Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

நாய், குரங்கு மட்டுமின்றி மாடுகளை பிடிக்கவும் தி.மலை நகராட்சி நிர்வாகம் புதிய முறை அமல்

Print PDF

தினமலர் 24.02.2010

நாய், குரங்கு மட்டுமின்றி மாடுகளை பிடிக்கவும் தி.மலை நகராட்சி நிர்வாகம் புதிய முறை அமல்

திருவண்ணாமலை:தி.மலையில் நாய், குரங்கு ஆகியவை மட்டுமின்றி, மாடுகளும் மீண்டும் பிடிக்கப்படும். சரியாக பணிகளை செய்யாததால் இனி நிரந்தர துப்புரவு பணியாளர்கள் கவுன்சிலர்கள் வசம் ஒப்படைக்கப்படுவார்கள். செட்டிகுளமேடு, கீழ்நாத்தூர் பகுதியில் தரைமட்ட நீர்தேக்க தொட்டி அமைக்கப்படும் என்று நகராட்சி சேர்மன் ஸ்ரீதரன் தெரிவித்தார்.திருவண்ணாமலையில் நாய், குரங்கு தொல்லை அதிகளவு காணப்படுகிறது. இது தொடர்பாக நேற்று மாலை நகராட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு நகராட்சி சேர்மன் ஸ்ரீதரன், துணைத்தலைவர் செல்வம் ஆகியோர் தலைமை வகித்தனர். நகராட்சி கமிஷனர் சேகர் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் வனத்துறையினர், சுகாதார ஆய்வாளர்கள், பிராணிகள் வதை மற்றும் துயர் துடைப்பு அமைப்பினரும் கலந்து கொண்டனர்.பின்னர், இது குறித்து நகராட்சி சேர்மன் ஸ்ரீதரன், துணைத்தலைவர் செல்வம், கமிஷனர் சேகர் ஆகியோர் கூறியதாவது:தி.மலையில் குரங்கு, நாய்களுடன் மீண்டும் மாடு தொல்லை காணப்படுகிறது. இது குறித்து பல தரப்பில் இருந்தும் அதிகளவில் புகார்கள் வருகின்றன. எனவே, வனத்துறை மூலம் தி.மலை நகரில் மார்ச் 2ம் தேதி முதல் குரங்குகள் பிடிக்கப்பட்டு, காட்டின் உட்பகுதியில் விடப்படும். அதேபோல், வனவிலங்கு நல மையம் மூலம் நாய்களும் பிடிக்கப்படும். பிடிக்கப்பட்ட நாய்களுக்கு வெறிநாய் தடுப்பு பூசியும், கருத்தடையும் செய்யப்பட்டு மீண்டும் பிடிக்கப்பட்ட இடத்தில் விடப்படும்.பிராணிகள் வதை மற்றும் துயர் துடைப்பு அமைப்பு மூலம் நகரில் ஏற்கனவே 62 மாடுகள் பிடிக்கப்பட்டன. இதன் மூலம் 62 ஆயிரம் ரூபாய் அபராதத்தொகை வசூல் செய்யப்பட்டது.

இந்த அமைப்பை சேர்ந்த ஊழியர்களுக்கு பல தரப்பில் இருந்தும் மாடு பிடிக்கும்போது மிரட்டல் வந்ததாக தெரிவித்தனர். அதனால் போலீஸ் பாதுகாப்புடன் மார்ச் 3ம் தேதி முதல் மீண்டும் மாடுகள் பிடிக்கும் பணி தொடங்கப்படும்.நாய் தொல்லை தொடர்பாக 04175-310817 என்ற டெலிபோன் எண்ணிலும், மாடு தொல்லை தொடர்பாக 98401 22654, குரங்கு தொல்லை தொடர்பாக 94433 68777 என்ற செல்போன் எண்ணிலும் புகார் செய்யலாம்.திருவண்ணாமலை நகராட்சியில் மொத்தம் 145 நிரந்தர துப்புரவு பணியாளர்கள் உள்ளனர். சாக்கடை அடைப்புகளை நீக்குவது உட்பட அடிப்படை சுகாதார பணிகளை இவர்கள் மேற்கொள்ளவில்லை என புகார்கள் வருகின்றன. எனவே, இவர்களை இனி அந்தந்த வார்டு கவுன்சிலர் கட்டுப்பாட்டின் கீழ் துப்புரவு பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தில் இது தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படும். சம்பந்தப்பட்ட கவுன்சிலர்கள், தங்கள் பகுதியில் ஒப்படைக்கப்பட்ட துப்புரவு பணியாளர்கள் சரியாக பணிகளை செய்தார்கள் என்று எழுதி கொடுத்தால்தான் ஒவ்வொரு மாதமும் அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படும்.

அதோடு, சரிவர பணிகளை செய்யாவிட்டால், அவர்களை வேறு நகராட்சி மாறுதல் செய்வது, பணிகளை செய்யவே மறுத்தால் அவர்களை பணி நீக்கம் செய்வது உட்பட கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.இப்போதே நகரில் கடும் வெயில் நிலவி வருகிறது. குடிநீர் பற்றாக்குறை ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் செட்டிகுளமேடு, கீழ்நாத்தூர் பகுதிகளில் ஒரு லட்சம் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்தேக்க தொட்டி உடனடியாக அமைக்கப்படும். தினமும் லாரி மூலம் இவைகளில் குடிநீர் ஊற்றப்பட்டு அங்கிருந்து சுற்றியுள்ள பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படும்.மேலும், நகரில் கொசுத்தொல்லையை கட்டுப்படுத்தும் வகையில் அதிநவீன மருத்து வாங்கப்பட உள்ளது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Last Updated on Wednesday, 24 February 2010 07:15
 

டீத்தூள் கலப்படம் குறித்து கடைகளில் ஆய்வு

Print PDF

தினமலர் 24.02.2010

டீத்தூள் கலப்படம் குறித்து கடைகளில் ஆய்வு

காரிமங்கலம்: காரிமங்கலம் பகுதியில் உள்ள கடைகளில் டீத்தூள் கலப்படம் குறித்து சுகாதார துறையினர் திடீர் ஆய்வு செய்தனர். காரிமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சரவணன் மற்றும் காரிமங்கல் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் ஜெகன்மோகன் ஆகியோர் தலைமையில், காரிமங்கலம் டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் சிவலிங்கம் ஆகியோர் முன்னிலையில் உணவு ஆய்வாளர் நாகராஜன், சுகாதார ஆய்வாளர்கள் ராமகிருஷ்ணன் மற்றும் கோபிநாதன் ஆகியோர் கொண்ட குழுவினர் காரிமங்கலம் பகுதியில் உள்ள கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில், கலப்பட டீத்தூள் மற்றும் தயாரிக்கப்பட்ட தேதி, காலாவதி தி முதலிய விபரங்கள் இல்லாத 2 கிலோ டீத்தூள் பறிமுதல் செய்யப்பட்டன. டீத்தூள் மாதிரி சேகரிக்கப்பட்டு உணவு பகுத்தாய்வு கூடத்துக்கு அனுப்பி சோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. போலி டீத்தூள் பயன்படுத்துவது குறித்து கடைக்காரர்களுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டன.

Last Updated on Wednesday, 24 February 2010 06:52
 

மாநகராட்சித் தேர்தல்: அரசு மனு தள்ளுபடி

Print PDF

தினமணி 23.02.2010

மாநகராட்சித் தேர்தல்: அரசு மனு தள்ளுபடி

பெங்களூர், பிப்.22: பெங்களூர் மாநகராட்சி மன்றத் தேர்தலை நடத்த கால அவகாசம் கோரி அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவகாசம் வேண்டுமானால் உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு அறிவுறுத்தியுள்ளது.

÷பெங்களூர் மாநகராட்சித் தேர்தலை மார்ச் 30-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க கர்நாடக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் பள்ளி, கல்லூரிகள் தேர்வு, சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் இருப்பதால் மார்ச் 30-ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க முடியாது.

எனவே, தேர்தலை நடத்த 2 மாதம் கால அவகாசம் வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் அரசு சிறப்பு மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது.

÷அந்த மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச் விசாரித்து வந்தது. அந்த மனு மீண்டும் திங்கள்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. கால அவகாசம் கோரி அரசு தாக்கல் செய்த மனுவை அந்த பெஞ்ச் தள்ளுபடி செய்தது. ÷

நீதிபதிகள் கூறியதாவது: பள்ளித் தேர்வு என காரணம் காட்டி தேர்தலை மீண்டும் மீண்டும் ஒத்திவைப்பதை ஏற்க முடியாது. தேவையானால் தேர்வை ஒத்திவைத்துக் கொள்ளுங்கள். தேர்தலை ஒத்திவைக்க உத்தரவிட முடியாது.

÷ இந்த வழக்கில் ஏற்கெனவே பலமுறை இந்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மீண்டும் உச்ச நீதிமன்றத்துக்கு வரத் தேவையில்லை. கால அவகாசம் வேண்டுமானால்,

உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து அவகாசம் பெற்றுக் கொள்ளலாம். அதற்கு உச்ச நீதிமன்றம் ஆட்சேபனை தெரிவிக்காது என்று அரசு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

முதல்வர் கருத்து: பெங்களூர் மாநகராட்சித் தேர்தல் தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு நகல் கிடைத்ததும் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நீதிமன்ற உத்தரவுப்படி தேர்தலை நடத்த அரசு எப்போதும் தயாராகவே உள்ளது. ஆனால் சில காரணங்களால் தேர்தலை நடத்த முடியாமல் தள்ளிப்போகிறது.

உச்ச நீதிமன்ற உத்தரவு மீது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அரசு செவ்வாய்க்கிழமை முடிவு எடுக்கும் என்றார். அமைச்சர் அசோக் கருத்து: அரசு தாக்கல் செய்த மனு மீது உயர் நீதிமன்றத்துக்குச் செல்லும்படிதான் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. எனவே, உயர்நீதிமன்றத்தில்

கால அவகாசம்கேட்டு மனு செய்வோம். தற்போது சி.பி.எஸ்.. போன்ற கல்வித் திட்டத் தேர்வுகள் துவங்கிவிட்டன. எனவே, தேர்வை ஒத்திவைக்க இயலாது. இதை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்து கால அவகாசம் கேட்போம். உயர் நீதிமன்றம் என்ன தீர்ப்பு அளிக்கிறதோ அதை செயல்படுத்துவோம் என்றார்.

காங்கிரஸ் கருத்து: காங்கிரஸ் தலைலவர்களான முன்னாள் மேயர்கள் ராமச்சந்திரப்பா, ரமேஷ் ஆகியோர் கூறியதாவது: பெங்களூர் மாநகராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் பல்வேறு கட்டங்களில் அரசுக்கு கண்டனம் தெரிவித்து தேர்தலை நடத்தும்படி உத்தரவிட்டுள்ளது. ஆனால் அரசு தேர்தலை தள்ளிவைக்க உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் மாறி, மாறி மனுத்தாக்கல் செய்து வருகிறது.

அப்படியிருந்தும் அரசின் மனுவை ஏற்க நீதிமன்றங்கள் தயாரில்லை. இனி எந்த முகத்தோடு அரசு நீதிமன்றத்துக்குச் செல்லும் என்று பார்ப்போம். தேர்தலை நடத்தி முடிக்கும்வரை ஓய மாட்டோம் என்றனர்.

Last Updated on Tuesday, 23 February 2010 10:15
 


Page 655 of 841