Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

தாம்பரம் நகராட்சிக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் குப்பை லாரிகள் ஆக்கிரமிப்பு

Print PDF

தினகரன் 06.10.2010

தாம்பரம் நகராட்சிக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் குப்பை லாரிகள் ஆக்கிரமிப்பு

தாம்பரம், அக். 6: அனைத்து சமூகத்தை சேர்ந்தவர்களும் பயன்படுத்தும் வகையில் அரசு சார்பில் உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக சமுதாய கூடங்கள் (திருமண மண்டபங்கள்) கட்டப்பட்டன. மிக குறைந்த வாடகையில் சகல வசதிகளுடன் இந்த மண்டபங்கள் கிடைப்பது ஏழை, நடுத்தர மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.

தாம்பரம் நகராட்சி சார்பில் அம்பேத்கர் பெயரில் திருமண மண்டபம் கட்டப்பட்டுள்ளது. தாம்பரம் மற்றும் சுற்றுப்பகுதிகளை சார்ந்த கிராம மக்கள் திருமணம், மஞ்சள் நீராட்டு விழா, காதுகுத்து, பிறந்தநாள் விழா மற்றும் பொது நிகழ்ச்சிகளுக்கு இந்த மண்டபத்தையே பயன்படுத்தி வருகின்றனர்.

மண்டபத்தின் ஒரு நாள் வாடகை ரூ4ஆயிரத்து 200தான். இது ஏழை, நடுத்தர வர்க்கத்தினருக்கு மிகவும் வசதியாக உள்ளது. தனியார் மண்டபங்கள் குறைந்த பட்ச வாடகையே ரூ35ஆயிரம்தான். பல லட்சத்துக்கும் மண்டபங்கள் உள்ளன. குறைந்த வாடகைக்கு சிறப்பான பார்க்கிங் வசதியுடன் நகராட்சி மண்டபம் கிடைக்கிறது. ஆனால் இப்போது இந்த மண்டபத்தில் துர்நாற்றம் வீசுவது ஒரு பெரும் குறையாக உள்ளது.

தாம்பரம் நகராட்சியில் மொத்தம் 39வார்டுகள் உள்ளன. இதில் ஒரு லட்சத்து 60ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கிறார்கள்.

தினமும் தாம்பரத்திற்கு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் வந்து செல்கிறார்கள். தினமும் 100க்கும் மேற்பட்ட மெட்ரிக் டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. இவற்றை சேகரிக்க லாரிகள் பயன்படுத்தப்படுகின்றன. 10க்கும் மேற்பட்ட குப்பை லாரிகள், அம்பேத்கர் மண்டபத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

மீன், இறைச்சி கழிவுகள் மற்றும் குப்பையை தினமும் சேகரித்து விட்டு பின்னர் லாரிகளை சுத்தம் செய்யாமால் மண்டபத்தில் நிறுத்திவிடுகின்றனர், நகராட்சி ஊழியர்கள். இதன்காரணமாக மண்டப பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. நிகழ்ச்சிகளுக்கு வந்திருப்பவர்கள் நாற்றம் தாங்க முடியாமல் மூக்கை கைக்குட்டையால் மூடிக் கொண்டே அவதிப்படுகின்றனர்.

சுவையான உணவு உட்கொள்ளும் போது துர்நாற்றம் வீசுவதால் சாப்பிட முடியாமல் பலர் பாதியில் எழுந்து விடுகின்றனர். இதனால் தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. மேலும் குப்பை லாரிகளை மண்டபத்தில் நிறுத்துவதால் நிகழ்ச்சிக்கு வரும் வாகனங்களை நிறுத்த இடமின்றி சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்துகின்றனர்.

முன்பு நகராட்சி அலுவலகம் பின்புறம் நிறுத்தப்பட்டிருந்தது இந்த லாரிகள், இப்போது மண்டபத்தில் நிறுத்தப்படுகிறது. இந்த லாரிகளை உடனடியாக அப்புறப்படுத்தவேண்டும். சுற்றுப்புறத்தை தூய்மையாக வைக்க வேண்டும் என அறிவுருத்தும் நகராட்சியே இது போன்று திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்கள் நடக்கும் இடத்தில் குப்பை லாரிகளை நிறுத்த அனுமதிக்கலாமா? தாம்பரம் நகராட்சியில் உள்ள அம்பேத்கர் திருமண மண்டப கட்டிடம். அடுத்தபடம்: மண்டப வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள குப்பை லாரிகள்.

Last Updated on Wednesday, 06 October 2010 05:56
 

கழிவுகள் இல்லாத பெங்களூர் நகரம் மேயர் நடராஜ் உறுதி

Print PDF

தினகரன் 06.10.2010

கழிவுகள் இல்லாத பெங்களூர் நகரம் மேயர் நடராஜ் உறுதி

பெங்களூர், அக். 6: பெங்களூரை கழிவுகள் இல்லாத மாநகரமாக்க லட்சியம் கொண்டுள்ளதாக மேயர் எஸ்.கே.நடராஜ் தெரிவித்தார்.

மாநகரில் குவியும் கழிவுகளை அகற்றுவது தொடர்பாக மேயர் எஸ்.கே.நடராஜ் மற்றும் துணை மேயர் என்.தயானந்த் ஆகியோர் கடந்த மாதம் மும்பை சென்று அங்குள்ள பாபா அடாமிக் ரிசர்ச் மையத்தில் மூலம் அமைக்கப்பட்டுள்ள திட கழிவு மேலாண்மை திட்டத்தை பார்வையிட்டனர். இதை பெங்களூரில் செயல்படுத்த முடிவு செய்தனர். அதன்படி நேற்று மேயர் நடராஜ் அதிகாரிகளுடன் மாநகரில் கே.ஆர்.மார்கெட், ஆனேக்கல் உள்பட பல பகுதிகளில் இடம் தேர்வு செய்தனர். இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் மேயர் கூறியதாவது:

நாட்டில் திட கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்துவதில் மும்பை மாநகராட்சி முதலிடத்தில் உள்ளது. அம்மாநகராட்சி மூலம் அனைத்து வார்டுகளிலும் திட கழிவு சேமிப்பு இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது.

இதில் எளிதில் அழிந்து போகும் பொருட்கள் ஒரு இயந்திரத்திலும், எளிதில் அழியால் இருக்கும் பிளாஸ்டிக் உள்பட மற்ற பொருட்கள் இன்னொரு இயந்திரத்திலும் சேகரிக்கப்படுகிறது. இதே திட்டத்தை பெங்களூரிலும் செயல்படுத்த முடிவு செய்துள்ளோம்.

மும்பை மாநகரில் செயல்படுத்தும் திட்டத்தை பெங்களூரில் செயல்படுத்த மும்பையில் இயங்கி வரும் பல நிறுவனங்கள் முன்வந்துள்ளது.

இதில் ஆச்சரியம் என்னவென்றால் திட கழிவு இயந்திரம் அமைக்க முன் வரும் நிறுவனங்கள் நமது மாநகராட்சியிடம் நிதி கேட்காமல், அவர்களே முதலீடு செய்து தொடங்கு வதாக உறுதியளித்துள்ளனர்.

இதில் மாநகராட்சிக்கு எந்த நிதி சுமையும் ஏற்படாது. விரைவில் மாநகரில் உள்ள சில இடங்களில் திட கழிவு சேகரிப்பு மையம் அமைக்கப்படும். இதன் மூலம் மாநகரம் சுத்தமாக மாறிவிடும். இவ்வாறு அவர் கூறினார்.

நடராஜ்

Last Updated on Wednesday, 06 October 2010 05:54
 

ஆண்டிபட்டி பேரூராட்சி கூட்டம்

Print PDF

தினமலர் 05.10.2010

ஆண்டிபட்டி பேரூராட்சி கூட்டம்

ஆண்டிபட்டி:ஆண்டிபட்டி பேரூராட்சி கூட்டம் தலைவர் ராமசாமி தலைமையில் நடந்தது. நிர்வாக அதிகாரி ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். சிறப்பு ரோடு அமைக்கும் திட்டத்தில் ஆண்டிபட்டி பேரூராட்சி பகுதியில் 80.18 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வார்டு பகுதிகளில் ஒதுக்கப்பட்ட பணிகளுக்கு ஒப்புதல் வழங்க தீர்மானிக்கப்பட்டது. பேரூராட்சி பகுதிகளில் உள்ள பொதுக்கழிப்பறைகளை பொது ஏலத்தில் விட்டு வருமானத்தை பெருக்க நடவடிக்கை எடுப்பது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

 


Page 360 of 841