Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

கடையநல்லூர் நகராட்சியில் விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம்

Print PDF

தினமலர் 23.12.2009

கடையநல்லூர் நகராட்சியில் விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம்

கடையநல்லூர்:கடையநல்லூரில் வேகமாக பரவி வரும் மர்மகாய்ச்சலையடுத்து நகராட்சி சார்பில் விழிப்புணர்வை ஏற்படுத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நகராட்சி தலைவர் இப்ராகிம் தெரிவித்தார்.கடையநல்லூர் நகராட்சி அலுவலகத்தில் நேற்று காலை சுகாதாரத்துறை, நகராட்சி நிர்வாகம் ஆகியோரது ஏற்பாட்டின்படி பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவது தொடர்பான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மேலாண்மைக்குழு உறுப்பினர் சைபுல்லா, முகமது புகாரி, முகமது காசிம், சமூகநல இயக்க நிறுவர் ஜபருல்லா, தலைவர் உகலா சுந்தர், பொது செயலாளர் சீனா மசூது, விஸ்வா சுல்தான் மற்றும் பொது நல அமைப்பினர் கலந்து கொண்டனர்.சுகாதாரத்துறை பணிகள் துணை இயக்குநரின் நேர்முக உதவியாளர் குமார், சொக்கம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மேற்பார்வையாளர் அய்யப்பன், நகராட்சி இஞ்சினியர் அய்யனார், கடையநல்லூர் சுகாதார ஆய்வாளர்கள் பாஸ்கர், கைலாசம் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளக்கூடிய காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது. கொசு மருந்து, அபேட் மருந்துகள் தெளித்திட சுகாதாரத்துறை மூலம் அறிவுறுத்தப்பட்டது.

இதுகுறித்து நகராட்சி தலைவர் இப்ராகிம் கூறுகையில்: - கடையநல்லூர் நகராட்சி பகுதிகளில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் சுகாதாரத்துறையுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கிருஷ்ணாபுரத்தில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டதை போல மேலக்கடையநல்லூர், மாவடிக்கால், பேட்டை பகுதிகளிலும் சிறப்பு மருத்துவ முகாம் நடத்துவதற்கு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகத்தின் மூலமாக பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய அறிவிப்புகள் குறித்து ஒவ்வொரு பகுதிக்கும் நோட்டீஸ் மூலம் மக்களுக்கு தெரியப்படுத்தப்பட்டு வருகிறது. பொதுநல அமைப்புகள் சார்பில் இந்த நோட்டீஸ்கள் வழங்கிடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கடையநல்லூர் நகராட்சியில் வேகமாக பரவி வரும் மர்ம காய்ச்சல் குறித்து என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மேலாண்மை குழு உறுப்பினர் சைபுல்லா காஜா கூறுகையில்,கடையநல்லூரில் இருந்து காய்ச்சல் பாதித்து நெல்லையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு நோயாளிகள் சிகிச்சைக்காக சென்றபோது மேற்கொள்ளப்பட்ட ரத்த பரிசோதனையின் அடிப்படையில் அது மர்ம காய்ச்சல் தான் என்பதும், டெங்கு காய்ச்சல்தான் எனவும் தெரிவித்துள்ளனர். இந்த காய்ச்சல் பாதித்த நோயாளிகளுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பில் உள்ள நிர்வாகிகளும், உறுப்பினர்களும் ரத்தம் வழங்கி வருகின்றனர்.4 யூனிட் ரத்தம் வரை ஒவ்வொரு வரும் வழங்கியுள்ளனர். எனவே டெங்கு காய்ச்சலுக்குரிய மருத்துவ முறையினை மேற்கொண்டு காய்ச்சலை கட்டுப்படுத்த வேண்டும் என்று கூறினார்.

 

ஈரோடு மாநகராட்சிக்கு சூரம்பட்டி நகராட்சி கெடு! குப்பை கொட்ட அனுமதித்தால்தான் பங்களிப்பு தொகை

Print PDF

தினமலர் 23.12.2009

ஈரோடு மாநகராட்சிக்கு சூரம்பட்டி நகராட்சி கெடு! குப்பை கொட்ட அனுமதித்தால்தான் பங்களிப்பு தொகை

ஈரோடு: குப்பை கொட்ட அனுமதித்தால்தான் பாதாள சாக்கடை திட்டத்துக்கு பங்களிப்பு தொகை வழங்கப்படும் என ஈரோடு மாநகராட்சி நிர்வாகத்துக்கு சூரம்பட்டி நகராட்சி கெடு விதித்துள்ளது. சூரம்பட்டி நகராட்சியில் 18 வார்கள் உள்ளன. வார்டுகளில் சேரும் குப்பைகளை சேகரித்து மக்கவைத்து உரமாக்கும் வகையில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த, நகராட்சி நிர்வாகம் சார்பில் தொட்டிபாளையத்தில் இடம் வாங்கப்பட்டது. ஒன்றரை ஆண்டுக்கு முன், குப்பை கொட்டும் இடத்திலிருந்து 15 அடி ஆழம், 80 அடி நீளத்துக்கு குழி தோண்டப்பட்டு அங்கிருந்து மண் திருடப்பட்டது. குழியில் ஏற்பட்ட நீர் கசிவு குப்பையுடன் சேர்ந்து துர்நாற்றம் வீசியதால், அப்பகுதி மக்கள் குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து, சித்தோடு ஐ.ஆர்.டி.டி., கல்லூரியின் பின்பகுதியில் உள்ள புறம்போக்கு இடத்தில் மாவட்ட நிர்வாகம் இடம் ஒதுக்கியது. அப்பகுதியில் உள்ள கிராம மக்களும் எதிர்ப்பு தெரிவித்ததால், அங்கும் குப்பை கொட்ட முடியாத நிலை ஏற்பட்டது. தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் குப்பை கொட்ட இடம் இல்லாமல் தவித்து வருகிறது. தெருக்களில், அன்றாடம் குப்பை அள்ள முடியாமல், சுகாதாரக் கேடாக காட்சியளிக்கிறது. சூரம்பட்டி நகராட்சி கூட்டம் நேற்று காலை நடந்தது. அ.தி.மு.க., கவுன்சிலர்கள் ஜெகதீஸ், தங்கவேல், குமாரவேல், வெங்கடாசலம், தே.மு.தி.க., கவுன்சிலர் செல்வகுமார், சுயேச்சை கவுன்சிலர் ஜெயமணி ஆகியோர் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். கவுன்சிலர் ஜெகதீஸ் கூறியதாவது: நகராட்சி பகுதியில் இரண்டு ஆண்டுகளாக குப்பை பிரச்னை உள்ளது. குப்பையை அகற்ற நகராட்சி நிர்வாகம் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை. அதேபோல், காசிபாளையம் நகராட்சி குடிநீருக்கான கட்டணம் 80 லட்சம் ரூபாய் சூரம்பட்டி நகராட்சிக்கு செலுத்த வேண்டியதுள்ளது.

அதில் பத்து லட்சம் ரூபாய்தான் செலுத்தியுள்ளனர். மீதி 70 லட்சம் ரூபாயை சூரம்பட்டி நகராட்சி நிர்வாகம் வசூலிக்காமல் காலம் தாழ்த்துகிறது. இதை வலியுறுத்தி வெளிநடப்பு செய்தோம். இவ்வாறு அவர் கூறினார். நகராட்சி சேர்மன் லோகநாதன் கூறியதாவது: சூரம்பட்டி நகராட்சிக்கு 70 லட்சம் ரூபாய் காசிபாளையம் நகராட்சி தர வேண்டியுள்ளது. இது குறித்து செயல் அலுவலர் பல நினைவூட்டும் கடிதங்களை எழுதிவிட்டார். இருப்பினும் பணம் வரவில்லை. சென்னை நகராட்சி நிர்வாகங்களின் இயக்குனருக்கு கடிதம் எழுதினார். அதில் காசிபாளையம் நகராட்சி நிர்வாகம் பாக்கி வைத்துள்ள 70 லட்சம் ரூபாயை, அவர்களுக்கு வழங்கும் கிராண்ட் ஃபண்டில் பிடித்து எங்களுக்கு வழங்குமாறு கடிதம் எழுதியுள்ளார். ஈரோடு மாநகராட்சி குப்பை கொட்டும் இடத்தில், சூரம்பட்டி நகராட்சி குப்பையை கொட்ட அனுமதி கேட்டு இயக்குனருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. இயக்குனரும், குப்பை கொட்ட அனுமதிக்குமாறு, மாநகராட்சி கமிஷனருக்கு உத்தரவிட்டுள்ளார். இருப்பினும், மாநகராட்சி நிர்வாகம் எங்களை குப்பை கொட்ட அனுமதிக்கவில்லை.

மாநகராட்சி நிர்வாகம் செயல்படுத்த உள்ள, பாதாள சாக்கடை திட்டத்துக்கு, சூரம்பட்டி நகராட்சியின் பங்களிப்பு தொகை கேட்டுள்ளது. அது குறித்த தீர்மானத்தை கூட்டத்தில் வைத்தபோது, "முதலில் மாநகராட்சி நிர்வாகம் குப்பை கொட்ட அனுமதிக்கட்டும். அதன் பிறகு, பாதாள சாக்கடைக்கு பங்களிப்பு வழங்குவதி குறித்து பார்க்கலாம்' என கவுன்சிலர்கள் கூறிவிட்டனர். மாநகராட்சி இடத்தில் குப்பை கொட்ட அனுமதித்து சூரம்பட்டி நகராட்சிக்கு சென்னை நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர், நேரடியாக கடிதம் அனுப்ப வேண்டும். அதுவரை பாதாள சாக்கடைக்கு பங்களிப்பு தொகை வசூலிப்பது தற்காலிகமாக நிறுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Last Updated on Wednesday, 23 December 2009 12:08
 

ராசிபுரம் நகராட்சியில் பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்கும் முகாம்

Print PDF

தினமணி 23.12.2009

ராசிபுரம் நகராட்சியில் பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்கும் முகாம்

ராசிபுரம், டிச.22 : ராசிபுரம் நகராட்சியில் பிறப்பு இறப்பு சான்றிதழ் மற்றும் சொத்து வரி, வீட்டு வரி பெயர் மாற்றும் சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

÷ முகாமில் பிறப்பு இறப்பு சான்றிதழ், சொத்து வரி, வீட்டு வரி மாற்றம் கேட்டு ஏராளமான பொதுமக்கள் அளித்த விண்ணப்பத்தின் மீது பரிசீலனை செய்யப்பட்டு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. முகாமில் ராசிபுரம் நகராட்சி ஆணையாளர் கு.தனலட்சுமி தலைமை வகித்தார். நகர்மன்றத் தலைவர் என்.ஆர்.ராமதாஸ் பொதுமக்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினார்.

நகராட்சிப் பொறியாளர் எஸ்.இளங்கோவன், வருவாய் ஆய்வாளர் குமரேசன் உள்ளிóட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். இதுபோன்ற சான்றிதழ்களுக்கு பொதுமக்கள் அலைக்கழிக்கப்படும் நிலையில், ஒரே நாளில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது பயனுள்ளதாக இருப்பதாக பொதுமக்கள் தரப்பில் கூறப்பட்டது. இதுபோன்ற முகாம்கள் பிற துறைகளிலும் நடத்தப்பட வேண்டும் எனவும் பொதுமக்கள் கூறினர்.

 


Page 731 of 841