Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

செல்போன் டவர் அமைக்க முயற்சி அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்

Print PDF

தினகரன் 24.12.2009

செல்போன் டவர் அமைக்க முயற்சி அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்

திருப்பூர்,:திருப்பூர் அடுத்துள்ள 15 வேலம்பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட 9வது வார்டு பெரியார் காலனி கருப்பராயன் கோயில் 2வது வீதியில் பழனிச்சாமி என்பவருக்கு சொந்தமான இடத்தில் தனியார் செல்போன் நிறுவனம் ஒன்று டவர் அமைக்க பழனிச்சாமி என்பவருடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒப்பந்தம் செய்து, அதற்கான பணிகளை துவக்கியது. இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த சிலர் டவர் அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து இடத்தின் உரிமையாளர் அனுப்பர்பாளையம் போலீசில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் அனுப்பர்பாளையம் போலீசார் நேற்று டவர் அமைக்கும் பணிக்கு பாதுகாப்பு வழங்கினர். இதைத்தொடர்ந்து அப்பகுதியினர் நகராட்சித் தலைவர் எஸ்.பி. மணி, செயல் அலுவலர் குற்றாலிங்கம் ஆகியோரிடம் குடியிருப்பு மிகுந்த பகுதியில் டவர் அமைக்கக்கூடாது என வலியுறுத்தி புகார் செய்தனர். இதையடுத்து நகராட்சித் தலைவர், செயல் அலுவலர், பொறியாளர் மல்லிகை ஆகியோர் சம்பவ இடம் விரைந்தனர். அங்கு பணியில் ஈடுபட்ட தனியார் செல்போன் நிறுவன ஊழியர்களிடம் டவர் அமைப்பதற்கு நகராட்சி நிர்வாகத்திடம் முறையாக அனுமதி பெற்ற பின்பே செல்போன் டவர் அமைக்க வேண்டும். அனுமதி பெறாமல் டவர் அமைக்கும் பணியில் ஈடுபட்டால் பொருட்களை பறிமுதல் செய்ய வேண்டி வரும் என எச்சரித்தனர். இதையடுத்து டவர் அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

Last Updated on Thursday, 24 December 2009 06:22
 

2 தொகுதியில் பெயர் இருந்தால் கிரிமினல் நடவடிக்கை மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை

Print PDF

தினகரன் 24.12.2009

2 தொகுதியில் பெயர் இருந்தால் கிரிமினல் நடவடிக்கை மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை


திருச்சி: இரு தொகுதிகளின் வாக்காளர் பட்டியலில் ஒரே பெயர் இருந்தால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி கமிஷ னர் பால்சாமி கூறினார்.

திருச்சி மாநகராட்சி மாமன்ற அவசரக் கூட்டம் மேயர் சுஜாதா தலைமையில், கமிஷனர் பால்சாமி, துணைமேயர் அன்பழகன் முன்னிலையில் நேற்று நடைபெற்றது.

கமிஷனர் பேசுகையில், கடந்த 21ம் தேதி முதல் வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது. அந்தந்த பகுதி குடியிருப்பு சங்க பிரதிநிதிகள், என்எஸ்எஸ் போன்ற தன்னார்வ அமைப்புகள் மூலம் இந்த 100 சதவீத சரிபார்ப்பு பணி வீடுவீடாக நடந்து வருகிறது. ஏற்கனவே உள்ள பட்டியலில் இருந்து இடமாற்றம் போன்ற காரணத்தால் நீக்கப்பட்டவர்கள், புகைப்படம் மாறி இருத்தல், பெயரில் உள்ள குளறுபடிகள் போன்றவை இந்த பணியின் போது திருத்தம் செய்யப்படும்.

அதேபோல் 2 தொகுதிகளில் வாக்காளரின் பெயர் இருந்தால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் கமிஷன் எச்சரித்துள்ளது. அதனால் அரசியல் பாகுபாடின்றி இப்பணியை மேற்கொள்ள கவுன்சிலர்கள் ஒத்துழைக்க வேண்டும். தற்போது தயார் செய்யப்படும் பட்டியல்தான் வரும் காலங்களில் நடக்கும் அனைத்து தேர்தல்களிலும் பயன்படுத்தும் அளவிற்கு தாய் பட்டியலாக இருக்கும்.

1.1.2010ம் தேதியன்று 18 வயது பூர்த்தியானவர்கள் புதிதாக பட்டியலில் சேர்க்கப்படுவார்கள். இதர வாக் காளர்கள் பின்னர் அறிவிக்கப்படும் நாட்களில் விண்ணப்பங்களை பெற்று பெயர் சேர்க்கலாம். வரும் ஜனவரி 10 மற்றும் பிப்ரவரி 7ம் தேதிகளில் மாநகராட்சி சார்பில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படுகிறது. 864 முகாம்கள் மூலம் 83 ஆயிரம் குழந்தைகளுக்கு மருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

மீண்டும் ஏலம் நீட்டிப்பு இல்லைமாநகராட்சியில் உள்ள அங்காடிகள், பேருந்து நிலையங்கள், சந்தைகள், மதிவண்டி நிறுத்தங்கள், கட்டண கழிப்பிடங்கள், தங்கும் விடுதிகள் போன்ற அனைத்து வகையான இனங்களிலும் கட்டணம் வசூலிக்கும் உரிமைக்கு ஒரு ஆண்டாக இருந்த குத்தகை காலத்தை 3 ஆண்டுகளுக்கு மாற்றி அமைக்க நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் உத்தரவு தொடர்பான பொருள் மீது விவாதம் நடந்தது. இந்த உத்தரவின் பேரில் 1.4.2010ம் தேதி முதல் 31.3.2013ம் ஆண்டு வரையிலான குத்தகை கட்டண விபரத்தை மாமன்ற பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. இது குறித்து கவுன்சிலர் வெங்கட்ராஜ் பேசுகையில், ஏற்கனவே குத்தகை எடுத்திருப்பவர்களுக்குத்தான் 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்து தர வேண்டும். இல்லை என்றால் அவர்கள் நீதிமன்றத்திற்கு சென்று விடுவார்கள் என்றார்.

இதற்கு கமிஷனர் பால்சாமி பதில் கூறுகையில், அனைத்து நகராட்சி, மாநகராட்சிகளிலுமே 2010 & 2011ம் ஆண்டில் இருந்து, 3 ஆண்டிற்கு குத்தகை காலம் நிர்ணயம் செய்யப்பட்டு ஏலம் விடப்பட உள்ளது. இது தொடர்பாக சென்னையில் கருத்து கேட்டபோதும் இவ்வாறே கூறினார்கள். அதனால் ஏற்கனவே குத்தகை எடுத்தவர்களுக்கே மீண்டும் நீட்டித்து வழங்க இயலாது. கண்டிப்பாக 3 ஆண்டுகளுக்கான குத்தகை முறைக்கு ஏலம் விடப்படும். 2வது மற்றும் 3வது ஆண்டிற்கு 5 சதவீதம் கட்டணம் உயர்த்துதல் தொடர்பாக மாமன்றத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு முடிவு செய்யப்படும் என்றார்.

Last Updated on Thursday, 24 December 2009 06:19
 

சொந்த மனைப்பட்டா இருந்தால் ரூ.1.60 லட்சம் வரை கடனுதவி ஆட்சியர் தகவல்

Print PDF

தினகரன் 23.12.2009

சொந்த மனைப்பட்டா இருந்தால் ரூ.1.60 லட்சம் வரை கடனுதவி ஆட்சியர் தகவல்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
விழுப்புரம் மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சிகளுக்குட்பட்ட குறைந்த வருவாய் மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்தோர் பிரிவினருக்கு உதவிடும் பொருட்டு தங்களது பெயரில் சொந்த மாக மனைப்பட்டா உள்ள அனைவருக்கும் வட்டி மானியத்தில் வீடு கட்டுவதற்கு வங்கி கடனுதவி பெறும் பயனாளிகளை தேர்வு செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை மேற்கொள்ள வீட்டுவசதி வாரியத்தை முகவராக நியமனம் செய்துள்ளது.

நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் மாத வருமானம் ரூ.3,300 வரை உள்ளவர்களுக்கு மானிய வட்டியில் அதிகபட்சம் ரூ.1 லட்சம் வரை கடன், மாத வருமானம் ரூ.3,301 முதல் ரூ.7,300 வரை உள்ளவர்களுக்கு மானிய வட்டியில் ரூ.1,60,000 வரை மானிய வட்டியில் கடன் வழங்கப்படும்.

ரூ.1 லட்சத்திற்கு மேற்பட்ட கடன் தொகைக்கு நிர்ணயிக்கும் வட்டியை செலுத்த வேண்டும். எனவே விழுப்புரம், திண்டிவனம், கள்ளக்குறிச்சி ஆகிய நகராட்சி பகுதியை சேர்ந்தவர்களும் மாவட்டத்தில் உள்ள 15 பேரூராட்சி பகுதிகளை சேர்ந்தவர்களும் மேற்குறிப்பிட்டுள்ள மாத வருமானத்திற்குள் இருந்து சொந்தமாக மனைப்பட்டா இருந்தால் உடனடியாக விண்ணப்பித்து ரூ.1,60000 வரை வங்கிக்கடன் பெற்று பயனடையலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 


Page 730 of 841