Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

மரங்களை வெட்டி சாய்க்கும் மாநகராட்சி

Print PDF

தினமலர் 12.02.2010

மரங்களை வெட்டி சாய்க்கும் மாநகராட்சி

கோவை: கோவை மாநகராட்சி பகுதியில் பூங்கா அமைப்பதற்காக, ஏழு மரங்கள் வேரோடு வீழ்த்தப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கோவை மாநகராட்சி 10வது வார்டுக்கு உட்பட்ட தனலட்சுமி நகரில் "ரிசர்வ் சைட்' உள்ளது. இங்கு வேம்பு, மே பிளவர் உட்பட பல வகை மரங்கள் இருந்தன. நன்கு வளர்ந்த பழமையான இந்த மரங்கள், அப்பகுதிக்கு நுரையீரல் போல அமைந்திருந்தன.

சுற்றிலும் கட்டடங்கள் அதிகரித்து வந்த நிலையில், இந்த மரங்கள் மட்டுமே அப்பகுதிக்கு பார்வையாகவும் இருந்தன. நேற்று காலையில், அந்த "ரிசர்வ் சைட்'டில் இருந்த மே பிளவர், புங்கன் உட்பட 7 மரங்கள் வேரோடு வீழ்த்தப்பட்டு, ஜே.சி.பி., இயந்திரத்தால் அந்த இடமே மண்ணால் நிரப்பப்பட்டிருந்தது. இதுபற்றி தகவலறிந்து, "ஓசை' அமைப்பாளர் யுகநாத் மற்றும் பலர் அங்கு சென்றனர். அவர்கள் விசாரித்ததற்கு, பூங்கா அமைப்பதற்காக காம்பவுண்ட் கட்ட அந்த மரங்களை வெட்டியிருப்பதாக அங்கிருந்தவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். மரங்களை வெட்டுவதற்கு வருவாய்த்துறையிடம் எந்த அனுமதியும் பெறவில்லை என்பதும் தெரியவந்தது.

இதுபற்றி, மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ராவிடமும் அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். பூங்கா அமைக்கப்பட்ட பின், அங்கு மீண்டும் புதிதாக மரக்கன்றுகள் வைக்கப்படும் என்று அவர் பதில் கூறியதாகத் தெரிகிறது. அனுமதியின்றி மரங்கள் வெட்டப்பட்டிருந்தால், அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதி கூறியுள்ளார்.தற்போது அங்கு நான்கு மரங்கள் மட்டுமே மிச்சமாகவுள்ளன. அவையும், "ஓசை' சுற்றுச்சூழல் அமைப்பினர் தலையிட்டதால் தப்பியுள்ளன.

சமீபத்தில் கோவை வந்த எம்.பி.கனிமொழி, "சங்கமம்' கலை நிகழ்ச்சிக்காக இடம் தேர்வு செய்ய சென்றபோது, "காந்தி பார்க்'கில் இருந்த ஒரு மரத்தை வெட்டலாம் என்று அமைச்சர்கள் சொன்ன ஆலோசனையையே புறக்கணித்தார் என்பதை அதிகாரிகளும், ஆளும்கட்சியினரும் அறிவர்.

மரங்கள் வெட்டப்பட்ட பகுதி அருகே மாநகராட்சி துணை மேயர் வீடும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
செம்மொழி மாநாட்டின் நினைவாக, கோவையில் "செம்மொழி மாநாட்டுப் பூங்கா' அமைக்க அரசு முயற்சி எடுக்கிறது. ஆனால், அதிகாரிகளும், ஆளும்கட்சியினரும் கூட்டணி சேர்ந்து மரங்களை வெட்டி வீழ்த்துகின்றனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு அவசர நடவடிக்கை எடுப்பது அவசியம்.

மீண்டும் மரம் வளர்ப்பேன் : மரங்கள் வெட்டப்பட்டது குறித்து மாநகராட்சி கிழக்கு மண்டல உதவி நிர்வாகப் பொறியாளர் பார்வதியிடம் கேட்டபோது, ""அங்கு பூங்கா மேம்படுத்தும் பணி நடக்கிறது. அங்கு மரங்களை வெட்ட எந்த அனுமதியும் தரவில்லை. நேரில் சென்று ஆய்வு செய்கிறேன்,'' என்றார். வார்டு கவுன்சிலர் தன்ராஜ் கூறுகையில், ""முதன் முதலாக எனது வார்டில் 30 லட்ச ரூபாய்க்கு பூங்கா வேலை நடக்கிறது. காம்பவுண்டு சுவர் கட்டுவதற்கு அந்த மரங்களை அகற்றியே ஆக வேண்டிய கட்டாயம் இருந்தது. காம்பவுண்டு கட்டிய பின், நிச்சயமாக அங்கு மரங்களை வளர்த்துக் காட்டுவேன்,'' என்றார்.

Last Updated on Friday, 12 February 2010 06:22
 

சென்னையில் 3 இடங்களில் நடைபாதை கடை வியாபாரிகளுக்கு ரூ.5 1/2 கோடியில் வணிக வளாகம்; மேயர் மா.சுப்பிரமணியன் தகவல்

Print PDF

மாலை மலர் 11.02.2010

சென்னையில் 3 இடங்களில் நடைபாதை கடை வியாபாரிகளுக்கு ரூ.5 1/2 கோடியில் வணிக வளாகம்; மேயர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னையில் 3 இடங்களில்      நடைபாதை கடை வியாபாரிகளுக்கு      ரூ.5 1/2 கோடியில் வணிக வளாகம்;      மேயர் மா.சுப்பிரமணியன் தகவல் சென்னை, பிப். 11-

நடைபாதை கடை வியாபாரிகளுக்காக தியாகராய நகர் பாண்டி பஜாரில் 3 மாடி வணிக வளாகம் கட்டப்படுகிறது. இதை மேயர் மா.சுப்பிரமணியன் இன்று பார்வையிட்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்னையில் முக்கிய இடங்களில் நடைபாதை கடைகள் இடையூறாக உள்ளன. சென்டிரல், எழும்பூர், பூங்கா நகர் ரெயில் நிலைய பகுதிகளில் உள்ள நடைபாதை கடைகள் அகற்றப்பட்டது. அந்த வியாபாரிகளுக்காக அல்லி குளத்தில் கடைகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளன.

தியாகராய நகரில் தியாகராயர் சாலை, உஸ்மான் சாலை, சிவப்பிரகாசம் சாலை, பனகல் பூங்கா, பாண்டி பஜார் பகுதி நடை பாதை கடை வியாபாரிகளுக்காக பாண்டி பஜாரில் ரூ. 4 கோடியே 30 லட்சம் செலவில் வணிக வளாகம் கட்டப்படுகிறது. இதில் தரை தளம் தவிர 3 மாடிகள் அமைக்கப்படுகிறது. மொத்தம் 692 கடைகள் இடம் பெறுகின்றன. இதில் லிப்ட் மற்றும் நவீன வசதிகள் இடம் பெறும். இந்த வணிக வளாகம் ஏப்ரல் மாதம் திறக்கப்படும்.

இது போல் புரசைவாக்கம், அயனாவரம் நடைபாதை வியாபாரிகளுக்காக பாலவாயல் மார்க்கெட் சாலையில் ரூ. 1 கோடியே 23 லட்சம் செலவில் 332 கடைகள் கொண்ட வணிக வளாகம் கட்டப்படுகிறது. இது மார்ச் மாதம் கட்டி முடிக்கப்படும்.

இது தவிர ராயபுரம், எம்.சி.சாலை, சுழல்மெத்தை சாலை நடைபாதை கடை வியாபாரிகளுக்கும், மாட்டு வண்டி கடை வியாபாரிகளுக்கும் எம்.சி. சாலையில் ரூ. 25 லட்சம் செலவில் வணிக வளாகம் கட்டப்படும். இதில் 125 கடைகள் இருக்கும்.

இவ்வாறு மேயர் மா. சுப்பிரமணியன் கூறினார்.

மண்டல தலைவர் ஏழுமலை, மண்டல அதிகாரி ஞானமணி, கட்டிட துறை மேற்பார்வை என்ஜினீயர் குமரேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

 

அரியலூர் பேருந்து நிலையத்தை புதுப்பிக்க நகர்மன்றம் ஒப்புதல்

Print PDF

தினமணி 11.02.2010

அரியலூர் பேருந்து நிலையத்தை புதுப்பிக்க நகர்மன்றம் ஒப்புதல்

அரியலூர்
, பிப். 10: அரியலூர் பேருந்து நிலையத்தின் ஓடுதளத்தை ரூ. 1 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்க அரியலூர் நகர்மன்றம் ஒப்புதல் அளித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

அரியலூர் நகராட்சியின் அவசரக் கூட்டம் கூட்டமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு நகர்மன்றத் தலைவர் விஜயலட்சுமி செல்வராஜன் தலைமை வகித்தார்.

கூட்டத்தில் நகர்மன்ற நிர்வாக அலுவலர் த. சமயச்சந்திரன், தலைமை அலுவலர் என். குமரன் ஆகியோர் பேசியது:

அரியலூர் நகராட்சி மாவட்டத் தலைநகராக இருப்பதால், நாள்தோறும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பேருந்து நிலையத்துக்கு வந்து செல்கின்றனர். பேருந்து நிலையத்தை மேம்படுத்தும் வகையில், எடுக்கப்பட்ட தொடர் நடவடிக்கையின் காரணமாக, மாநில நிதிக் குழு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இடைவெளி நிரப்பும் நிதி மற்றும் பராமரிப்பு இடைவெளி நிரப்பும் நிதி திட்டத்தின் கீழ் ரூ.ஒரு கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதில் ரூ.70 லட்சம் நகராட்சிக்கு மானியமாக கிடைக்கும். எஞ்சியுள்ள தொகை ரூ. 30 லட்சத்தை நகராட்சியின் பொது நிதியிலிருந்து அளிக்க மன்றம் அங்கீகாரம் வழங்க வேண்டும் என்றனர்.

இதையடுத்து, எஞ்சியுள்ள தொகையான ரூ. 30 லட்சத்தை வழங்க நகர்மன்றம் ஒப்புதல் அளித்து தீர்மானம் நிறைவேற்றியது.

கூட்டத்தில் நகர்மன்ற உறுப்பினர்கள் த. ராமமூர்த்தி, நா. பாபு, .பி. மணிவண்ணன், எஸ்.எம். சந்திரசேகர், ரா. ராமு, மு. ராஜா, மாலா..தமிழரசன், கோ. தவமணி, . வைதேகி, . மலர்கொடி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Last Updated on Thursday, 11 February 2010 11:12
 


Page 670 of 841