Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

பாதாள சாக்கடைக்கு பணம் கட்டினால்தான் பணி நடக்கும்' மாநகராட்சி மிரட்டலால் பொதுமக்கள் அதிர்ச்சி

Print PDF

தினமலர் 20.02.2010

'பாதாள சாக்கடைக்கு பணம் கட்டினால்தான் பணி நடக்கும்' மாநகராட்சி மிரட்டலால் பொதுமக்கள் அதிர்ச்சி

ஈரோடு: குடிநீர் குழாய் உடைப்பு என எந்த பணிக்கு சென்றாலும், "பாதாள சாக்கடை திட்டத்துக்கு "டிபாஸிட்' பணம் கட்டினால்தான் எந்த பணியும் நடக்கும்' என்று மாநகராட்சி மிரட்டுவதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

"ஈரோடு மாநகராட்சியுடன், காசிபாளையம், வீரப்பன்சத்திரம், பெரியசேமூர், சூரம்பட்டி ஆகிய நகராட்சிகளை இணைத்து பாதாளசாக்கடை திட்டம் செயல்படுத்த வேண்டும்' என்று உள்துறை அமைச்சர் ஸ்டாலின் 2006 டிசம்பர் 11ம் தேதி உத்தரவிட்டார். அதன்படி, 146 கோடியே 62 லட்சத்து 97 ஆயிரம் ரூபாய் மதிப்பில் பாதாள சாக்கடை திட்டம் மதிப்பிடப்பட்டுள்ளது. இயக்கவும், பராமரிக்கவும் 54 கோடியே 70 லட்சத்து 79 ஆயிரம் ரூபாய் ஆயுட்கால செலவாக கணக்கிடப்பட்டுள்ளது. இதை செயலாக்க உரிய நிதி பெற வழிவகைக்கு தமிழ்நாடு நகர்புற உட்கட்டமைப்பு நிதிநிறுவனம் மூலம் அறிவுரை கேட்கப்பட்டுள்ளது. அந்த அமைப்பு, "மானியமாக 10 கோடி, கூடுதல் மானியமாக 3.60 கோடி, கடனாக 71 கோடி, பொதுமக்கள் பங்கீடாக 61 கோடியே 89 லட்சம் வசூலிக்கலாம்' என்று அறிவுரை வழங்கியுள்ளது. மேலும், திட்ட மதிப்பீடு தவிர பணி நடக்கும் போது கடனுக்கு உண்டான வட்டி ஏழு கோடியே 32 லட்சம் ரூபாய் ஆகும். மொத்தம் 154 கோடி ரூபாய் செலவாகும்.

பொதுமக்களிடம் பங்கீட்டு தொகை வசூலிக்க கவுன்சிலர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். சிறிது காலம் அமைதியாக இருந்த பாதாள சாக்கடை திட்ட விவகாரம் இப்போது வெடிக்கத் துவங்கியுள்ளது. விலைவாசி உயர்வு காரணமாக கட்டுமானப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளதை காரணம் காட்டி, இரண்டாம் முறையாக திட்ட மதிப்பீட்டு தொகை அதிகரிக்கப்பட்டது. 240 கோடி ரூபாய் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டது. பாதாளசாக்கடை திட்டம் நான்கு சிப்பங்களாக பிரித்து பணி துவங்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக சிப்பம்-1, சிப்பம்-2 பணி ஏலம் விடப்பட்டது. இதில், இரண்டாம் கட்ட மதிப்பீட்டை விட சிப்பம்-1க்கு 22.38 சதவீதமும், சிப்பம் மூன்றுக்கு 28.90 சதவீதம் அதிகமாக ஏலம் கோரப்பட்டது.

இதற்கு கடந்த கூட்டத்தில் கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆயினும், ஏலத்துக்கு அனுமதி வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஏற்கனவே, திட்டமிடப்பட்ட தொகையை விட நூறு கோடி ரூபாய் அதிகரித்துள்ள போதும், பணிக்கான தீர்மானம் கொண்டு வரும்போதும் திட்ட மதிப்பீட்டை விட 28 சதவீதம் வரை கூடுதல் விலை வைத்தே ஏலம் விடப்படுகிறது. இதுமக்களுக்கு மேலும் வரிச்சுமையை அதிகரிக்கும். இந்நிலையில், குடிநீர் குழாய் உடைப்பு, வேறு ஏதேனும் பணிக்காக பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளை சந்திக்க சென்றால், "பாதாள சாக்கடை திட்டத்துக்கு "டிபாஸிட்' கட்டினால்தான் எந்த பணியும் நடக்கும்' என்று கூறி அதிகாரிகள் கறாராக கூறுகின்றனர். இதனால், பொதுமக்கள் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். ஏற்கனவே, கூடுதல் தொகையில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படும் நிலையில் பொதுமக்களிடம் மாநகராட்சி அதிகாரிகள் கறார் காட்டுவதால், மக்கள் மத்தியில் மேயர் குமார்முருகேஸ் செல்வாக்கை இழக்க நேரிடும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

Last Updated on Saturday, 20 February 2010 06:29
 

மதுரையில் 50 இடங்களில் சாலையோர இரு சக்கர வாகனம் நிறுத்துமிடங்கள்

Print PDF

தினமணி 19.02.2010

மதுரையில் 50 இடங்களில் சாலையோர இரு சக்கர வாகனம் நிறுத்துமிடங்கள்

மதுரை, பிப். 18: மதுரை மாநகரில் இரு சக்கர வாகனங்கள் திருடுபோவதைத் தவிர்க்கும் விதமாக, 50 இடங்களில் புதிய சாலையோர நிறுத்துமிடங்களை அமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதற்கான இடங்கள் குறித்த விவரப் பட்டியலை, மாநகர் போக்குவரத்து போலீஸôர் மாநகராட்சி நிர்வாகத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மதுரை நகரில் தற்போது மாநகராட்சி சார்பில், பெரியார் பஸ் நிலையம், ஆரப்பாளையம், மாட்டுத்தாவணி ஆகிய பகுதிகளில் இரு சக்கர வாகனக் காப்பகங்களும், 32 இடங்களில் வாகன நிறுத்துமிடங்களும் செயல்பட்டு வருகின்றன.

மேலும், வணிகப் பகுதிகள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போக்குவரத்து போலீஸôர் சார்பில், இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கு எவ்விதக் கட்டணமும் இல்லை.

இதனால், நிறுத்தப்படும் வாகனங்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே, நகருக்குள் இரு சக்கர வாகனங்கள் திருட்டும் அதிகரித்து வருகின்றன. இத்திருட்டைக் கண்காணிக்க, போலீஸôரும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

அனுமதி பெறாத நிறுத்தங்கள்: இந்நிலையில், மாநகரில் பல இடங்களில் அரசியல் பிரமுகர்கள் பெயர்களைக் கூறிக்கொண்டு, மாநகராட்சி அனுமதி பெறாமலேயே வாகன நிறுத்தும் இடம் என பலகை வைத்து, சிலர் வசூலில் ஈடுபட்டு வருவதாகவும் புகார்கள் எழுந்தன.

இவற்றைத் தவிர்க்க, மாநகராட்சி நிர்வாகம், போக்குவரத்து போலீஸôர் இணைந்து மேற்கொண்ட ஆலோசனைக் கூட்டத்தில், சலுகைக் கட்டணத்தில் (ஒரு ரூபாய் கட்டணம்), மாநகர் பகுதியில் வாகன நிறுத்தங்கள் ஏற்படுத்தலாம் என முடிவு மேற்கொள்ளப்பட்டது.

இது தொடர்பாக, மாநகர் பகுதிகளில் கோரிப்பாளையம், அழகர்கோவில், டவுன்ஹால் சாலை, நேதாஜி சாலை, பர்மா பஜார், கீழமாசி வீதி, தெற்குமாசி வீதி உள்ளிட்ட 14 வீதிகளில் 50 இடங்களில் வாகன நிறுத்தங்கள் அமைக்கலாம் என, மாநகராட்சி நிர்வாகத்துக்கு போலீஸôர் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

இதையடுத்து, சாலையோர வாகன நிறுத்தங்கள் அமைக்க, மாநகராட்சி நிர்வாகம் தற்போது தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. வாகன நிறுத்தத்துக்கான டெண்டரும் விரைவில் கோரப்படும் எனத் தெரிகிறது.

இது குறித்து, உதவி கமிஷனர் ரா. பாஸ்கரன் (வருவாய்) கூறுகையில், இதுபோன்ற நடவடிக்கையால், மாநகராட்சிக்கு வருவாய் அதிகரிக்கும். அதேநேரத்தில் வாகன நிறுத்தும் இடங்களில் வாகனங்களின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும்.

இதனால் வாகனத் திருட்டுகள் தடுக்கப்படும் என்றார்.

Last Updated on Friday, 19 February 2010 10:54
 

பிறபணிகளில் மாநகராட்சி பணியாளர்கள் மாநகராட்சி பணிகளில் பாதிப்பு:மாற்று ஏற்பாட்டிற்கு சங்கம் வேண்டுகோள்

Print PDF

தினமலர் 19.02.2010

பிறபணிகளில் மாநகராட்சி பணியாளர்கள் மாநகராட்சி பணிகளில் பாதிப்பு:மாற்று ஏற்பாட்டிற்கு சங்கம் வேண்டுகோள்

தூத்துக்குடி:மாநகராட்சி பணிக்கு சம்பந்தம் இல்லாத பணிகளில் ஊழியர்கள் ஈடுபடுவதால் மாநகராட்சி பணிகள் பாதிக்கப்படுவதாகவும் அதற்கு மாற்று ஏற்பாடு செய்யமாறு நகராட்சி நிர்வாக இயக்குனருக்கு அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தூத்துக்குடி மாநகராட்சி அனைத்து அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு பொதுக்குழு கூட்டம் மற்றும் தொடங்க விழா நடந்தது. கூட்டத்திற்கு தலைவர் சுடலைமுத்து தலைமை வகித்தார். செயலாளர் பெரியசாமி வரவேற்றார். கூட்டமைப்பு துணைத் தலைவர் சரவணன், அமைப்புப்பணியாளர் சங்கத் தலைவர் ராமலிங்கம், மாநில அமைப்பு செயலாளர் சந்தனராஜ், சுகாதார ஆய்வாளர் சங்கத்தை சேர்ந்த முருகேசன், நகரமைப்பு ஆய்வாளர்கள் சங்க காந்திமதி, பணி ஆய்வாளர் சங்க மணிகண்டகுமார், பொறியியல் சங்க சேகர், வாகன ஓட்டுநர் சங்க தலைவர் அன்பழகன், துணைத்தலைவர் ராஜசேகர், போத்திராஜ், கனகரத்தினசெல்வி, சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன், மேயர் கஸ்தூரி தங்கம், துணை மேயர் தொம்மை சேசுவடியான், திமுக., மாவட்ட செயலாளர் பெரியசாமி, சட்ட ஆலோசகர் சுபேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில், நகராட்சி, மாநகராட்சி அலுவலர்களை அரசு அலுவலர்கள் என அறிவிக்கவேண்டும். ஓய்வுபெற்ற மற்றும் மரணம் அடைந்த அலுவலர்கள் காரணமாக மாநகராட்சியில் ஏற்பட்டுள்ள பணியிடங்களை நிரப்ப 49 சதவிகித செலவின நிபந்தனையை தளர்வு செய்ய வேண்டும்.

மாநகராட்சி கண்காணிப்பாளர்களுக்கு அரசுத்துறை கண்காணிப்பாளர்கள் போன்று அடிப்படை ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும். மாநகராட்சி உதவி ஆணையாளர் பணியிடங்களில் அமைச்சுப் பணிசார்ந்த அலுவலரை நியமனம் செய்ய வேண்டும். சுகாதார ஆய்வாளர்களுக்கு உணவு ஆய்வாளர் பயிற்சி வழங்க வேண்டும். தூத்துக்குடி மாநகராட்சியில் உணவு ஆய்வாளர் பணியிடத்தை நிரப்ப வேண்டும்.

மாநகராட்சி பணிக்கு சம்பந்தம் இல்லாத தேர்தல், காப்பீட்டு திட்டம், குடும்ப அட்டை சரிபார்த்தல் போன்ற இதர பணிகளில் மாநகராட்சி அலுவலர்களை பயன்படுத்துவதால் மாநகராட்சியின் வரிவசூல் உள்ளிட்ட அன்றாட பணிகள் பாதிக்கப்படுகிறது. இதற்கு நகராட்சி நிர்வாக இயக்குநர் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Last Updated on Friday, 19 February 2010 07:32
 


Page 659 of 841