Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

சாலை அமைக்கும் விவகாரம்: ஆவடி நகராட்சி ஆணையருக்கு சட்டப்பணிகள் ஆணையம் அறிவுறுத்தல்

Print PDF

தினமணி 30.11.2009

சாலை அமைக்கும் விவகாரம்: ஆவடி நகராட்சி ஆணையருக்கு சட்டப்பணிகள் ஆணையம் அறிவுறுத்தல்

சென்னை, நவ.29: சென்னை ஆவடி பட்டாபிராம் பகுதியை அடுத்த தண்டறை கிராமத்தில் சாலை அமைப்பது தொடர்பான பிரச்னையில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஆவடி நகராட்சி ஆணையரை தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

பட்டாபிராம் அடுத்த தண்டறை கிராமம் கந்தசாமி நகர் டாக்டர் கன்சிராம் தெருவை சேர்ந்தவர் எஸ். ராஜேந்திரன். இவரது வீடு உள்ளிட்ட பட்டா நிலங்களுக்கு அருகில் உள்ள புறம்போக்கு நிலம் கால்வாய் என வருவாய்த்துறை ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், கால்வாய் என குறிப்பிடப்பட்ட நிலத்தை தவிர்த்துவிட்டு ராஜேந்திரனின் பட்டா நிலத்தில் கால்வாய் தோண்டும் பணியை நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டதாக கடந்த ஆண்டு புகார் எழுந்தது.

இது தொடர்பான செய்திகள் வெளியானதை அடுத்து கால்வாய் அமைக்கும் பணிகள் நிறுத்தப்பட்டன. இந்த நிலையில், இங்குள்ள கன்சிராம் தெருவில் சாலை அமைக்க வேண்டும் என இப் பகுதி மக்கள் ஆவடி நகராட்சி நிர்வாகத்தை வலியுறுத்தி வருகின்றனர். பட்டா நிலங்கள் உள்ள பகுதியில் சாலை அமைப்பதற்கு பதிலாக அங்கு கால்வாய் அமைக்கும் பணியை நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருவதாக அவர்கள் புகார் தெரிவித்தனர். இது தொடர்பாக இப் பகுதி மக்கள் சார்பாக, நகராட்சி நிர்வாகத்துறை, முதல்வரின் தனிப்பிரிவு, தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணையம் உள்ளிட்டவைகளுக்கு ராஜேந்திரன் மனு அனுப்பினார். இந்த நிலையில், தண்டறை கிராமத்தில் சாலை அமைக்கும் பிரச்னை தொடர்பாக ராஜேந்திரனின் புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பான கடிதம் ஆவடி நகராட்சி ஆணையருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

 

2015-ல் வீடுகளுக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயு விநியோகம்: பெட்ரோலிய இணை அமைச்சர் தகவல்

Print PDF

தினமணி 27.11.2009

2015-ல் வீடுகளுக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயு விநியோகம்: பெட்ரோலிய இணை அமைச்சர் தகவல்

புது தில்லி, நவ.26: அடுத்த ஆறு ஆண்டுகளில் 200 நகரங்களில் குழாய் மூலம் இயற்கை எரிவாயு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய பெட்ரோலியத்துறை இணையமைச்சர் ஜிதின் பிரசாத் தெரிவித்தார். வியாழக்கிழமை மக்களவையில் கேள்வி நேரத்தின்போது அவர் இந்த பதிலை அளித்தார். இது தொடர்பான துணைக் கேள்விக்கு அவர் அளித்த பதில்:

இயற்கை எரிவாயு இணைப்புகளை 200-க்கும் மேற்பட்ட நகரங்களில் அளிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது மிகக் குறைந்த அளவிலான இயற்கை எரிவாயு கிடைப்பதால் இதை நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் விநியோகிக்க இயலாது. இருப்பினும் அனைத்து நகரங்களிலும் இத்தகைய வசதியை அளிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இருப்பினும் கிராமப்புறங்களுக்கு சிலிண்டரில் அடைக்கப்பட்ட வாயு விநியோகிக்கும் திட்டம் தனியாக மேற்கொள்ளப்பட உள்ளதாக அவர் கூறினார்.

தற்போது நகரங்களில் இயற்கை எரிவாயு விநியோகிக்கும் உரிமையை நகர எரிவாயு விநியோக அமைப்பு மேற்கொண்டுள்ளது. இந்த அமைப்பு மத்திய அரசின் அங்கீகாரம் பெற்றதாகும். கெயில் இந்தியா நிறுவனத்தின் கூட்டுடன் இது செயல்படுகிறது. இவ்விரு நிறுவனங்களும் இணைந்து நகர்ப்பகுதிகளில் இயற்கை எரிவாயு விநியோகிக்கும் உரிமையை விரிவுபடுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் கூறினார்.

மேலும் இத்தகைய விநியோக உரிமைக்கான அங்கீகாரத்தை பெட்ரோலியம் மற்றும் எரிவாயு ஒழுங்குமுறை வாரியம் (பிஎன்ஜிஆர்பி) அளித்து வருகிறது. பிஎன்ஜிஆர்பி சட்டம் 2006-ன் படி நகர் பகுதிகளில் இயற்கை எரிவாயு இணைப்பை உருவாக்குவதற்கான ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதற்கு வழிவகுக்கிறது. அத்துடன் இதற்குத் தேவையான முதலீடுகளை ஈர்க்கவும் அதாவது பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ள வழிவகுப்பதாக ஜிதின் பிரசாத் கூறினார்.

Last Updated on Friday, 27 November 2009 07:26
 

விரைவில் இணையதளம் மூலம் பிறப்புச் சான்று: அமைச்சர் தினேஷ் திரிவேதி

Print PDF

தினமணி 27.11.2009

விரைவில் இணையதளம் மூலம் பிறப்புச் சான்று: அமைச்சர் தினேஷ் திரிவேதி


புதுதில்லி, நவ. 26: இணையதளம் மூலம் பிறப்புச் சான்று பெறும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் தினேஷ் திரிவேதி கூறினார்.

தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் பேசும்போது அவர் இவ்வாறு கூறினார்.

சுகாதாரம் தொடர்பான தகவல்கள் அடங்கிய தேசிய இணையதளம் விரைவில் தொடங்கப்படும். அதில் ஒவ்வொருவரது பிறப்பும் பதிவு செய்யப்பட வேண்டும். அவ்வாறு பதிவு செய்வதன் மூலம் பிறப்புச் சான்று கேட்டு உள்ளாட்சி அலுவலகங்களில் நீண்ட நேரம் காத்திருக்காமல் இணையதளம் மூலமே விண்ணப்பித்து, பிறப்புச் சான்று பெற முடியும் என்று அவர் கூறினார்.

குழந்தைகளின் வளர்ச்சியைக் கண்காணிக்க இ ஹெல்த் கார்டு வழங்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது என்றார் அவர்.

எந்த மாதிரியான சுகாதாரப் பிரச்னையையும் நம்மால் எதிர்கொண்டு சமாளிக்க முடியும்.

ஆனால் சுகாதாரம் குறித்த நமது கண்ணோட்டம் தான் மாற வேண்டும் என்று அவர் கூறினார். நோயைப் பற்றியேதான் நாம் அதிகம் பேசிக் கொண்டிருக்கிறோம். சுகாதாரத்தைப் பற்றி பேசுவதில்லை. சத்தான உணவு, கழிப்பறை வசதி, சுத்தமான குடிநீர் ஆகியவையே சுகாதாரத்தின் அடிப்படை என்றார் அமைச்சர்.

கருத்தரங்கில் நோபல் பரிசு பெற்ற கனடா நாட்டு பேராசிரியர் கிறிஸ்டி டுன்கன் பேசினார். பன்றிக் காய்ச்சல் இன்னும் அச்சுறுத்தும் நோயாகவே உள்ளது. தற்போது வைரஸின் தாக்கு திறன் தீவிரமாக இல்லை என்பது ஆறுதலான விஷயம். ஆனால் தீவிரமாவதற்கு வாய்ப்பு அதிகம் என்று அவர் எச்சரித்தார்.

Last Updated on Friday, 27 November 2009 07:21
 


Page 747 of 841