Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

உதகையில் போலியோ சொட்டு மருந்து முகாம்

Print PDF

தினமணி            20.01.2014

உதகையில் போலியோ சொட்டு மருந்து முகாம்

நீலகிரி மாவட்டத்தில் உதகையிலுள்ள நகராட்சி மருந்தகத்தில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை மாவட்ட ஆட்சியர் பி.சங்கர் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார்.

அப்போது, ஆட்சியர் பேசியதாவது:

இளம்பிள்ளை வாதத்தை ஒழிக்க நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில், பிறந்த குழந்தைகள் முதல் 5 வயதிற்குட்பட்ட 47,112 குழந்தைகளுக்கு தற்போது சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. 106 துணை சுகாதார நிலையங்கள், 32 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 11 அரசு மருத்துவமனைகள், 49 தனியார் மருத்துவமனைகள், 283 குழந்தைகள் ஊட்டச்சத்து மையங்கள் ஆகியவற்றுடன் ரயில் நிலையங்கள், சுற்றுலா மையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் 30 நடமாடும் மருத்துவ மையங்களுடன், இதரப் பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த 259 முகாம்களுமாக மொத்தம் 770 மையங்களில் சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான பணியில் சுகாதாரத் துறை ஊழியர்கள் 413 பேருடன், குழந்தைகள் ஊட்டச் சத்து மைய ஊழியர்கள் 665 பேரும், கல்லூரி மாணவர்கள் 272 பேரும், ரோட்டரி சங்கம் மற்றும் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த 55 பேருடன் இதர ஊழியர்கள் 1,687 பேருமாக மொத்தம் 3,080 பேரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பொதுப்பணித் துறை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், ஊரக வளர்ச்சி, நெடுஞ்சாலை, கல்வித் துறை, வேளாண்மை, மின்வாரியம், குழந்தைகள் ஊட்டச்சத்து மையங்களின் பணியாளர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இரண்டாவது கட்ட போலியோ மருந்து முகாம் பிப்ரவரி 23-ஆம் தேதி நடைபெறும் என்றார். மாவட்ட சுகாதாரத் துறை உதவி இயக்குநர் டாக்டர் பானுமதி, உதகை நகர்மன்றத் தலைவர் கே.சத்தியபாமா, நகர்மன்ற ஆணையர் சிவகுமார், பர்லியார் ஊராட்சித் தலைவர் எஸ்.கலைச்செல்வன், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அதிகாரிகள் உடனிருந்தனர்.

 

நத்தம் பேரூராட்சி மன்றக் கூட்டம்

Print PDF

தினமணி            20.01.2014

நத்தம் பேரூராட்சி மன்றக் கூட்டம்

நத்தம் பேரூராட்சி மன்றக் கூட்டம் நடைபெற்றது. தலைவர் விஜயலட்சுமி தனபால் தலைமை தாங்கினார். நிர்வாக அலுவலர் செல்வா, துணைத் தலைவர் முகமது அப்பாஸ் முன்னிலை வகித்தனர். கூட்ட அறிக்கையை எழுத்தர் அம்பிகா வாசித்தார்.

பிற்பட்ட பகுதி மானிய நிதித் திட்டத்தின் கீழ் ரூ.31 லட்சம் மதிப்பில் வண்ணக் கல் பதித்து சாலை அமைத்தல் மற்றும் அங்கன்வாடி மையம் அமைத்தல் ஆகிய பணிகள் நடைபெற உள்ளது. நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.70 லட்சம் மதிப்பில் தார்ச் சாலைகள் அமைத்திடவும் மற்றும் ரூ.20 லட்சம் மதிப்பில் நல்லாகுளம் மேல்கரையில் சுற்றுச் சுவர் மற்றும் நடை பாதை அமைத்தல் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.20 லட்சம் மதிப்பில் காமராஜ் நகரில் அங்கன்வாடி மையம் அமைத்தல் உள்பட பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகள் செய்திடுவது உள்பட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சுகாதார ஆய்வாளர் சடகோபி நன்றி கூறினார்.

 

ஜெயங்கொண்டத்தில் 25 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நகராட்சி தலைவர் துவக்கிவைத்தார்

Print PDF

தினகரன்              20.01.2014

ஜெயங்கொண்டத்தில் 25 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நகராட்சி தலைவர் துவக்கிவைத்தார்

ஜெயங்கொண்டம், : ஜெயங்கொண்டத்தில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்காக அமைக்கப்பட்டிருந்த 25 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை நகராட்சி தலைவர் மீனாள் சந்திரசேகர் நேற்று துவக்கிவைத்தார்.

போலியோ சொட்டு மருந்து தினத்தை முன்னிட்டு, ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட சின்னவளையம், செங்குந்தபுரம், கரடிகுளம், மேலகுடியிருப்பு, கீழக்குடியிருப்பு, வேலாயுதநகர் ஆகிய இடங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் ஜெயங்கொண்டம் பஸ் நிலையம், நகராட்சி அலுவலகம், அரசு மேல்நிலைப் பள்ளி, பாத்திமா பெண்கள் பள்ளி உள்ளிட்ட 25  மையங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன.

இதையொட்டி, நகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த முகாமில் நேற்று காலை 8 மணியளவில் நடைபெற்ற விழாவுக்கு தலைமை வகித்த நகராட்சி தலைவர் மீனாள் சந்திரசேகர், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி இதற்கான விநியோகத்தை முறைப்படி துவக்கிவைத்தார்.

முகாமில் மீன்சுருட்டி வட்டார மருத்துவ அலுவலர் இந்திரா தலைமையில், டாக்டர் தீபா முன்னிலையில் கிராம சுகாதாரச் செவிலியர் சொட்டு மருந்து வழங்கினர். ஜெயங்கொண்டம் நகராட்சியில் நேற்று நடைபெற்ற முகாமில் 2 ஆயிரத்து 815 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தை நூற்றுக்கணக்கான செவிலியர்கள் வழங்கினர்.முகாம் ஏற்பாடுகளை முகாம் ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன் செய்திருந்தார்.

 


Page 47 of 841