Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

அறந்தாங்கியில் ரூ. 20 லட்சத்தில் ஆடு அறுக்கும் மையம் திறப்பு

Print PDF

தினமணி 11.12.2009

அறந்தாங்கியில் ரூ. 20 லட்சத்தில் ஆடு அறுக்கும் மையம் திறப்பு

அறந்தாங்கி, டிச. 9: அறந்தாங்கியில் ரூ. 20 லட்சத்தில் கட்டப்பட்ட ஆடு அறுக்கும் மையக் கட்டடம் செவ்வாய்க்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

நகராட்சி நிர்வாகம் சார்பில் கட்டப்பட்டுள்ள இந்த மையத்தின் திறப்பு விழாவுக்கு நகர்மன்றத் தலைவர் பழ. மாரியப்பன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் டி..என். கச்சுமுஹம்மது முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அறந்தாங்கி சட்டப்பேரவை உறுப்பினர் உதயம் சண்முகம் மையத்தைத் திறந்துவைத்தார்.

இந்த மையம் குறித்து நகர்மன்றத் தலைவர் பழ. மாரியப்பன் கூறுகையில், ""ஆடுகளை அறுப்பதற்கும் உறிப்பதற்கும் குடல் உள்ளிட்ட பகுதிகளைச் சுத்தம் செய்வதற்கும் தனித் தனி அறைகள் கட்டப்பட்டுள்ளன. அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள இந்த மையத்தில் கால்நடை மருத்துவர் சான்று வழங்கிய பின்னரே ஆடுகளை அறுக்க வேண்டும். மேலும், நகரில் நடைபெறும் திருமணம் மற்றும் அனைத்து விழாக்களில் மண்டபங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கும் இங்கு வந்துதான் ஆடுகளை வெட்டி கொண்டுசெல்ல வேண்டும்'' என்று கூறினார்.

மணமேல்குடி ஒன்றியக் குழுத் துணைத் தலைவர் எஸ்.எம். சீனியார்,நகராட்சிப் பொறியாளர் க. ரெங்கராசு, மேலாளர் என்.ஆர். ரவிச்சந்திரன், துப்புரவு ஆய்வாளர் எஸ். சேகர், நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் நகராட்சி ஊழியர்கள் பங்கேற்றனர்.

 

சொத்து வரி செலுத்தாத கடைகள் ஜப்தி: மாநகராட்சி அதிரடி

Print PDF

தினமணி 11.12.2009

சொத்து வரி செலுத்தாத கடைகள் ஜப்தி: மாநகராட்சி அதிரடி

சென்னை, டிச. 10: பல ஆண்டுகளாக சொத்து வரி செலுத்தாத கடைகளில், மாநகராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை அதிரடியாக ஜப்தி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

சொத்து வரி நிலுவையை அவர்கள் உடனடியாக செலுத்தியதால், நடவடிக்கையை அதிகாரிகள் கைவிட்டனர்.

மாநகராட்சி ரிப்பன் கட்டடத்துக்கு எதிரில் அமைந்துள்ள பேரணாம்பட்டு முஸ்லிம் கல்வி சமுதாயத்துக்கு சொந்தமான இடத்தில் அமைந்திருந்த 2 கடைகள், கடந்த 2001}ம் ஆண்டு முதல் சொத்து வரி செலுத்தவில்லை. இதனால் சொத்து வரி நிலுவை ரூ. 6 லட்சமானது.

இதுபோல் ஈ.வெ.ரா. சாலையில் அமைந்துள்ள 2 கடைகளுக்கு ரூ. 1.60 லட்சமும், செனடாப் சாலையில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு ரூ. 1.30 லட்சமும் சொத்து வரி நிலுவை இருந்தது.

மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அளித்தும், இந்தக் கடைக்காரர்கள் சொத்து வரி செலுத்த முன்வரவில்லை. இதைத் தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி ஜப்தி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

உடனடியாக கடைக்காரர்கள் அனைவரும் சொத்து வரி நிலுவையை செலுத்தியதால், அதிகாரிகள் நடவடிக்கையை கைவிட்டனர்.

 

கழிப்பறை, சைக்கிள், கார் நிறுத்துமிடங்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை

Print PDF

தினமணி 10.12.2009

கழிப்பறை, சைக்கிள், கார் நிறுத்துமிடங்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை

மதுரை, டிச. 8: மதுரை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் கட்டணக் கழிப்பறை, சைக்கிள் மற்றும் கார் நிறுத்துமிடங்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் எஸ்.செபாஸ்டின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

மதுரை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் கட்டணக் கழிப்பறைகள், சைக்கிள் மற்றும் கார் நிறுத்துமிடங்களில் மாநகராட்சி நிர்ணயம் செய்துள்ள கட்டணங்களைவிட அதிக தொகை வசூலிக்கப்படுவதாகப் புகார்கள் வந்துள்ளன. இந்த இடங்களில் மாநகராட்சி நிர்ணயித்துள்ள கட்டணம் குறித்து கண்டிப்பாக தகவல் பலகைகள் வைக்கவேண்டும். எவராவது கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகத் தெரியவந்தால் அவர்களின் உரிமம் ரத்துச் செய்யப்படும்.

மேலும் மாநகராட்சி அனுமதி பெற்ற கடைகள் முன்பு லைசென்ஸ்தாரர்கள் பெயர், மாநகராட்சி உத்தரவு வழங்கிய அனுமதி எண் போன்ற விவரங்கள் அடங்கிய தகவல் பலகை வைக்கப்பட வேண்டும். அனுமதி இல்லாமல் வைக்கப்படும் கடைகள் மாநகராட்சியால் அகற்றப்படும்.

வீட்டு வரி, குழாய் வரி, பாதாள சாக்கடை வரி, தொழில் வரி உள்ளிட்ட நிலுவையில் உள்ள வரிகளை விரைவில் வசூலிக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக மாநகராட்சி கருத்தரங்கக் கூடத்தில் ஆணையர் தலைமையில் வருவாய் வசூல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் துணை ஆணையர் எஸ்.சிவராசு, தலைமைப் பொறியாளர் கே.சக்திவேல் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

 


Page 740 of 841