Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

இயற்கையின் இலவசம் மழைநீர் சேமிக்க வலியுறுத்தல்

Print PDF

தினமலர்             16.12.2013

இயற்கையின் இலவசம் மழைநீர் சேமிக்க வலியுறுத்தல்

மதுரை: "இயற்கை கொடுத்த இலவசம் மழைநீர். அதை முறையாக சேமித்தால், கோடையில் ஏற்படும் தண்ணீர் பஞ்சத்தை தீர்க்கலாம்' என மழைநீர் சேகரிப்பு பயிற்சி பட்டறையில் தெரிவிக்கப்பட்டது.

மதுரை தானம் அறக்கட்டளை, சென்னை மழை இல்லம் சார்பில், மழைநீர் சேகரிப்பு, பயன்படுத்திய நீரை மீண்டும் பயன்படுத்துவது குறித்த பயிற்சி கருத்தரங்கு நடந்தது. தானம் வயலக திட்ட தலைவர் கனகவள்ளி, மழை இல்லம் அமைப்பின் இயக்குனர் சேகர் ராகவன் கூறியதாவது: இயற்கை நமக்கு இலவசமாக வழங்கும் மழைநீரை முறையாக சேமிக்காமல் வீணாக்குகிறோம். வெளிநாடுகளில் மழைநீரை தோட்டம், வாகனங்களை சுத்தம் செய்வதற்கும் பயன்படுத்துகின்றனர்.

தமிழகத்தில் மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அமைத்தும், அவை பராமரிக்கப்படாமல் காலி தொட்டிகளாகவே இருக்கின்றன. சென்னையில் பல வீடுகளில் ஆழ்குழாய், மழைநீர், கழிவுநீர் தேக்கி வைக்கும் வகையில், 3 பிரிவுகளாக தண்ணீர் தொட்டிகளை அமைக்கின்றனர். கழிவுநீரை மறுசுழற்சி செய்து அதை துணி துவைப்பதற்கும், மீண்டும் கழிவறைகளுக்கு பயன்படுத்தவும் முடியும். மக்களுக்கு விழிப்புணர்வு குறைந்து வரும் நிலையில், கட்டுமான பொறியாளர்களுக்கு மழைநீர் சேகரிப்பின் அவசியத்தை எடுத்துரைக்றோம், என்றனர். 

 

அம்மா' உணவகங்களுக்கு உணவு பாதுகாப்பு துறை உரிமம்

Print PDF

தினமலர்             16.12.2013

அம்மா' உணவகங்களுக்கு உணவு பாதுகாப்பு துறை உரிமம்

தமிழக அரசு நடத்தி வரும், அம்மா மலிவு விலை உணவகங்களுக்கு, உணவு பாதுகாப்பு துறை உரிமம் கோரி, விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டு உள்ளன. ஒரு வாரத்தில் உரிமம் கிடைக்கும் என, தெரிகிறது.

200 இடங்களில்

சென்னை மாநகராட்சியில், வார்டுக்கு ஒன்று என, 200 இடங்களில், அம்மா மலிவு விலை உணவகம் திறக்கப்பட்டு உள்ளது. ஐந்து ரூபாய்க்கு, பொங்கல், சாம்பார், எலுமிச்சை, கறிவேப்பிலை சாதங்கள், மூன்று ரூபாய்க்கு தயிர்சாதம்; ஒரு ரூபாய்க்கு இட்லி தரப்படுகிறது.குறைந்த விலையில், தரமான உணவு கிடைப்பதால், மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது. விரைவில், மூன்று ரூபாய்க்கு, இரண்டு சப்பாத்தி வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது.தமிழகத்தில், பிற மாநகராட்சிகளிலும் அம்மா உணவகம், செயல்பாட்டில் உள்ளது. சமீபத்தில், சென்னை அரசு பொது மருத்துவமனையிலும், அம்மா மலிவு விலை உணவகம் திறக்கப்பட்டு உள்ளது.

பிற மருத்துவமனைகளிலும், அம்மா மலிவு விலை உணவகம் திறக்க முயற்சி நடந்து வருகிறது.இந்நிலையில், அம்மா உணவகங்களுக்கு, உணவு பாதுகாப்புத் துறை மூலம், முறையான உரிமம் பெறும் முயற்சியில் அரசு ஈடுபட்டு உள்ளது.முதற்கட்டமாக, சென்னையில் உள்ள அம்மா உணவகங்களுக்கு உரிமம் கோரப்பட்டு உள்ளது. இதன்படி, 108 உணவகங்களுக்கு, தலா, 2,000 ரூபாய் செலுத்தி, மாநகராட்சி விண்ணப்பித்து உள்ளது.

ஒரு வாரத்தில்இந்த விண்ணப்பங்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர். ஒரு வாரத்திற்குள், உரிமம் கிடைக்கும் என, தெரிகிறது.படிப்படியாக, சென்னையில் உள்ள பிற அம்மா உணவகங்கள், பிற மாநகராட்சிகளில் உள்ள அம்மா உணவகங்களுக்கும், உணவு பாதுகாப்புத் துறை உரிமம் பெறப்படும் என, தெரிகிறது.ஓட்டல், உணவகம் உள்ளிட்ட உணவு சார்ந்த வியாபாரிகள், உணவு பாதுகாப்புத் துறையின் கீழ், பதிவு செய்தல், உரிமம் பெறுதல், உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டத்தில் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.இதன்படி, பதிவு செய்யவும், உரிமம் பெறவும், வியாபாரிகள் சுணக்கம் காட்டி வரும் நிலையில், அரசு எடுத்துள்ள இந்த முயற்சி, முன்மாதிரியாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

 

கோவில்பட்டி நகராட்சிக்குட்பட்ட அரசு அலுவலகம், பூங்கா சுவர்களில் அழகிய ஓவியங்கள்

Print PDF

தினகரன்            13.12.2013

கோவில்பட்டி நகராட்சிக்குட்பட்ட அரசு அலுவலகம், பூங்கா சுவர்களில் அழகிய ஓவியங்கள்

கோவில்பட்டி, : கோவில்பட்டியில் நகராட்சி பூங்கா உள்ளிட்ட நகராட்சிக்குட்பட்ட அலுவலக சுவர்களில் வண்ணமிகு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

கோவில்பட்டி நகரில் எட்டயபுரம் ரோட்டில் உள்ள நகராட்சி மேல்நிலை குடிநீர் தொட்டி வளாகம், பசுவந்தனை ரோட்டில் உள்ள நகராட்சி ராஜாஜி பூங்கா, அண்ணா பஸ்நிலையம், ராமசாமிதாஸ் பூங்கா மற்றும் நகராட்சிக்கு உட்பட்ட அலுவலக சுவர்களில் விளம்பர வால்போஸ்டர், சினிமா போஸ்டர்களின் ஆக்கிரமிப்பினால் சுவர்கள் பொலிவிழந்து காணப்பட்டன.

இந்நிலையில் நகராட்சிக்குட்பட்ட அலுவலகம் மற்றும் பூங்காக்களில் உள்ள சுவர்களில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களை அகற்றிவிட்டு ஓவியங்களை வரைய நகராட்சி கமிஷனர் சுல்தானா உத்தரவிட்டார். இதையடுத்து சுவர்களில் உள்ள போஸ்டர்ள் அகற்றப்பட்டது. பின் நகராட்சிக்குட்பட்ட ராஜாஜிபூங்கா, ராமசாமிதாஸ் பூங்கா, அண்ணா பஸ்நிலையம் மற்றும் அனைத்து அலுவலக சுவர்களிலும் வண்ணமிகு ஓவியங்கள் தத்ரூபமாக வரையப்பட்டுள்ளன.

இதில் பறவைகள், விலங்குகள், மலர்கள், நிலத்தில் விவசாயி மாடுகளை பூட்டி ஏர் உழும் காட்சி, கிணற்றில் இருந்து தண்ணீர் இறைக்கும் காட்சிகள் வரையப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி கிராமங்களில் அன்றைய காலங்களில் வீட்டின் முன்பு தானியங்களை வெயிலில் உலர வைத்திருக்கும்போது, அதனை ஏதாவது பறவைகள் வந்து கொத்தி தின்ன முயலும்போது, வீட்டுமுன்பு காவல் காக்கும் மூதாட்டிகள் தங்கள் காதில் அணிந்திருக்கும் தங்க பாம்படத்தை கழற்றி, தானியத்தை கொத்தி தின்னும் பறவைகள் மீது வீசுவதுபோன்ற தத்ரூபமாக காட்சிகளும், முல்லைக்கு தேர் கொடுத்த பாரி, நீதிகேட்டு மணியோசை எழுப்பி மனுநீதி சோழனிடம் நீதிகேட்டும் பசு என பல்வேறு நன்னெறி கதைகளை நினைவூட்டும் வகையில் வண்ணமிகு ஓவியங்கள் வரைப்பட்டுள்ளது.

இந்த ஓவியங்களை பார்த்து பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் அனைத்து தரப்பு மக்களும் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.

 


Page 64 of 841