Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

கோவை மாநகராட்சி பள்ளி மாணவிகளின் ஆய்வு கட்டுரை குழந்தைகள் மாநாட்டிற்கு தேர்வு

Print PDF

தினகரன்             04.12.2013

கோவை மாநகராட்சி பள்ளி மாணவிகளின் ஆய்வு கட்டுரை குழந்தைகள் மாநாட்டிற்கு தேர்வு

கோவை, : கோவை மாநகராட்சி பள்ளி மாணவிகளின் ஆய்வு கட்டுரை ஈரோட்டில் நடக்கவுள்ள மாநில அளவிலான தேசிய குழந்தைகள் மாநாட்டிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

மாநில அளவிலான தேசிய குழந்தைகள் மாநாடு வரும் 7ம் தேதி முதல் 9ம் தேதி வரை ஈரோடு மாவட்டத்தில் நடக்கவுள்ளது. இதற்கான மாவட்ட அளவிலான போட்டி கோவை எஸ்.என்.எஸ் கல்லூரியில் கடந்த மாதம் 9ம் தேதி நடந்தது. இதில் கோவை ரங்கநாதபுரம் மாநகராட்சி பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் வித்யபிரியா, தீபா ஸ்ரீ, கஸ்தூரி, பாத்திமா, வித்யா ஆகி யோரின் ஆய்வு கட்டுரை தேர்வு செய்யப்பட்டது.

தற்போது இந்த மாணவிகளின் மனித ஆற்றல் என்ற தலைப்பின் கீழ் ‘மனித சமுதாயம் நோய்களை நோக்கி செல்கிறது’ என்ற ஆய்வு கட்டுரை மாநில அளவிலான தேசிய குழந்தைகள் மாநாட்டிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த கட்டுரையில் துரித உணவுகளை சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து கருத்துகள் உள்ளது.

மேலும், இம்மாணவிகள் ரத்தினபுரி பகுதியில் துரித உணவுகளை சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து துண்டு பிரசுரங்களையும் தற்போது வினியோகித்து வருகின்றனர். இந்த மாநில அளவிலான மாநாட்டில் வெற்றி பெறும் பட்சத்தில் மாணவிகளின் ஆய்வு கட்டுரை 21வது தேசிய அளவிலான குழந்தைகள் மாநாட்டிற்கு தேர்வு செய்யப்படும்.

 

ரிப்பன் மாளிகை 100வது ஆண்டு விழா ‘நேற்று இன்று நாளை’ குறும்படம் விரைவில் வெளியீடு

Print PDF

தினகரன்             04.12.2013

ரிப்பன் மாளிகை 100வது ஆண்டு விழா ‘நேற்று இன்று நாளை’ குறும்படம் விரைவில் வெளியீடு

சென்னை, : மாநகராட்சி செயல்படும் ரிப்பன் மாளிகைக்கு கடந்த 26ம் தேதியுடன் 100 வயது முடிந்தது. இதையொட்டி ரிப்பன் மாளிகை குறித்த குறும்படம் விரைவில் வெளியிடப்படுகிறது.

ரிப்பன் மாளிகை 1909 டிசம்பரில் அடிக்கல் நாட்டப்பட்டு, 1913 நவம்பர் 26ல் கட்டி முடிக்கப்பட்டது. இங்கு மாநகராட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு, ஜவஹர்லால் நேரு நகர புனரமைப்பு திட்டத்தின் கீழ் 2009 அக்டோபரில் புனரமைப்பு பணி தொடங்கியது. இந்த பணி, 2013 நவம்பர் 26ம் தேதிக்குள் முடிந்து, நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் என்று மேயர் சைதை துரைசாமி 2 ஆண்டுகளுக்கு முன்பே கூறினார்.

கடந்த மாதம் 26ம் தேதியுடன் ரிப்பன் மாளிகை கட்டப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைந்தது. ஆனால், திட்டமிட்டபடி புனரமைப்பு பணிகள் முடியாததால், விழா கொண்டாடப்படவில்லை. ரிப்பன் மாளிகை 4 ஆண்டுகளில் கட்டி  முடிக்கப்பட்டது. ஆனால், புதுப்பிக்கும் பணி 2009ல் தொடங்கி 4 ஆண்டுகளை தாண்டியும் 50 சதவீதம் கூட முடியவில்லை.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:

ரிப்பன் மாளிகையின் முழு வரலாறையும் விளக்கும் வகையில், குறும்படம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த குறும்படத்துக்கு ‘நேற்று இன்று நாளை‘ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. குறும்படத்தை திரையிட அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தால் வரும் சனிக்கிழமை ரிப்பன் மாளிகையில் குறும்படம் திரையிடப்படும். மேலும், டிவி சேனல்களிலும் திரையிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும், அன்றைய தினம் சிறிய அளவில், நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் என்றும் மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

 

நெல்லை டவுனில் பூங்காவை சீரமைக்க வேண்டும் மேயரிடம், பொது மக்கள் கோரிக்கை

Print PDF

தினத்தந்தி             04.12.2013

நெல்லை டவுனில் பூங்காவை சீரமைக்க வேண்டும் மேயரிடம், பொது மக்கள் கோரிக்கை

நெல்லை டவுனில் உள்ள பூங்காவை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். நெல்லை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், நேற்று பல்வேறு பகுதி பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை மேயர் விஜிலா சத்தியானந்திடம் கொடுத்தார்கள். நெல்லை டவுன் கோடீசுவரன் நகரை சேர்ந்த சண்முக சுப்பிரமணியன் மற்றும் பொது மக்கள் கொடுத்த மனுவில் கூறிஇருப்பதாவது:–

பூங்கா சீரமைப்பு

நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட கோடீசுவரன் நகர் 10–வது குறுக்குத்தெருவில் பூங்காவுக்கு ஒதுக்கப்பட்டு உள்ள சுமார் 7 ஆயிரம் சதுர அடி இடத்தில் கருவேல மரங்களும், புதர்களும் மண்டிக்கிடக்கின்றன. இந்த பகுதி விஷப்பாம்புகளின் உறைவிடமாக உள்ளது. எனவே இந்த பகுதியில் உள்ள புதர்களை அகற்றி, பூங்காவை மேம்படுத்த வேண்டும் என்று கூறிஉள்ளனர்.

எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் மேயரிடம் கொடுத்த மனுவில், நெல்லை 41–வது வார்டு நயினார்குளம் தெருவில் பாதாள சாக்கடை பராமரிப்பு பணிக்காக தோண்டப்பட்ட சாலைகள் சரிவர நிரப்பப்படாமல், போதுமான வாறுகால் வசதி இல்லாமல் கழிவுநீர் மழை நீருடன் கலந்து வீதியில் தேங்கி உள்ளது. எனவே இதை உடனடியாக சரிசெய்ய வேண்டும்’ என்று கூறப்பட்டு உள்ளது.

சிமெண்டு சாலை

11–வது வார்டு கவுன்சிலர் வசந்தா ஜெகதீசுவரன் கொடுத்த மனுவில், திம்மராஜபுரம் பிள்ளையார் கோவில் தெருவில் சிமெண்டு சாலை அமைக்க திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது. ஆனால் தற்போது பாதி சிமெண்டு சாலையும், மற்றொரு பாதி தார் ரோடும் அமைக்க வேண்டும். இதை தவிர்த்து முழுவதும் சிமெண்டு சாலை அமைத்து தர வேண்டும்’ என்று மனுவில் கூறப்பட்டு உள்ளது.

நெல்லை வண்ணார்பேட்டை சலவையாளர் சமுதாய நிர்வாகிகள் கொடுத்த மனுவில், வண்ணார்பேட்டை 9–வது வார்டுக்கு உட்பட்ட தங்கம்மன் கோவில் அப்பர் சுவாமிகள் தெருவில் மாநகராட்சி சார்பில் சிமெண்டு சாலை போடப்பட்டது. அங்கு தனிநபர் ஆக்கிரமிப்பால் சாலை முழுமையாக போடப்படாமல் உள்ளது. அந்த ஆக்கிரமிப்பை அகற்றி கோவிலுக்கு செல்லும் ரோட்டை பொது மக்கள் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறப்பட்டு உள்ளது.

 


Page 71 of 841