Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

பாளை. வண்ணார்பேட்டை மேம்பாலத்தில் ஜூனில் போக்குவரத்து

Print PDF

தினமணி 29.12.2009

பாளை. வண்ணார்பேட்டை மேம்பாலத்தில் ஜூனில் போக்குவரத்து

திருநெல்வேலி, டிச. 28: திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் கட்டப்பட்டு வரும் புதிய மேம்பாலத்தின் பணிகள் ஜூன் மாதம் நிறைவு பெற்று, போக்குவரத்து தொடங்கும் என நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இம் மாநகரில் போக்குவரத்து நெரிசல், தீராத பிரச்னையாக இருந்து வருகிறது. இரட்டை நகரங்களான திருநெல்வேலி, பாளையங்கோட்டைக்கு இடையே இருக்கும் வண்ணார்பேட்டை செல்லப்பாண்டியன் சிலை ரவுண்டானாவில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. காலை, மாலை நேரங்களில் வாகனங்கள் ரவுண்டானாவை கடந்து செல்ல வெகுநேரம் ஆகிறது.

இப் பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும் பலன் இல்லாததால், அங்கு பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது.

புதிய மேம்பாலம் மதுரை-நாகர்கோவில் சாலையில் அமைக்க திட்டமிடப்பட்டு, அதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. ஒப்பந்தப் புள்ளியை மதுரையைச் சேர்ந்த தனியார் கட்டுமான நிறுவனம் எடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் பணியைத் தொடங்கியது. ரூ. 13.68 கோடியில் கட்டப்படும் இந்த மேம்பாலப் பணிகளை 2 ஆண்டுகளில் முடிக்க நெடுஞ்சாலைத்துறையினர் திட்டமிட்டனர்.

மேம்பாலப் பணியின் தொடக்கமாக அங்கிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இதையடுத்து அங்கு போக்குவரத்தை மாற்றி விடுவதற்காக, இணைப்புச் சாலைகள் அமைக்கப்பட்டு போக்குவரத்து திருப்பிவிடப்பட்டது.

பின்னர் தூண்கள் அமைப்பதற்காக, துளைகள் போடும் பணி தீவிரமாக நடைபெற்றது. இதில் ஒவ்வொரு துளைகளும் சுமார் 27 அடி ஆழத்தில் போடப்பட்டு, தூண்கள் அமைக்கப்பட்டன. பாலத்தின் மத்திய பகுதியில் இருக்கும் செல்லப்பாண்டியன் ரவுண்டானா பகுதியில், மார்ச் மாதம் எட்டரை மீட்டர் உயரத்தில் தூண் அமைக்கப்படுகிறது.

இப் பாலம் மொத்தம் 600 மீட்டர் நீளத்தில், 17.2 மீட்டர் அகலத்தில், 20 தூண்களோடு அமைகிறது. பாலத்தின் மேல்தளம் மட்டும் 250 மீட்டர் நீளத்தில் அமைக்கப்படும். இப்போது பாலத்தின் 50 சதவிகித பணிகள் நிறைவு பெற்றுள்ளன.

பாலத்தின் முக்கிய பணியான, மேற்தளம் அமைக்கும் பணி இரு வாரங்களாக வேகமாக நடைபெறுகிறது. இந்த பணியில் சுமார் 150 தொழிலாளர்கள் இரவு, பகலாக ஈடுபடுகின்றனர். இப் பணி மே மாதம் வரை நடைபெறும். அதேவேளையில் செல்லப்பாண்டியன் சிலை இருக்கும் பகுதியில் பெரிய தூண் அமைப்பதில் சிரமம் ஏற்படும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கருதுகின்றனர். பாலத்தின் அனைத்துப் பணிகளையும் மே அல்லது ஜூன் மாதத்திற்குள் முடித்து, போக்குவரத்தை ஜூன் மாதத்துக்குள் திறந்துவிட திட்டமிட்டு வருவதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

2009 ஏப்ரலில் தொடங்கிய பாலப் பணியை, 2011 ஏப்ரலில் முடிக்க திட்டமிட்டிருந்தோம். ஆனால், 10 மாதங்களுக்கு முன்பே பணிகள் நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாலத்துக்காக நிலம் வாங்கும் பணி காலதாமதம் இல்லாமலும், பாலப் பணிகள் தொய்வு இல்லாமலும் நடைபெறுவதால் திட்டமிட்ட காலத்துக்கு முன்பே பணிகள் நிறைவடையும். இப் பாலம் பணி நிறைவடைந்ததும், குலவணிகர்புரம் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கும் என்று அவர் தெரிவித்தார்.

Last Updated on Tuesday, 29 December 2009 06:48
 

29 ல் கோவை மாநகராட்சி கூட்டம்

Print PDF

தினகரன் 26.12.2009

29 ல் கோவை மாநகராட்சி கூட்டம்

கோவை : கோவை மாநகராட்சியில் கடந்த 23&07&2007ம் ஆண்டு குடிநீர் கட்டணம் உயர்த்தும் தீர்மானம் மன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தை செயல்படுத்த எதிர்ப்புகள் கிளம்பியது. இந்நிலையில், மன்றத்தில் முடிவு செய்த குடிநீர் கட்டணத்தை தமிழக அரசின் நகராட்சிகள் மற்றும் குடிநீர் வழங்கல் துறை திருத்தி புதிய கட்டண திட்டத்தை அறிவித்தது. இந்தக் கட்டண உயர்வு அமலாக்கப்படவில்லை.

மாநகராட்சி மன்றத்தில் 2 முறை குடிநீர் கட்டண உயர்வு தீர்மான விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. வரும் 29ம் தேதி நடக்கவுள்ள மாமன்ற கூட்டத்தில் குடிநீர் கட்டண உயர்வு தீர்மானம் இடம் பெறும். இதில் கட்டண உயர்வை அமலாக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

மாநகரில் தற்போது 1,11,952 வீடுகள், குடியிருப்பு அல்லாத 2,869 இணைப்புகள் உட்பட 1,15,757 இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. குடியிருப்பு, குடியிருப்பு அல்லாத இணைப்புகளின் பயன்பாட்டிற்கு மாதம் 20 ஆயிரம் லிட்டர் வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி நிர்வாகம் இதுவரை குடிநீர் வடிகால் வாரியத்துக்கு வழங்கவேண்டிய நிலுவை தொகை ரூ.126.59 கோடி. பில்லூர் 2வது குடிநீர் திட்டத்தில் மாநகராட்சியின் 30 சதவீத பங்களிப்பு தொகை ரூ.49.61 கோடி.

குடிநீர் கட்டண உயர்வை செயல்படுத்தினால் மட்டுமே பில்லூர் 2வது குடிநீர் பணிகளை தடையின்றி முடிக்க முடியும். இல்லாவிட்டால் சிக்கல் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கட்டண உயர்வுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பும் வாய்ப்புள்ளது. இருப்பினும் தீர்மானத்தை நிறைவேற்ற வாய்ப்புள்ளதா என மாநகராட்சி நிர்வாகம் யோசித்து கொண்டிருக்கிறது.

Last Updated on Saturday, 26 December 2009 12:13
 

துப்புரவு ஊழியர்களுக்கு சீருடை

Print PDF

தினகரன் 26.12.2009

துப்புரவு ஊழியர்களுக்கு சீருடை

பள்ளிப்பட்டு : பொதட்டூர்பேட்டை பேரூராட்சிமன்ற கூட்டம் மன்ற கூடத்தில் நடந்தது. பேரூராட்சி தலைவர் ஏ.வி.நேதாஜி தலைமை வகித்தார். துணைத்தலைவர் ஏ.எம்.பழனி, பேரூராட்சி செயல் அலுவலர் பழனிவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் வளர்ச்சி பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டம் நடந்தபோது காஞ்சி தெருவை சேர்ந்த பகுதி மக்கள் சிலர், ‘எங்கள் பகுதியில் சரியாக குடிநீர் வரவில்லை. சீராக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்என பேரூராட்சி தலைவரிடம் கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக பேரூராட்சி தலைவர் கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். கவுன்சிலர்கள் கிருஷ்ணன், தவமணி, பழனி, கற்பகம், ராஜேந்திரன், கருணா, பாலம்மாள், விஜயா, ஜோதி, ஜெயராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து, பேரூராட்சியில் பணியாற்றும் துப்புரவு ஊழியர்களுக்கு, பேரூராட்சி தலைவர் நேதாஜி சீருடை வழங்கினார்.

 


Page 728 of 841