Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

காஞ்சிபுரம் நகராட்சியில் 5,008 குழந்தைகள் பிறப்பு

Print PDF
தினமணி                 03.01.2014

காஞ்சிபுரம் நகராட்சியில் 5,008 குழந்தைகள் பிறப்பு


காஞ்சிபுரம் நகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் கடந்த 2013-ஆம் ஆண்டில் 5,008 குழந்தைகள் பிறந்துள்ளன.

காஞ்சிபுரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அரசு மருத்துவமனை, நகராட்சி மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகள் என நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் உள்ளன.

இங்கு காஞ்சிபுரம் நகராட்சி மக்களைத் தவிர காஞ்சிபுரம், வாலாஜாபாத் சுற்றுப்பகுதி மக்கள், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களைச் சேர்ந்த கிராம மக்கள் அதிகளவில் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர்.

குறிப்பாக பிரசவத்துக்காக தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் மட்டும் மாதத்துக்கு 300 முதல் 400 பிரசவங்கள் வரை நடைபெறுகின்றன.

இந்நிலையில் காஞ்சிபுரம் நகராட்சிகுட்பட்ட பகுதிகளில் கடந்த 2013-ஆம் ஆண்டில் 2,634 ஆண் குழந்தைகள், 2,374 பெண் குழந்தைகள் என மொத்தம் 5,008 குழந்தைகள் பிறந்துள்ளன.

2012-ஆம் ஆண்டு காஞ்சிபுரம் நகராட்சியில் 5,760 குழந்தைகள் பிறந்துள்ளன. 2011-ஆம் ஆண்டு 5,829 குழந்தைகளும், 2010-ஆம் ஆண்டு 5,170 குழந்தைகளும், 2009-ஆம் ஆண்டு 5,964 குழந்தைகளும் பிறந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 

விலையில்லா மின்விசிறி மிக்ஸி, கிரைண்டர் வழங்கல்

Print PDF

தினமணி                 03.01.2014

விலையில்லா மின்விசிறி மிக்ஸி, கிரைண்டர் வழங்கல்

மதுரை வடக்கு பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட மாநகராட்சியின் 27 ஆவது வார்டில் ரூ.1.62 கோடி மதிப்பிலான விலையில்லா மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர்கள் வழங்கப்பட்டன.

 தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, பயனாளிகளுக்கு இந்த விலையில்லா பொருள்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் எல்.சுப்பிரமணியன், மேயர் வி.வி.ராஜன்செல்லப்பா, வடக்கு எம்எல்ஏ ஏ.கே.போஸ், துணை மேயர் ஆர்.கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

தேசிய அளவில் கவனத்தை ஈர்த்து வரும் ‘அம்மா உணவகம்’

Print PDF

மாலை மலர்             02.01.2014

தேசிய அளவில் கவனத்தை ஈர்த்து வரும் ‘அம்மா உணவகம்’
 
தேசிய அளவில் கவனத்தை ஈர்த்து வரும் ‘அம்மா உணவகம்’
சென்னை, ஜன.2 - முதலமைச்சர் ஜெயலலிதாவின் பல்வேறு நலத்திட்டங்களை தங்கள் மாநிலங்களிலும் செயல்படுத்த பல மாநில அரசுகள் முடிவெடுத்துள்ளன. குறிப்பாக தமிழகத்தில் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் ‘அம்மா உணவகம்’ திட்டத்தை பல்வேறு மாநிலங்கள் தங்கள் மாநிலங்களில் செயல்படுத்த முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.

ஆந்திரா மற்றும் ராஜஸ்தான் மாநில அரசுகளின் பிரதிநிதிகள் கடந்த வாரம் சென்னை வந்து இங்குள்ள மாநகராட்சி அதிகாரிகளிடம் இத்திட்டம் செயல்படுத்தப்படும் விதம் குறித்து விவாதித்துள்ளனர். பின்னர் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் அம்மா உணவகங்களையும் அவர்கள் பார்வையிட்டு அங்கு பரிமாறப்படும் உணவின் தரத்தை உறுதி செய்துகொண்டதாக சென்னை மாநகராட்சியின் சுகாதாரத் துறை அதிகாரி ஜி.டி.தங்கராஜன் கூறியுள்ளார்.

மும்பை மற்றும் டெல்லி மாநில அதிகாரிகள் உணவகம் செயல்படும் விதம் குறித்தும் பொதுமக்களின் கருத்து எப்படி உள்ளது என்பது பற்றியும் கேட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநில முதலமைச்சராக கடந்த சில நாட்களுக்கு முன் பொறுப்பேற்ற வசுந்தரா ராஜே சிந்தியா இத்திட்டத்தை உடனடியாக தனது மாநிலத்தில் அமல்படுத்த முடிவெடுத்து அங்கிருந்து அதிகாரிகள் குழு ஒன்றை தமிழகத்துக்கு அனுப்பியுள்ளார்.

அக்குழுவில் பங்கேற்றுள்ள கே.கே.சர்மா எனும் அதிகாரி திங்கட்கிழமையன்று அம்மா உணவகங்களை பார்வையிட்டபோது கூறியதாவது: மலிவான விலையில் தரமான உணவை ஏழை மக்களுக்கு இந்த உணவகங்கள் எப்படி கொடுக்கின்றன என தெரிந்துகொண்டோம். எங்கள் மாநிலத்திற்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் வந்து இத்திட்டத்தை செயல்படுத்த உதவுமாறு கேட்டுக்கொண்டுள்ளோம் என்றார்.

அம்மா உணவகத்தில் ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லியும், ஐந்து ரூபாய்க்கு பொங்கல், சாம்பார் சாதம், எலுமிச்சை சாதம், கறிவேப்பிலை சாதம் மற்றும் மூன்று ரூபாய்க்கு தயிர் சாதமும், 3 ரூபாய்க்கு 2 சப்பாத்திகளும் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த 2400 பெண்கள் இத்திட்டத்தால் வேலைவாய்ப்பு பெற்று பயனடைந்து வருவதாக தெரிகிறது. ஏற்கனவே முதலமைச்சரின் மழை நீர் சேகரிப்பு திட்டம் உலக அளவில் கவனத்தை ஈர்த்த நிலையில் தற்பொழுது அம்மா உணவகமும் சிறப்பான கவனத்தை ஈர்த்துவருவது மிகவும் குறிப்பிடத்தக்கது. கடந்த சில நாட்களுக்கு முன் காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் பாராளுமன்ற தேர்தல் குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தினார். அப்போது தமிழக முதலமைச்சர் அறிமுகப்படுத்தியுள்ள மலிவு விலை காய்கறி திட்டங்களை தங்கள் மாநிலங்களில் காங்கிரஸ் அரசுகள் உடனடியாக செயல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். ஆக, தமிழக முதல்வரின் பல திட்டங்கள் இந்திய அரசின் கவனத்தையும், பல்வேறு மாநிலங்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
 


Page 56 of 841