Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

சாலைகளில் திரியும் கால்நடைகளால் விபத்து மாநகராட்சி மூலம் கடும் நடவடிக்கை எடுக்க முடிவு

Print PDF
தினமலர் 20.01.2010

சாலைகளில் திரியும் கால்நடைகளால் விபத்து மாநகராட்சி மூலம் கடும் நடவடிக்கை எடுக்க முடிவு

திருநெல்வேலி:சாலைகளில் திரியும் கால்நடைகளால் விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்கும் வகையில் மாநகராட்சி மூலம் கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் பிராணிகள் வதை தடுப்பு சங்க நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. கலெக்டர் ஜெயராமன் தலைமை வகித்தார்.

போக்குவரத்துக்கு இடையறாக சாலைகளில் திரியும் கால்நடைகளால் அடிக்கடி சாலை விபத்துக்கள் நடக்கிறது. இதனை தவிர்க்கும் பொருட்டு இனி வரும் காலங்களில் கால்நடை உரிமையாளர்கள் தங்கள் தொழுவங்களில் வைத்து கால்நடைகளை வளர்க்க வேண்டும். இதனை மீறி சாலைகளில் திரியும் கால்நடைகளை மாநகராட்சி மூலம் கைப்பற்றி காப்பகங்களில் அடைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த கால்நடைகளுக்கு அபராத தொகையும், பராமரிப்பு தொகையும் உரிமையாளர் களிடமிருந்து வசூலிக்கப்படும். சில நேரங்களில் சாலைகளில் நடமாடும் நாய்கள் விபத்துக்குள்ளாகி அப்புறப்படுத்தாமல் அப்படியே சாலையில் கிடக்கிறது.அப்போது பொது சுகாதாரத்தை பேணும் வகையில் சுத்தம் செய்ய பிராணிகள் வதை தடுப்பு சங்க செயலாளர் செல்போன் 94434 86473, 0462 - 2552102 என்ற எண்களில் தொடர்பு கொள்ள வேண்டும்.

சாலைகளில் நடக்கும் விபத்துக்களை தடுக்க கால்நடை வளர்ப்போர் ஒத்துழைப்பு நல்க கேட்டு கொள்ளப்பட்டது.இதில் டி.ஆர்.ஓ ரமண சரஸ்வதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி- பொறுப்பு) திரவியம், கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் ராமானுஜம், சங்க செயலாளர், நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Last Updated on Wednesday, 20 January 2010 10:39
 

திருப்பூர் மாநகராட்சிக்கு பொறியாளர்கள் நியமனம்

Print PDF

தினமலர் 20.01.2010

திருப்பூர் மாநகராட்சிக்கு பொறியாளர்கள் நியமனம்

திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சியில் காலியாக இருந்த பொறியாளர் பணியிடத்துக்கு, நகராட்சியில் பணியாற்றிய இளம்நிலை பொறியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். திருப்பூர் மாநகராட்சியில் 16 பொறியாளர் பணியிடங்கள் உள்ளன. காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப மாநகராட்சி நிர்வாகம் தீர்மானித்தது. பதவி உயர்வு மூலம் இளநிலை பொறியாளர்களை நிரப்ப, தகுதியான பணியாளர்கள் இல்லாததால், டெபுடேஷன் மூலம் நகராட்சிகளில் இருந்து இளநிலை பொறியாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, விருத்தாசலம் நகராட்சியில் பணியாற்றிய பழனி; மேட்டுப்பாளையம் நகராட்சியில் இருந்து சேகர்; மேட்டூர்டேம் நகராட்சியில் இருந்து முனியாண்டி ஆகிய இளநிலை பொறியாளர்கள் டெபுடேஷன் மூலம் திருப்பூர் மாநகராட்சி பொறியாளர்களாக நியமிக்கப்பட்டனர். இவர்களில் பழனி பொறுப்பேற்றுள்ளார். மாநகராட்சியில் உள்ள 16 பொறியாளர்கள் பணியிடத்துக்கு, 15 பாறியாளர்கள் பணியில் உள்ளனர். இன்னும் ஒரு பொறியாளர் பணியிடம் காலியாக உள்ளது. இந்நிலையில், டிவிஷன் வாரியாக பொறுப்பு வகித்து வந்த பொறியாளர்களில் பலரும் வேறு டிவிஷன்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

Last Updated on Wednesday, 20 January 2010 10:31
 

மூலக்கரையில் நவீன எரிவாயு தகன மேடை திறப்பு

Print PDF

தினமணி 20.01.2010

மூலக்கரையில் நவீன எரிவாயு தகன மேடை திறப்பு

மதுரை, ஜன.19: மதுரை மூலக்கரையில் ரூ.2.08 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள நவீன எரிவாயு தகன மேடையை செவ்வாய்க்கிழமை மேயர் கோ.தேன்மொழி திறந்து வைத்தார்.

மூலக்கரையில் அமைக்கப்பட்டுள்ள நவீன எரிவாயு தகன மேடை திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு மாநகராட்சி கமிஷனர் எஸ்.செபாஸ்டின், துணை மேயர் பி.எம். மன்னன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் கமிஷனர் எஸ்.செபாஸ்டின் பேசியதாவது:

உள்ளாட்சி அமைப்புகளிலுள்ள மயானங்களை மேம்படுத்த துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதையொட்டி, மதுரை மாநகராட்சியில் உள்ள மூலக்கரை மயானம் சுமார் 2.70 ஏக்கர் பரப்பில் ரூ.2.08 கோடி மதிப்பில் நவீன முறையில் அமைக்கப்பட்டுள்ளது.

எழில்மிகு தோற்றத்துடனும், சுற்றுச்சூழல் பாதிக்கப்படாத வகையிலும் 100 அடி உயரத்துக்கு மேல் புகைப்போக்கி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர எரியூட்டப்படும் சடலத்தில் இருந்து சாம்பல் வெளியேறாமல் புகை மட்டும் வெளியேறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் வசதிக்காக நவீன குளியலறைகள், கழிப்பறை, வாகன நிறுத்துமிடங்கள், முடி எடுக்கும் இடம், சமையலறை, தொலைபேசி மற்றும் குளிர் வசதியுடன் ஆம்புலன்ஸ் வாகனம், வாகனம் சுத்தம் செய்யும் மையம் என அனைத்து வசதிகளும் இங்கு உள்ளது.

ஒரேநேரத்தில் இரு சடலங்களை எரிக்கலாம். எரியூட்டுவதற்கு வாகன வசதி உள்பட அனைத்தும் சேர்த்து ரூ.1,350 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி எல்லையைத் தாண்டி கொண்டுவரப்படும் சடலத்துக்கு ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.5 மட்டும் கூடுதலாக கட்டணம் வசூல் செய்யப்படும் என்றார்.

மேயர் கோ.தேன்மொழி பேசுகையில், திமுக அரசு ஏழை மக்களுக்கு கருவறை முதல் கல்லறை வரை எல்லா உதவிகளையும் செய்து வருகிறது. இந்த மயானத்தைப் பொதுமக்கள் தூய்மையாகவும், சுகாதாரமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினர் என்.நன்மாறன், மண்டலத் தலைவர்கள் குருசாமி, இசக்கிமுத்து, மாணிக்கம், தலைமைப் பொறியாளர் சக்திவேல், வேலைக்குழுத் தலைவர் கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Last Updated on Wednesday, 20 January 2010 10:31
 


Page 700 of 841