Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

துப்புரவுப் பணியாளர்களுக்கு புத்தாடை

Print PDF

தினமணி             04.01.2014 

துப்புரவுப் பணியாளர்களுக்கு புத்தாடை

உளுந்தூர்பேட்டை ஸ்ரீசாரதா ஆஸ்ரம சேவை பிரிவான விவேகானந்த சேவா பிரதிஷ்டான் சார்பில் சுவாமி விவேகானந்தரின் 150-வது ஜயந்தி விழாவை முன்னிட்டு, உளுந்தூர்பேட்டை பேரூராட்சியின் துப்புரவுப் பணியாளர்களுக்கு புத்தாடைகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பேரூராட்சித் தலைவர் க.ஜெயசங்கர் தலைமை வகித்தார். பேரூராட்சி மன்ற செயல் அலுவலர் மா.தமிழ்செல்வன் வரவேற்றார். பேரூராட்சி கவுன்சிலர் மாலதி இராமலிங்கம் உட்பட பலர் முன்னிலை வகித்தனர். ஓய்வு பெற்ற நல்லாசிரியர்கள் முத்து. அண்ணாமலை, சீராள.சிவப்பிரகாசம், பாவாணன், உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் (ஒய்வு) கி.தங்கவேலு, பேரூராட்சியின் இளநிலை உதவியாளர் தங்கவேல், வழக்குரைஞர் காமராஜ் உள்பட பலர் வாழ்த்துரை வழங்கினர்.

விவேகானந்த சேவா பிரதிஷ்டானின் இயக்குநரும், ஸ்ரீசாரதா வித்யாலயா பள்ளி முதல்வருமான யதீஸ்வரி ஆத்ம விகாஸப்ரியா அம்பா பேரூராட்சியின் துப்புரவு பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கினார். பேரூராட்சி ஊழியர்கள், சந்நியாச சகோதரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

 

குடிநீர் திட்டத்திற்கு நிதி: முதல்வருக்கு கோத்தகிரி பேரூராட்சி மன்றம் நன்றி

Print PDF

தினமணி             04.01.2014

குடிநீர் திட்டத்திற்கு நிதி: முதல்வருக்கு கோத்தகிரி பேரூராட்சி மன்றம் நன்றி

ஈளாடா குடிநீர் திட்டத்திற்கு நிதி ஒதுக்கிய முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து கோத்தகிரி பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கோத்தகிரி பேரூராட்சி தலைவர் சை.வாப்பு தலைமையில், பேரூராட்சிக் கூட்டம் நடைபெற்றது . செயல் அலுவலர் நா.பழனி, துணைத் தலைவர் சுந்தரி நேரு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கோத்தகிரி பகுதியின் குடிநீர் ஆதாரமான ஈளாடா குடிநீர் திட்டத்திற்கு ரூ.50 லட்சம் ஒதுக்கிய தமிழக முதல்வருக்கு கூட்டத்தில் ஒருமனதாக நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பின்னர் நடைபெற்ற விவாதம்:

கேஏபி.சீனிவாசன் (அதிமுக), ராஜேஸ்வரி வடிவேல் (மதிமுக): மார்க்கெட் பகுதியிலும் நகரிலும் நடைபாதை ஆக்கிரமிப்புகளையும், போக்குவரத்திற்கு இடையூறான ஆக்கிரமிப்புகளையும் அகற்றுவதோடு, ஏழை எளிய மக்களுக்கு அதற்குப் பதிலாக புதிய இடம் ஒதுக்க வேண்டும்.

கனகராஜ் (சுயே.), நடராஜ் (திமுக): டானிங்டன் பகுதியில் உள்ள பொது கழிப்பிடத்தில் தண்ணீர் வசதி இல்லாததால் அது பூட்டப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதனை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

டானிங்டன் பகுதியிலுள்ள பேருந்து நிறுத்தத்தை அகற்றியதால் அங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு மிகவும் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே அதனை மீண்டும் அங்கு அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

கண்ணன் (அதிமுக), ரவி (தேமுதிக): கோத்தகிரி மார்க்கெட்டில் இறைச்சிகள் சுகாதாரமின்றி விற்கப்படுகின்றன. இதை ஒழுங்குபடுத்த வேண்டும்.

கண்ணன் (அதிமுக):  கோத்தகிரி புயல் நிவாரண மண்டப பணிகள் இன்னும் நிறைவு பெறவில்லை. அந்தப் பணிக்கு பதிலாக அதன் ஒப்பந்ததாரர் அங்கேயே வேறு பணிகளை செய்வதோடு பேரூராட்சி கணக்கில் மின்சாரத்தை பயன்படுத்தி அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். இதற்கு தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சரவணன் (காங்கிரஸ்): கோத்தகிரி பகுதியில் குப்பைகள் அள்ளப்படாமல் துர்நாற்றம் வீசுகிறது. இதனை சீர்படுத்த வேண்டும்.

சிவகுமார் (தேமுதிக): பொது கிணற்றுக்கு போகும் பொது பாதையை காமராஜர் சதுக்கம் பகுதியில் தனியார்கள் ஆக்கிரமித்து வைத்துள்ளனர். இதனை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தலைவர் சை.வாப்பு பதில்: ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றுவதோடு, ஏழை மக்களுக்கு பழக்கடை பகுதியில் கடை ஒதுக்கப்படும்.

டானிங்டன் பகுதி கழிப்பிடத்திற்கு உடனே தண்ணீர் வசதி ஏற்படுத்த சுகாதார ஆய்வாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அங்கு பேருந்து நிறுத்தம் ஏற்படுத்த மாவட்ட நிர்வாகத்துடன் பேசி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மார்க்கெட் கோழி இறைச்சி கடைகளை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும். புயல் நிவாரண மண்டப பணிகளை விரைவில் முடிக்க உத்தரவிடப்படும். தாமதிக்கும் பட்சத்தில் ஒப்பந்தத்தை ரத்து செய்து வேறு நபருக்கு கொடுக்கவும், அங்கு உபயோகிக்கப்பட்ட மின்சாரத்திற்கு ஒப்பந்ததாரரிடம் கட்டணம் வசூலிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொது கிணறு உள்ள பாதையை ஆக்கிரமித்துள்ளதை ஆய்வு மேற்கொண்டு அது  மீட்கப்படும். குப்பைகள் இல்லா கோத்தகிரியாக மாற்ற நூறு சதவீதம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

 

மாநகராட்சி அலுவலர்களுக்கு மனிதவள மேம்பாட்டுப் பயிற்சி

Print PDF

தினமணி             04.01.2014

மாநகராட்சி அலுவலர்களுக்கு மனிதவள மேம்பாட்டுப் பயிற்சி

கோவை மாங்கரையில் உள்ள காரல் கியூபல் கல்வி வளர்ச்சி நிறுவனத்தில் மாநகராட்சி அலுவலர்களுக்கான 3 நாள் மனித வள மேம்பாட்டுப் பயிற்சியை மேயர் செ.ம.வேலுசாமி வெள்ளிக்கிழமை துவக்கி வைத்தார்.

கோவை மாநகராட்சியில் பணியாற்றும் அனைத்து நிலை அலுவலர்கள் தொடர்ந்து ஒரே மாதிரியான பணிகளை மேற்கொண்டு வருவதால் ஏற்படும் மன இறுக்கத்தை போக்குவதற்காக பெங்களுரைச் சேர்ந்த தி டிரெயினிங் பீயூபிள் நிறுவனம் 3 நாள் பயிற்சி வழங்க ஏற்பாடு செய்தது.

இந்தப் பயிற்சியில் மாநகராட்சி பொறியாளர்கள், படவரைவாளர்கள், தொழில் நுட்ப உதவியாளர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெறுகின்றனர்.

  இதுபோன்ற பயிற்சி பெறுவதன் மூலம் பணியாளர்களின் மனநிலை மற்றும் உடல் நிலை புத்துணர்வு பெறுவதுடன் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய பணிகளில் முழுக் கவனம் ஏற்படும் என்றும், அலுவலர்களுக்கு வழங்கப்படும் பயிற்சியை தொடர்ந்து 100 மாமன்ற உறுப்பினர்களுக்கும் இது போன்ற மனிதவள மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படும் என மேயர் செ.ம.வேலுசாமி தெரிவித்தார்.

பயிற்சியை தி டிரெயினிங் பியூபிள் நிறுவனத்தின் இயக்குநர் எம்.பாரிவள்ளல் மற்றும் ஜெயச்சந்திரன் ஆகியோர் நடத்துகின்றனர். பயிற்சி தொடக்க நிகழ்ச்சியில் துணை ஆணையர் சு.சிவராசு, மண்டலத் தலைவர் கே.ஆர்.ஜெயராம், உதவி ஆணையர் செந்தில்குமார், அரசு வழக்கறிஞர்கள் ஆறுமுகம், பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 


Page 54 of 841