Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

நகராட்சியில் முழுமை பெறும் நிலையில் இலவச எரிவாயு அடுப்பு வழங்கும் திட்டம்

Print PDF

தினமணி 04.01.2010

நகராட்சியில் முழுமை பெறும் நிலையில் இலவச எரிவாயு அடுப்பு வழங்கும் திட்டம்

வெள்ளக்கோவில்,ஜன.3: ""வெள்ளக்கோவில் நகராட்சியில் தமிழக அரசின் இலவச எரிவாயு அடுப்பு வழங்கும் திட்டம் முடிவு பெறும் நிலையில் உள்ளதாக,'' மாநில நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார்.

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூட உள்ளரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இலவச எரிவாயு அடுப்பு வழங்கும் விழாவில் அமைச்சர் பேசியது:

வெள்ளக்கோவில் நகராட்சிப் பகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகள் அனைவருக்கும், இலவச எரிவாயு அடுப்பு வழங்கப்பட்டு விட்டது. இன்னும் 200 பேருக்கு மட்டும் வழங்க வேண்டியுள்ளது.

திமுக ஆட்சியில் மக்களுக்குச் சொன்ன திட்டங்களைக் காட்டிலும், சொல்லாத திட்டங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன.

அதிமுக ஆட்சியில் நியாய விலைக் கடைகளில் பொதுமக்கள் அரிசிக்கு அலைந்த நிலை மாறி, தற்போது கிலோ ஒரு ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. கிலோ நெல் 10 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படும் நிலையில் தமிழக அரசு கிலோ அரிசியை ஒரு ரூபாய்க்கு வழங்குகிறது. பிற மாநிலங்களிலிருந்து பருப்பு வகைகள் இறக்குமதி செய்யப்பட்டு நியாயமான விலையில் விநியோகிக்கப்படுகிறது.

கிராம மறுமலர்ச்சிக்காக அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்,மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு சுழல் நிதி போன்ற திட்டங்கள் சிறப்பாக நடைமுறைப்படுத்தப்படுகிறது என்றார்.

விழாவில், நகராட்சிப் பகுதியைச் சேர்ந்த 313 பயனாளிகளுக்கு அடுப்பு வழங்கப்பட்டது. மாவட்ட வருவாய் அலுவலர் கே.முரளீதரன் தலைமை வதித்தார். மாவட்ட விற்பனைக்குழு உறுப்பினர் எஸ்.ஆர்.கனகசபாபதி வாழ்த்துரை வழங்கினார்.திமுக நகர செயலாளர் எம்.எஸ்.மோகனசெல்வம்,ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கே.ஆர்.முத்துக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Last Updated on Monday, 04 January 2010 08:57
 

மாநகராட்சி உள்கட்டமைப்பு வளர்ச்சிப்பணிக்கு கவுன்சில் ஒப்புதல்

Print PDF

தினமலர் 04.01.2010

மாநகராட்சி உள்கட்டமைப்பு வளர்ச்சிப்பணிக்கு கவுன்சில் ஒப்புதல்

திருச்சி: திருச்சி மாநகராட்சியின் உள்கட்டமைப்பு இடைவெளி நிரப்பு நிதி 2009-10ன் கீழ் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதுக்கு திட்ட மதிப்பீடு தயாரித்து, மாநகராட்சி கவுன்சில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

திருச்சி மாநகராட்சிக்கு உள்கட்டமைப்பு இடைவெளி நிரப்பு நிதியாக 4.75 கோடி ரூபாய் மற்றும் 2.6 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய நகராட்சி நிர்வாகத் துறை கடிதம் அனுப்பியுள்ளது.

அதனடிப்படையில் பல்வேறு பணிகளை மேற்கொள்ள திருச்சி மாநகராட்சி திட்டமிட்டு, அதற்கான மதிப்பீடுகளையும் தயாரித்து மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் பெற்றுள்ளது. திட்டமிடப்பட்ட பணிகள் மற்றும் மதிப்பீடு விபரம் வருமாறு:

மாநகராட்சி 8வது வார்டு பூசாரித்தெருவில் துப்புரவு பணியாளர்களுக்காக முறையே 12 குடியிருப்புகள் கொண்ட மூன்று கட்டிடங்கள் கட்டுதல் பணிகள்: தலா 66 லட்சம் ரூபாய். குடியிருப்புக் கட்டிடம் கட்டும் வளாகத்தில் சமுதாயக் கூடம் கட்டுதல் பணிகள்: 52 லட்சம் ரூபாய். .புதூர் கொல்லாங்குளம் வாய்க்கால் கரையில் வெள்ள பாதுகாப்பு வசதி செய்து கொடுத்தல் பணி: 75 லட்சம் ரூபாய்.அம்மையப்பநகர் காத்தான் வாய்க்கால் கரையில் வெள்ள பாதுகாப்பு வசதி செய்து கொடுத்தல் பணி: 50 லட்சம் ரூபாய். தில்லைநகர் இரட்டை வாய்க்கால் கரையில் வெள்ள பாதுகாப்பு வசதி செய்து கொடுத்தல் பணி: 50 லட்சம் ரூபாய். அரியமங்கலம் ஜோதிநகர் மற்றும் சீனிவாசநகர் பகுதியில் வெள்ள பாதுகாப்பு வசதி செய்து கொடுத்தல் பணி: 50 லட்சம் ரூபாய். கீழரண் சாலையில் காந்தி மார்க்கெட், மீன் மார்க்கெட் அருகேவுள்ள காந்தி சிலையிலிருந்து மகாராணி தியேட்டர் சாலை வரை பாதசாரிகள் நடைபாதையுடன் கூடிய மழைநீர் வடிகால் திரும்பக்கட்டுதல் பணி: 56 லட்சம் ரூபாய். நெல்சன் சாலையில் மழைநீர் வடிகால் திரும்பக் கட்டுதல் பணி: 25 லட்சம் ரூபாய். பிரதான சாலைகளில் அமைந்துள்ள புதைவடிகால் குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை நீக்க இயந்திரம் பொருத்தப்பட்ட வாகனம் வாங்குதல் பணி: 35 லட்சம் ரூபாய். குறுகிய சந்துகளில் அமைந்துள்ள புதைவடிகால் குழாய்களில் ஏற்படும் அமைப்புகளை நீக்கி இயந்திரம் பொருத்தப்பட்ட வாகனங்களை வாங்குதல் பணி: 20 லட்சம் ரூபாய். மேற்கண்ட பணிகளை மேற்கொள்வதுக்கு ஒப்புதல் அளித்து கடந்த மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

மாநகராட்சிக்கு ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளர், மேற்பார்வையாளர்

Print PDF

தினமலர் 04.01.2010

மாநகராட்சிக்கு ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளர், மேற்பார்வையாளர்

கோவை : கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 72 வார்டுகளில், துப்புரவு பணிகளை மேற்கொள்ள பணியாளர்களும், மேற்பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

துப்புரவு பணியாளர்கள் பற்றாக்குறையை சரிசெய்ய, ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணிகளை மேற்கொள்ளவும், அதற்காக பணியாளர்களை நியமிக்கவும் மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 416 துப்புரவு பணியாளர்களும் அவர்களை மேற்பார்வை செய்ய 19 மேற்பார்வையாளர்களும் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். துப்புரவு பணியாளர்கள் சம்பந்தப்பட்ட வார்டு சுகாதார ஆய்வாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டு துப்புரவு பணிகள் மேற்கொள்வர். 20 துப்புரவு பணியாளர்களுக்கு ஒரு மேற்பார்வையாளர் வீதம் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மாநகராட்சியில் பணிபுரியும் நிரந்தர துப்புரவு பணியாளரோடு இவர்களும் சேர்ந்து பணிமேற்கொள்வர். இவர்களுக்கு தனி சீருடை வழங்கப்படும். கைரேகைப்பதிவு மூலம் வருகைப்பதிவு எடுக்கப்படும். ஒப்பந்ததாரர்கள், ஒப்பந்தப்படி ஊதியம் வழங்குவர். கிழக்கு மண்டலத்திற்கு 88 பணியாளர்களும், ஐந்து மேற்பார்வையாளரும், மேற்கு மண்டலத்திற்கு 130 பணியாளர்களும், ஆறு மேற்பார்வையாளரும், தெற்கு மண்டலத்திற்கு 70 பணியாளர்களும், நான்கு மேற்பார்வையாளரும், வடக்கு மண்டலத்திற்கு 128 பணியாளர்கள், ஆறு மேற்பார்வையாளர் என்று மொத்தம் 416 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 


Page 720 of 841