Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

மாநகராட்சி பணியாளர்களுக்கு யோகா பயிற்சி

Print PDF

தினமலர் 05.02.2010

மாநகராட்சி பணியாளர்களுக்கு யோகா பயிற்சி

சென்னை:இந்தியாவில் முதன் முறையாக, சென்னை மாநகராட்சி பணியாளர்களுக்கு, 18 லட்ச ரூபாய் செலவில், யோகா பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.மாநகராட்சி அலுவலக வளாகத்தில், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான மருத்துவப் பரிசோதனை மற்றும் யோகா பயிற்சியை, மேயர் சுப்ரமணியன் நேற்று துவக்கி வைத்தார். அவர் பேசியதாவது:

மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவித்தபடி, மாநகராட்சி அலுவலர்கள் , பணியாளர்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் யோகா பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இந்தியாவில் முதன் முறையாக, சென்னை மாநகராட்சி சார்பில், 18 ஆயிரம் பணியாளர்களுக்கு, 18 லட்ச ரூபாய் செலவில், யோகா பயிற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன.

முதற்கட்டமாக, மாநகராட்சி ரிப்பன் கட்டடத்தில் பணிபுரியும் மன்றத்துறை, பொது, மின்சாரம், கல்வி, இயந்திரப் பொறியியல், திடக்கழிவு என ஆறு துறைகளைச் சார்ந்த 250 பணியாளர்களுக்கு யோகா பயிற்சிகள் வழங்கப்பட்டன.அதைத் தொடர்ந்து, மற்ற துறைகளைச் சார்ந்த அலுவலர்களுக்கும் படிப்படியாக பயிற்சிகள் வழங்கப்படும். இப்பயிற்சிகள் மனவளக்கலை மன்றம் மூலம் வழங்கப்படுகிறது.

முதலில் 15 பயிற்சியாளர்கள் மூலம் யோகா பயிற்சி வழங்கப்பட்டது. தினமும் 2 மணி நேரம் என ஆறு நாட்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படும்.பணியாளர்களுக்கு மருத்துவப் பரிசோதனை அட்டையும் வழங்கப்படுகிறது. அதில், அவர்கள் பற்றிய மருத்துவக் குறிப்புகள் இடம்பெறும். இதில், ரத்தப் பரிசோதனை, வாய், மூக்கு, சிறுநீரகம் உள்ளிட்ட பல்வேறு சோதனைகள் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு மேயர் பேசினார்.

Last Updated on Friday, 05 February 2010 06:25
 

லாரி, ஆம்னி பஸ் உரிமையாளர்களுடன் மாநகராட்சி கமிஷனர் ஆலோசனை

Print PDF

தினமணி 04.02.2010

லாரி, ஆம்னி பஸ் உரிமையாளர்களுடன் மாநகராட்சி கமிஷனர் ஆலோசனை

மதுரை, பிப். 3: தனியார் லாரி மற்றும் ஆம்னி பஸ் உரிமையாளர்களுடன் மாநகராட்சி கமிஷனர் எஸ்.செபாஸ்டின் புதன்கிழமை ஆலோசனை நடத்தினார்.

மதுரை நகருக்குள் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகள் வந்துசெல்கின்றன. வடமாநிலங்களைச் சேர்ந்த 300}க்கும் மேற்பட்ட லாரிகள் நகருக்குள் வருவதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.

இதையடுத்து, பார்சல் லாரி மற்றும் ஆம்னி பஸ் நிறுத்தங்களை நகருக்கு வெளியே கொண்டு செல்வதற்காக, மத்திய அமைச்சர் மு.. அழகிரி முயற்சியால் ரூ.2 கோடி மதிப்பில் மாட்டுத்தாவணி, கோச்சடை, அவனியாபுரம் பகுதிகளில் லாரி நிறுத்தும் இடங்கள் அமைக்கப்பட்டன. இங்கு சில வசதிகள் இல்லாததால், லாரிகள் அங்கு நிறுத்தப்படாமல் இருந்து வந்தது.

இதுதொடர்பாக தனியார் லாரி மற்றும் ஆம்னி பஸ் உரிமையாளர்களுடன் மாநகராட்சி கமிஷனர் புதன்கிழமை ஆலோசனை நடத்தினார்.

இதன் முடிவில், நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக தனியார் லாரி மற்றும் ஆம்னி பஸ் நிறுத்தங்களை மாட்டுத்தாவணி பகுதிக்கு மாற்றம் செய்ய சங்க உரிமையாளர்கள் ஒப்புதல் அளித்தனர்.

தனியார் லாரி சங்க நிர்வாகிகள், லாரி பார்சல் வாகனங்களை மாட்டுத்தாவணி மற்றும் கோச்சடை பகுதிகளில் நிறுத்துவதற்கு ஒத்துழைப்புத் தருவதாக கமிஷனரிடம் உறுதியளித்தனர். மேலும், அப்பகுதியில் லாரி புக்கிங் ஆபீஸ் அமைப்பதற்கு தரை வாடகை குறைந்த அளவில் நிர்ணயம் செய்யுமாறும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

அதேபோல் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் மாட்டுத்தாவணியில் இட ஒதுக்கீடு செய்து தந்தால் மாற்றம் செய்வதற்கு தயாராக உள்ளதாகவும், தரை வாடகை குறித்து சங்க நிர்வாகிகளுடன் கலந்துபேசி முடிவு செய்வதாகவும் தெரிவித்தனர்.

ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைப் பொறியாளர் கே.சக்திவேல், உதவி கமிஷனர் (வருவாய்) ரா.பாஸ்கரன், போலீஸ் உதவி கமிஷனர் (போக்குவரத்து) மகுடபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Last Updated on Thursday, 04 February 2010 11:04
 

மாநகராட்சி மின் மயானங்களில் கூடுதல் வசூல்! : ஆய்வு நடத்த கமிஷனர் முடிவு

Print PDF

தினமலர் 04.02.2010

மாநகராட்சி மின் மயானங்களில் கூடுதல் வசூல்! : ஆய்வு நடத்த கமிஷனர் முடிவு

கோவை: கோவை மாநகராட்சி மின் மயானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. அதிகாரிகள் குழுவை அனுப்பி ஆய்வு நடத்த, கமிஷனர் முடிவு செய்துள்ளார். கோவை மாநகராட்சி மின் மயானங்கள், நகரில் சொக்கம்புதூர், ஆத்துப் பாலம், பாப்பநாயக்கன் பாளையம் பகுதிகளில் உள்ளன.

ஒவ்வொரு மின் மயானத்திலும் தினமும் ஆறு பிரேதங்கள் வரை எரியூட்டப்படுகின்றன. இவற்றின் பராமரிப்பு பொறுப்பு தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பிரேதம் எரியூட்ட 750 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பாப்பநாயக்கன்பாளையத்திலுள்ள மின் மயானம் தவிர, மற்ற இரு மின் மயானங்களில் பிரேதம் எரியூட்ட, உறவினர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

வேறுவழியின்றி நகரவாசிகள் பலரும் மின் மயானத்தையே பயன்படுத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.
சுடுகாட்டில் பிரேதம் எரிக்க விறகு, பருத்திக்கொட்டை, டீசல் அல்லது மண்ணெண்ணை உள்ளிட்டவற்றை கொண்டு ஆள் வைத்து எரிக்க அதிக செலவு ஏற்படுவதால், மின் மயானத்தையே நாடுகின்றனர். அப்போது, கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

இது குறித்து மின் மயான பொறுப்பாளர் கூறியதாவது: சொக்கம்புதூர் மற்றும் ஆத்துப்பாலம் மின் மயான பராமரிப்பு பொறுப்பை, "ஜூவாலா எக்யூப்மென்ட்ஸ் அண்ட் கன்சல்டன்சி' என்ற தனியார் நிறுவனம் கான்ட்ராக்ட் எடுத்துள்ளது. பிரேதம் எரியூட்ட மாநகராட்சி நிர்ணயம் செய்த 750 ரூபாய் மட்டும் வசூலிப்பது சாத்தியமற்றது. காரணம், வீடு மற்றும் மருத்துவமனைகளுக்கு எங்களது ஆம்புலன்சை அனுப்பி பிரேதத்தை மயானத்துக்கு எடுத்து வர, 7 கி.மீ.,தொலைவு வரை 1,500 ரூபாய் வசூலிக்கிறோம். பல வழிகளிலும் உதவி செய்கிறோம். இதனால், சற்று கூடுதலாக வசூலிக்க வேண்டியிருக்கிறது. மற்றபடி அநியாய கட்டணம் ஏதும் எங்களால் வசூலிக்கப்படுவதில்லை. காலை 8.00 முதல் மாலை 4.00 மணி வரை முன்பதிவு செய்கிறோம். மின் மயானத்தில் ஒரு நாளைக்கு ஆறு பிரேதங்கள் வரை எரிக்கலாம். சொக்கம்புதூரிலுள்ள மின் மயானத்தில், ஒரு எரியூட்டு இயந்திரம் பழுதாகியுள்ளது. இதை சரிசெய்யும் பணி நடக்கிறது. பிரேதத்தை மயானத்துக்கு எடுத்து வர தனியார் ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள் வேண்டுமானால் அதிக தொகை கேட்டிருக்கலாம். அந்தச் செலவையும், மின் மயானச் செலவையும் ஒப்பிட்டு ஆயிரக்கணக்கில் கூடுதலாக செலவாவதாக யாராவது தெரிவித்தால் அது தவறு.

இவ்வாறு, மின்மயான பொறுப்பாளர் தெரிவித்தார். அதிகரித்து வரும் புகார் காரணமாக மின் மயான பராமரிப்பு பொறுப்பை தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைப்பது குறித்து மாநகராட்சி ஆலோசித்து வருகிறது. கூடிய விரைவில் மன்ற கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என கூறப்படுகிறது. மின் மயான கட்டணம் தொடர்பான புகார் குறித்து, கோவை மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா கூறுகையில், ""சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் உதவிக் கமிஷனர்களை அனுப்பி நேரடி ஆய்வு மேற்கொள்ளப்படும். அதிக கட்டணம் வசூலிக்கப்படுவது உறுதி செய்யப்பட்டால் கான்ட்ராக்ட் ரத்து செய்யப்படும்,'' என்றார

Last Updated on Thursday, 04 February 2010 06:31
 


Page 678 of 841