஏற்படுத்தலாம் என முடிவு மேற்கொள்ளப்பட்டது.

இது தொடர்பாக, மாநகர் பகுதிகளில் கோரிப்பாளையம், அழகர்கோவில், டவுன்ஹால் சாலை, நேதாஜி சாலை, பர்மா பஜார், கீழமாசி வீதி, தெற்குமாசி வீதி உள்ளிட்ட 14 வீதிகளில் 50 இடங்களில் வாகன நிறுத்தங்கள் அமைக்கலாம் என, மாநகராட்சி நிர்வாகத்துக்கு போலீஸôர் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

இதையடுத்து, சாலையோர வாகன நிறுத்தங்கள் அமைக்க, மாநகராட்சி நிர்வாகம் தற்போது தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. வாகன நிறுத்தத்துக்கான டெண்டரும் விரைவில் கோரப்படும் எனத் தெரிகிறது.

இது குறித்து, உதவி கமிஷனர் ரா. பாஸ்கரன் (வருவாய்) கூறுகையில், இதுபோன்ற நடவடிக்கையால், மாநகராட்சிக்கு வருவாய் அதிகரிக்கும். அதேநேரத்தில் வாகன நிறுத்தும் இடங்களில் வாகனங்களின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும்.

இதனால் வாகனத் திருட்டுகள் தடுக்கப்படும் என்றார்.

Last Updated on Friday, 19 February 2010 10:54