Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

சென்னையில் சாலையோரம் வசிப்போர் குறித்து...கணக்கெடுப்பு:தேனாம்பேட்டை, ராயபுரத்தில் இன்று துவக்கம்

Print PDF

தினமலர்             20.12.2013

சென்னையில் சாலையோரம் வசிப்போர் குறித்து...கணக்கெடுப்பு:தேனாம்பேட்டை, ராயபுரத்தில் இன்று துவக்கம்


சென்னை:மாநகராட்சி விரிவாக்கத்திற்கு பின், முதல் முறையாக, சென்னையில் வீடுகள் இன்றி சாலையோரம் வசிப்போர் குறித்து கணக்கெடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. முதல் கட்டமாக ராயபுரம், தேனாம்பேட்டை மண்டலங்களில், இன்று முதல், கணக்கெடுப்பு துவங்க உள்ளது.

சென்னையில் வீடுகள் இல்லாதோர், சாலை ஓரம், நடைபாதை, பேருந்து நிலையம், பூங்காக்கள், ரயில் நிலையங்களில், இரவில் படுத்து உறங்குகின்றனர்.11 ஆயிரம் பேர்:விரிவாக்கத்திற்கு முந்தைய சென்னை மாநகராட்சியில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், 11 ஆயிரம் பேர் சாலை ஓரத்தில் வசிப்பது கண்டறியப்பட்டது. அவர்களுக்காக, தற்போது சென்னையில், 26 இரவு நேர காப்பகங்கள் இயங்கி வருகின்றன.

ஆனால், தினசரி இந்த இரவு காப்பகங்களில் படுத்து உறங்குவோர் எண்ணிக்கை, 800 முதல், 900 வரை மட்டுமே. மீதமுள்ளோர் இரவு காப்பகங்களுக்கு வருவதில்லை. இதற்கான காரணம் குறித்து அறியவும், விரிவாக்க பகுதிகளை சேர்த்து, வீடுகள் இல்லாதோர் எவ்வளவு பேர் என, கண்டறியவும், சென்னை மாநகராட்சி புதிய கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்துள்ளது.

நான்கு மணி நேரம்:முதல்கட்டமாக தேனாம்பேட்டை, ராயபுரம் மண்டலங்களில் இன்று முதல், கணக்கெடுப்பு துவங்குகிறது. இரவு, 8:00 முதல், 12:00 மணி வரை, நான்கு மணிநேரத்திற்கு இந்த கணக்கெடுப்பு நடக்கும்.ஐந்து நாட்களில், இரண்டு மண்டலங்களிலும் கணக்கெடுப்பு முடியும். தேனாம்பேட்டை மண்டலத்தில், மாநகராட்சி துப்புரவு அலுவலர்கள் தலைமையில், சுகாதார ஆய்வாளர்கள், அடிப்படை சுகாதார பணியாளர்கள் கணக்கெடுப்பில் ஈடுபடுவர். ராயபுரம் மண்டலத்தில் தொண்டு நிறுவனங்கள் மூலம் கணக்கெடுப்பு நடக்கும்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:தேனாம்பேட்டை, ராயபுரம் மண்டலங்களில் தான் சாலையோரம் வசிப்போர் அதிகம். அதனால் அங்கு முதலில் கணக்கெடுக்கப்படுகிறது.

28 கேள்விகள்:இதில், 28 கேள்விகள் அடங்கிய ஒரு விண்ணப்பத்தை ஊழியர்கள் பூர்த்தி செய்ய வேண்டும். சாலையோர வாசியின் தனிப்பட்ட தகவல், நோய் பாதிப்பு, குடும்ப விவரம் உட்பட, அனைத்து விவரங்களும் சேகரிக்கப்படும்.விரிவாக்க பகுதிகளுடன் சேர்த்து, புதிய கணக்கெடுப்பில், சாலை ஓரம் வசிப்போர், 20 ஆயிரத்திற்கும் மேல் இருப்பர் என, எதிர்பார்க்கப்படுகிறது. கணக்கெடுப்பை பொறுத்து, கூடுதலாக இரவு நேர காப்பகங்கள் அமைக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

ஆண்டுக்கு ரூ.1.5 கோடி செலவு!

சென்னையில் இயங்கி வரும், 26 இரவு நேர காப்பகங்களில் தங்குவோருக்காக, உணவு, பாய், தலையணை, போர்வை உள்ளிட்ட பொருட்கள் வழங்கும் வகையில், மாநகராட்சி, ஆண்டுக்கு, 1.5 கோடி ரூபாய் வரை செலவு செய்கிறது.சுப்ரீம்கோர்ட் உத்தரவுப்படி, ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு, ஒரு இரவு காப்பகம் இருக்க வேண்டும். அதன்படி, சென்னையில், 65 லட்சம் மக்கள் தொகைக்கு, 65 காப்பகங்கள் தேவை. தற்போது இருப்பவை, 26 தான். அடுத்த வாரம், மேலும், நான்கு காப்பகங்கள் திறக்கப்படுகின்றன.

 

பெண்கள் வலிமையான சமுதாயத்தை உருவாக்க உறுதி ஏற்க வேண்டும் மாநகராட்சி ஆணையாளர் மதுமதி பேச்சு

Print PDF

தினத்தந்தி              20.12.2013

பெண்கள் வலிமையான சமுதாயத்தை உருவாக்க உறுதி ஏற்க வேண்டும் மாநகராட்சி ஆணையாளர் மதுமதி பேச்சு

பெண்கள் வலிமையான சமுதாயத்தை உருவாக்க உறுதி ஏற்க வேண்டும், என்று மாநகராட்சி ஆணையாளர் சோ.மதுமதி கூறினார்.

விழிப்புணர்வு நிகழ்ச்சி

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியின் சாலை பாதுகாப்பு படை மற்றும் நாட்டு நலப்பணித்திட்டங்கள் சார்பில் மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று மாலை காமராஜர் அரங்கில் நடந்தது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ஜே.மோகன்ராஜ் தலைமை தாங்கினார். பேராசிரியர் பாலமுருகன் வரவேற்று பேசினார்.

சிறப்பு அழைப்பாளர்களாக தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் சோ.மதுமதி, துணை போலீஸ் சூப்பிரண்டு நாராயணன், மாவட்ட தலைமை போக்குவரத்து காப்பாளர் ஜட்சன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

வலிமையான சமுதாயம்

நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் சோ.மதுமதி பேசியதாவது:–

பெண்கள் துணிச்சலாக செயல்பட வேண்டும். உரிமைகளை விட்டுக் கொடுக்க கூடாது. 50 ஆண்டுகளாக பெண் கல்வி நன்கு வளர்ச்சி அடைந்து உள்ளது. பெண்களின் வளர்ச்சிக்கு ஊடகங்களும் காரணம். வரதட்சணை, ஈவ்டீசிங், வன்கொடுமைக்கு எதிராக பெண்கள் தைரியமாக போராட வேண்டும். உளவியல் ரீதியாக மனவலிமை பெற வேண்டும். பெண்கள் தற்கொலை செய்வது என்பது பற்றி சிந்திக்கவே கூடாது.

இந்த கல்லூரி மாணவிகள் துணிச்சலானவர்கள் என்பதை நான் பலமுறை பார்த்து உள்ளேன். இங்கு வருவது எனக்கு மிகவும் பிடித்து உள்ளது. இன்றைய பெண்கள் உயர் அதிகாரிகளாகவும், இல்லத்தரசிகளாகவும் வருகின்றனர். ஆகையால் நீங்கள் வலிமையான சமுதாயத்தை அமைக்க மனதை தயார்படுத்த வேண்டும். அதற்கு நீங்கள் உறுதி ஏற்கவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் கல்லூரி துணைத்தலைவர் திவாகர், பேராசிரியர் தேவராஜன், கல்லூரி மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் பேராசிரியை ஜே.பூங்கொடி நன்றி கூறினார்.

 

அரசு மருத்துவமனையில் விரைவில் அம்மா உணவகம்

Print PDF

தினகரன்             19.12.2013

அரசு மருத்துவமனையில் விரைவில் அம்மா உணவகம்

மதுரை, : மதுரை அரசு மருத்துவமனையில் உள்ள அம்மா உணவகம் விரைவில் திறக்கப்பட உள்ளது. நேற்று கலெக்டர், மேயர், கமிஷனர், டீன் மற்றும் அதிகாரிகள் இந்த உணவக கட்டிடத்தை ஆய்வு செய்தனர்.

மதுரை அரசு மருத்துவமனையில் குழந்தைகள் வார்டு எதிரே அம்மா உணவக கட்டிடம் கட்டி தயார் நிலையில் உள்ளது. விரைவில் காணொலி காட்சி மூலம் முதல்வர் ஜெயலலிதா திறக்க உள்ளார். இதனை கலெக்டர் சுப்ரமணியன், மேயர் ராஜன்செல்லப்பா, டீன் மோகன், நிலைய மருத்துவ அதிகாரி பிரகதீஸ்வரன் மற்றும் அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். சமையலறை, உணவு பரிமாறும் இடம், தண்ணீர் உள்பட பல்வேறு வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

நோயாளிகள் கூறுகையில், மதுரை அரசு மருத்துவமனை க்கு அதிக எண்ணிக்கையில் நோயாளிகளும், அவர்களது உறவினர்களும் வருகின்றனர். எனவே கூடுதல் நபர்களுக்கு உணவு விநியோகம் செய்ய வேண்டும். சலுகை விலையில் மூன்று வேளையும் உணவு, நோயாளிகளுக்காக பார்சல் என சிறப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். இத்துடன் சுத்திகரிக்கப்பட்ட சூடான குடிநீர், மொபைல் போன்களுக்கு மின்சார சார்ஜ் செய்யும் வசதிகள் இங்கு ஒரு பகுதியில் அமைக்க வேண்டும் என்றனர்.

 


Page 62 of 841