Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தி.மலை வீதிகளில் சுற்றி திரியும் குரங்குகளை பிடிக்க நடவடிக்கை

Print PDF

தினமலர் 25.02.2010

தி.மலை வீதிகளில் சுற்றி திரியும் குரங்குகளை பிடிக்க நடவடிக்கை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை நகரில் சுற்றித்திரியும் குரங்குகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை நகரப்பகுதிகளில் நாய், குரங்கு, மாடுகள் தொல்லை அதிகமாக உள்ளதாக நகராட்சிக்கு புகார் தொடர்ந்து வந்தது. இதற்கு அதிரடி நடவடிக்கை எடுக்கும் பொருட்டு, வனத்துறை, விலங்குகள் நல வாரியம் மற்றும் விலங்குகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் நகராட்சி தலைவர் திருமகன் தலைமையில் ஆலோசனை நடந்தது.

கூட்டத்துக்கு பின் நகராட்சி தலைவர் திருமகன் நிருபர்களிடம் கூறியதாவது: ஆலோசனை கூட்டத்தில் திருவண்ணாமலை நகரப்பகுதிகளில் சுற்றித்திரியும் குரங்கு களை வனத்துறை மூலம் வருகிற 2ம் தேதி முதல் தொடர்ந்து பிடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த குரங்குகளை பிடித்து காட்டில் விடுவதற்கு ஆகும் செலவுத்தொகை நகராட்சி மூலம் செலுத்தப்படும். அதை தொடர்ந்து விலங்குகள் பாதுகாப்பு சங்கம் மூலம் வரும் 3ம் தேதி முதல் மாடுகளை பிடிக்க முடிவு செய்யப்பட்டது.

மாடு பிடிக்கும் போது மாடுகளின் உரிமையாளர் பிரச்னை செய்வதால் போலீஸாரிடம் பாதுகாப்பு கேட்க முடிவு செய்யப்பட்டது. நாய்களை பிடித்து கருத்தடை ஆப்பரேஷன் செய்யவும், வெறி நாய்கள் கடித்தால் நோய் பரவாமல் இருக்க தடுப்பூசி போட சந்தைமேட்டு பகுதியில் மருத்துவமுகாம் அமைக்கப்பட்டுள்ளது. இது வரை 2, 700 நாய்களுக்கு கருத்தடை ஆப்பரேஷன் செய்யப்பட்டுள்ளது.

கருத்தடை செய்யப்பட்ட நாய்களுக்கு அடையாளமாக காது பகுதி துண்டிக்கப் பட்டிருக்கும். இதற்காக மத்திய அரசு 225 ரூபாயும், நகராட்சி 225 ரூபாயும் சேர்த்து ஒரு நாய்க்கு 450 ரூபாய் செலவு செய்ய ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த மாதத்தில் 1,000 நாய்கள் பிடித்து கருத்தடை ஆப்பரேஷன் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Last Updated on Thursday, 25 February 2010 07:08