Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

பாதாள சாக்கடைக்கு 20 செ.மீ., விட்டம் குழாய் போதுமா?

Print PDF

தினமலர் 12.10.2010

பாதாள சாக்கடைக்கு 20 செ.மீ., விட்டம் குழாய் போதுமா?

ஈரோடு:ஈரோடு மாநகராட்சி பாதாள சாக்கடை திட்டத்தில் 20 செ.மீ., விட்டமுள்ள குறுகிய குழாய்கள் அமைக்கப்படுகின்றன. மழைக்காலத்திலும், எதிர்காலத்தில் குடியிருப்புகள் பெருகும் போதும், இக்குழாய் வழியே அதிகளவில் தண்ணீர் செல்லுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.மாநகராட்சியாக ஈரோடு தரம் உயர்த்தப்பட்ட பின், வீரப்பன்சத்திரம், சூரம்பட்டி, காசிபாளையம், பெரியசேமூர் ஆகிய நான்கு நகராட்சிகள், பி.பி.அக்ரஹாரம், சூரியம்பாளையம் ஆகிய டவுன் பஞ்சாயத்துக்கள் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டன. எட்டு சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள ஈரோடு நகராட்சி, 56 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் மாநகராட்சியாக விரிவடைந்தது. ஈரோடு மாநகராட்சியில் 209.22 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாதாள சாக்கடை அமைக்கும் பணி நடக்கிறது.

ஈரோடு பகுதியில் உள்ள ஐந்து மண்டலங்களில் 192.876 கி.மீ., நீளம், வீரப்பன்சத்திரத்தில் உள்ள ஒரு மண்டலத்தில் 12.971, சூரம்பட்டியில் உள்ள ஒரு மண்டலத்தில் 61.363, காசிபாளையத்தில் உள்ள மூன்று மண்டலத்தில் 135.065, பெரியசேமூரில் உள்ள இரண்டு மண்டலத்தில் 101.765, என மொத்தம் 504.04 கி.மீ., நீளத்துக்கு பாதாள சாக்கடை அமைக்கப்படுகிறது.ஈரோடு பகுதியில் ஐந்து கழிவு நீரேற்று நிலையம், ஐந்து கழிவுநீர் உந்து நிலையம், 13.195 கி.மீ., நீளத்துக்கு உந்து குழாய்கள் அமைக்கப்படுகிறது. வீரப்பன்சத்திரத்தில் தலா ஒரு கழிவு நீரேற்று நிலையம், கழிவு நீர் உந்து நிலையம், 1.833 கி.மீ., நீளத்துக்கு உந்து குழாய்கள், சூரம்பட்டியில் தலா ஒரு கழிவு நீரேற்று நிலையம், கழிவு நீர் உந்து நிலையம், 2.222 கி.மீ., நீள உந்து குழாய்கள், காசிபாளையத்தில் தலா மூன்று கழிவு நீரேற்று நிலையம், கழிவு நீர் உந்து நிலையம், 10.640 கி.மீ.., நீள உந்து குழாய்கள், பெரிய சேமூரில் இரண்டு கழிவு நீரேற்று நிலையம், ஒரு கழிவு நீர் உந்து நிலையம், 8.830 கி.மீ., நீள உந்து குழாய்கள் அமைக்கப்படுகிறது. ஒரே நேரத்தில் அனைத்து மண்டலங்களிலும் பாதாள சாக்கடை அமைக்கும் பணிக்கும் தீவிரமாக நடக்கிறது. பாதாள சாக்கடையில் 20 செ.மீ., விட்டமுள்ள குழாய்கள் பதிக்கப்படுகின்றன.

இக்குழாயில் வீட்டில் இருந்து வெளியேறும் கழிவு நீர் மட்டும் இணைக்கப்படுவதாக மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மழைக்காலங்களில் வீட்டில் இருந்து வெளியேறும் தண்ணீர் பாதாள சாக்கடையில் கலக்க வாய்ப்புள்ளது. மிக வேகமாக வளரும் ஈரோடு நகரில், அடுத்த பத்தாண்டுகளில் குடியிருப்புகள் எண்ணிக்கை இரட்டிப்பாக வாய்ப்புள்ளது.அப்போதைய நிலைமைக்கு ஏற்ப, தண்ணீர் செல்வதற்கு 20 செ.மீ., விட்டமுள்ள குழாய்கள் போதுமானதாக இருக்குமா? என்ற, சந்தேகம் ஏற்படுகிறது. காந்திஜி ரோட்டின் அடியில் செல்லும் பாதாள சாக்கடையில், சில மாதங்களுக்கு முன் மழை நீர் சென்றபோது குழாய் வெடித்தது. ரோடு முழுவதும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அக்காலத்தில், மிகப்பெரிய அளவில் அமைக்கப்பட்ட குழாயே வெடித்து விட்ட நிலையில், 20 செ.மீ., அளவுள்ள சிறிய குழாய்கள் வெடிக்காமல் இருக்க வாய்ப்பில்லை. பல கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் திட்டத்தில், பிற்காலத் தேவையையும் கருத்தில் கொண்டு, இதை விட விட்டம் அதிகமுள்ள குழாய்களை பதிக்கலாமே? இதுகுறித்து மாநகராட்சி இன்ஜினியர் வடிவேல் கூறியதாவது: பாதாள சாக்கடையில் 20 செ.மீ., அளவு குழாய் அமைக்கப்படுகிறது. சாக்கடையில் வீட்டு கழிவு நீர், பாத்ரூம் கழிவு நீர் மட்டுமே செல்லும். மழை நீர் செல்லாது. இப்போதுள்ள சாக்கடையில்தான் மழை நீர் செல்லும். எனவே, இந்தளவு குழாய்களே போதுமானதாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

 

குப்பைகளைக் கொட்ட இடமில்லாத மணப்பாறை நகராட்சி

Print PDF

தினமணி 11.10.2010

குப்பைகளைக் கொட்ட இடமில்லாத மணப்பாறை நகராட்சி

அ. தமிழ்மாணிக்கம்

மணப்பாறை,அக். 10: திருச்சி மாவட்டம், மணப்பாறை நகராட்சிப் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளைக் கொட்ட இடமின்றி நகராட்சி நிர்வாகம் தடுமாறிக் கொண்டிருக்கிறது. நகராட்சி நிர்வாகத்துக்கு உள்பட்ட 27 வார்டுகளில் உள்ள வீடுகளில் தினந்தோறும் கொட்டப்படும் குப்பைகள் தெருக்களில் குவியல், குவியலாகத் தேங்கிக் கிடக்கின்றன. சில தெருக்களில் நகராட்சி மூலம் வைக்கப்பட்டுள்ள தொட்டிகளிலும் குப்பைகள் நிரம்பி வழிகின்றன. இந்தக் குப்பைகளை எங்கே கொட்டுவது என்பது தெரியாமல் துப்புரவுப் பணியாளர்கள் தடுமாறி வருகின்றனர்.

15 ஆண்டுகளுக்கு முன்பு பாரதியார்நகர் பகுதியில் நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்பட்டன. அங்கு குப்பைகளைக் கொட்டுவதற்கு அந்தப் பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தும், தீவிரப் போராட்டங்கள் நடத்தியதால் அங்கே குப்பைகளைக் கொட்டுவதை நகராட்சி நிர்வாகம் நிறுத்தியது.

இந்நிலையில், திண்டுக்கல் - திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் குப்பைகள் மலை, மலையாகக் கொட்டப்பட்டது. அந்த இடத்திலும் குப்பைகளைக் கொட்டுவதற்கு பலரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். மேலும், குப்பைகளை எரியூட்டம் செய்யும் போது ஏற்படும் புகை மூட்டம் சுற்றுச் சூழலை பெரிதும் பாதித்தது.

இதுதவிர, புகை மூட்டத்தால் சாலைகளில் செல்லும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் நிலையும் உருவானது. மேலும், குறிப்பிட்ட அளவுக்கு மேல் அந்த இடத்தில் குப்பைகள் கொட்ட இயலாத நிலை ஏற்பட்டது. இதனால், நகராட்சி லாரிகளில் அள்ளப்படும் குப்பைகள் பெரும்பாலும் திண்டுக்கல் சாலை, திருச்சி சாலை மற்றும் 10-வது வார்டு பகுதியில் உள்ள ஒரு கிணறு என ஆங்காங்கே தாற்காலிகமாக கொட்டப்படுகின்றன.

இவ்வாறு பல்வேறு இடங்களில் குப்பைகள் கொட்டப்படுவதால் நகரம் முழுவதும் தொற்று நோய்கள் பரவும் அபாயமும் ஏற்பட்டது. இது தொடர்பாக நகராட்சிக் கூட்டத்தில் உறுப்பினர்கள் பல முறை புகார் தெரிவித்தனர்.

இதனையடுத்து, நகராட்சி நிர்வாகம் திருச்சி சாலையில் கே.பெரியபட்டி அருகே 10 ஏக்கர் நிலத்தை விலைக்கு வாங்கியது. அதில், குப்பை கொட்டுவதற்கும், குப்பைகளை மட்கச் செய்யும் இயந்திரக் கட்டுமானத்தையும் தொடங்க முற்பட்டனர். அந்தத் திட்டத்தின் தொடக்க நிலையிலேயே அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அந்தப் பணிகளும் தற்போது நின்றுவிட்டது. இதையடுத்து, குப்பைகளை எந்த இடத்தில் கொட்டுவது என்பது குறித்து ஒரு முடிவுக்கு வர இயலாமல் நகர நிர்வாகம் திணறிக் கொண்டிருக்கிறது. இதுகுறித்து நகராட்சி ஆணையர் அருணாச்சலம் கூறியது:

பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, நகராட்சிப் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் செவலூர் பிரிவு சாலையருகே கொட்டப்பட்டன. அது சுற்றுச் சூழலுக்கு கெடுதலாக அமைந்ததால், கே.பெரியபட்டி அருகே 10 ஏக்கர் நிலத்தை தனியாரிடமிருந்து விலைக்கு வாங்கி, அதில் பணிகளைத் தொடங்க உத்தேசித்தோம்.

இதற்கு அப்பகுதி மக்கள் தீவிரமாக எதிர்ப்பு தெரிவித்ததால் அந்தத் திட்டத்தை கைவிட்டு விட்டோம். மீண்டும் நகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி முடிவெடுக்கப்படும். அதுவரை பழைய இடத்திலேயே குப்பைகள் கொட்ட நடவடிக்கை எடுத்து வருகிறோம். சாலை ஓரங்களில் குப்பை கொட்டும் நடவடிக்கை இனி தொடராது என்றார் அவர்.

பொது சுகாதாரம் முறையாக இல்லாததால் பன்றிக் காய்ச்சல், மலேரியா, டைபாய்டு என நோய்வாய்ப்படுவோரின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்து வருகிறது. அதற்குப் பிரதானமாக இருப்பது கொசுக்களின் அசுர வளர்ச்சியே காரணம். அத்தகைய கொசுக்களை உற்பத்தி செய்யும் குப்பைகளை பொதுமக்கள் வசிப்பிடங்களுக்கு அப்பாலும், பாதுகாப்பாகவும் கொட்டுவது அவசியம்.

நீண்ட நாள்களாக மணப்பாறையில் நிலவி வரும் இந்தப் பிரச்னையில் மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு நிரந்தரமாக குப்பைகளைக் கொட்ட மாற்று இடத்தை தேர்வு செய்ய வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

 

பாளை பேருந்து நிலையம் அருகே உள்ள சரோஜினி பூங்கா பராமரிப்பின்றி பாழ்பட்டுக்கிடக்கிறது. பாளையில் பராமரிப்பின்றி பாழாகும் பூங்காக்கள்

Print PDF

தினகரன் 11.10.2010

பாளை பேருந்து நிலையம் அருகே உள்ள சரோஜினி பூங்கா பராமரிப்பின்றி பாழ்பட்டுக்கிடக்கிறது. பாளையில் பராமரிப்பின்றி பாழாகும் பூங்காக்கள்

நெல்லை, அக். 11: பாளையில் பராமரிப்பு இல்லாமல் பாழாகும் பூங்காக்களை சீரமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண் டும்.

நெல்லை மாநகராட்சி மக்கள் பயனுள்ள வகையில் பொழுதை போக்க முன்பு பாளை பகுதியில் பல்வேறு பூங்காக்கள் மற்றும் நூலகங்கள் இடம் பெற்றிருந்தன. பாளை பஸ் நிலையம் அருகேயுள்ள சரோஜினி பூங்கா பல ஆண்டுகளாக அப்பகுதி மக்களின் பொழுது போக்கு அம்சமாக திகழ்ந்தது. கடந்த 1936ம் ஆண்டு திவான்பகதூர் குமாரசாமி பிள்ளை இப்பூங்காவை திறந்து வைத் தார். பாளை நகராட்சியாக இருந்த காலகட்டத்தில் அப்பகுதியை சேர்ந்த பலரும் மாலை பொழுதை போக்க இங்கு வந்து செல்வது வழக்கம்.

75 ஆண்டுகள் பழமைமிக்க சரோஜினி பூங்கா தற்போது முட்கள் அடர்ந்து புதர்க் காடாக காட்சியளிக்கிறது. செடி, கொடிகளும், மரங்களும் தாறுமாறாக வளர்ந்து நிற்பதால், பூங்கா அலங்கோலமாக காட்சியளிக்கிறது. சில ஆண்டுக ளுக்கு முன் இங்கு மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டப்பட்டபோது, மாநகராட்சி அதிகாரிகள் இதன் வாசல் கதவை இழுத்து பூட்டிவிட்டனர். இதனால் வாசல்வரை முட்களின் ஆதிக்கம் காணப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளாக இப்பூங்கா பராமரிப்பில் மாநகராட்சி எவ்வித அக்கறையும் காட்டவில்லை. இப்பூங்காவை திறந்து பார்வையாளர்களை அனுமதித்தால், குடிநீர் தொட்டிக்கு பாதிப்பு ஏற்படும் என மாநகராட்சி கருதுவதாக கூறப்படுகிறது. இப்பூங்கா களையிழந்த பின்னர் அப்பகுதியை சேர்ந்த பெண்கள், சிறுவர்கள் மாலை நேரத்தில் பொழுது போக்க, வஉசி மைதானத்திற்கு சென்று வருகின்றனர். பாளை பஸ் நிலையம் அருகிலுள்ள இப்பூங்காவில் முட்களை அகற்றி, செடி, மரங்களை சீராக்கினால் மக்களுக்கு பயனுள்ளதாக அமையும்.

இதேபோல் பாளை மிலிட்டரி கேன்டீன் அருகேயுள்ள மனகாவலம் பிள்ளை பூங்காவும் தற்போது பராமரிப்பு இல்லாமல் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. இரவு நேரங்களில் மது அருந்துவோருக்கு புகலிடமாக இப்பூங்கா திகழ்கிறது. இப்பூங்காவில் முன்பு செய்தித்தாள்களுடன் புத்தகங்கள் படிக்கவும் வசதிகள் செய்யப்பட்டு இருந்தது. மாநகராட்சி அதிகாரிகள் இப்பூங்காவையும் சீரமைத்து செப்பனிட்டால், விடுமுறை தினங்களில் மக்கள் தங்கள் பொழுதை இனிமையாக கழிக்க வழி பிறக்கும்.

 


Page 356 of 841