Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

ஆஸ்பத்திரியில் அம்மா உணவகம்: முதல்வர் திறந்து வைத்தார்

Print PDF

தினபூமி         21.11.2013

ஆஸ்பத்திரியில் அம்மா உணவகம்: முதல்வர் திறந்து வைத்தார்

http://www.thinaboomi.com/sites/default/files/imagecache/story_thumbnail/Chennai-Amma-Mess-CM_Inagurate(C).jpg 

சென்னை, நவ.21 - சென்னை அரசு ஆஸ்பத்திரியில்  அம்மா உணவகத்தை    முதல்வர் ஜெயலலிதா நேற்று  காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார். தமிழக அரசு செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:_

சென்னை மாநகரில் வாழும் ஏழை, எளிய மக்கள், அன்றாட கூலி வேலை செய்பவர்கள், ஓட்டுநர்கள், பாரம் தூக்குபவர்கள் என குறைந்த ஊதியத்தில் பணிபுரிபவர்கள் பயன்பெறும் வகையில் சென்னை மாநகராட்சியின் சார்பில் சுகாதாரமான மற்றும் தரமான உணவுகளை மலிவு விலையில் வழங்கும் அம்மா உணவகங்கள் முதல்_அமைச்சர் ஜெயலலிதாவால் 19.2.2013 அன்று தொடங்கி வைக்கப்பட்டன.

சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளிலும் அம்மா உணவகங்கள் ஏழை எளிய மக்களின் ஏகோபித்த வரவேற்புடன் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. இந்த உணவகங்களில் காலை 7 மணி முதல் 10 மணி வரை இட்லி, பொங்கலுடன் சாம்பாரும், மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை சாம்பார் சாதம், தயிர்சாதம், கறிவேப்பிலை சாதம், எலுமிச்சை சாதம் ஆகியவை மலிவு விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இதேபோன்று ஏழை எளிய நடுத்தர மக்கள் அதிக அளவில் வந்து செல்லும் சென்னை, அரசு பொது மருத்துவமனையிலும் ஒரு அம்மா உணவகம் திறக்கப்பட வேண்டும் என்று மருத்துவமனைக்கு வந்து செல்லும் பொதுமக்கள் கோரியிருந்தனர்.

பொதுமக்களின் கோரிக்கையினை நிறைவேற்றிடும் வகையிலும், அதிக அளவில் ஏழை, எளிய மக்கள் வந்து செல்லும் மருத்துவமனை என்பதைக் கருத்தில் கொண்டும், சென்னை, அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் 5100 சதுர அடி பரப்பளவில், ஒரே நேரத்தில் சுமார் 300 பேர் சாப்பிடும் வகையிலும், முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எளிதாக வந்து செல்ல சாய்வு தளம் அமைத்தும், அவர்கள் சிரமமின்றி அமர்ந்து சாப்பிடும் வகையில் தாழ்வான மேஜை உள்ளிட்ட வசதிகளுடன் அம்மா உணவகம் அமைத்திட முதல்_அமைச்சர் ஜெயலலிதா உத்திரவிட்டார். அதன்படி, புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்த அம்மா உணவகத்தை முதல்_அமைச்சர் ஜெயலலிதா நேற்று  காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் கே.பி. முனுசாமி, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி, தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைச் செயலாளர் பணீந்திர ரெட்டி, சென்னை மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

வீட்டுமனை பட்டா வழங்கும் சிறப்பு முகாம் 25–ந் தேதி தொடங்குகிறது

Print PDF

தினத்தந்தி           21.11.2013

வீட்டுமனை பட்டா வழங்கும் சிறப்பு முகாம் 25–ந் தேதி தொடங்குகிறது

தூத்துக்குடியில் வீட்டுமனை பட்டா வழங்கும் சிறப்பு முகாம் வருகிற 25–ந் தேதி தொடங்குகிறது என மாவட்ட கலெக்டர் ம.ரவிகுமார் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

சிறப்பு முகாம்

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிப்பவர்களுக்கு உரிய ஆவணங்களின் அடிப்படையில் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டு வருகிறது. தோராய வீட்டுமனை பட்டா வழங்குவது தொடர்பாக தூத்துக்குடி டூவிபுரம் 7–வது தெருவில் உள்ள மாவட்ட மக்கள் நல திருமண மண்டபத்தில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

வருகிற 25–ந் தேதி, அலகு 1 மீனாட்சிபுரம் மெயின் ரோடு, முதல் தெரு, மேற்கு தெரு, 4–வது தெரு, 3–வது தெரு, ஜெயராஜ் ரோடு, மீனாட்சிபுரம் கிழக்கு தெரு, பாளையங்கோட்டை ரோடு, டூவிபுரம் 1, 2, 3 தெரு, அலகு–2 பொன்னகரம், பார்வதியம்மன் கோவில் தெரு, 4–வது தெரு, 5–வது தெரு.

26–ந் தேதி, அலகு–1 பாளையங்கோட்டை ரோடு மேற்கு, வி.வி.டி.தெரு, மணிநகர் 2–வது தெரு, டூவிபுரம் மெயின் ரோடு, டூவிபுரம் 1–வது தெரு. அலகு–2 திரவியபுரம் 5–வது தெரு.

27–ந் தேதி, அலகு–1 டூவிபுரம் 2, 3–வது தெரு, அலகு–2 முத்துகிருஷ்ணாபுரம் 3, 4, 5, 6 ஆகிய தெருக்கள்.

28–ந் தேதி, அலகு–1 டூவிபுரம் 2, 3–வது தெரு, அலகு–2 முத்துகிருஷ்ணாபுரம் 1, 2 ஆகிய தெருக்கள்.

29–ந் தேதி அலகு–1 டூவிபுரம் 3,4,5 ஆகிய தெருக்கள், வி.வி.டி.ரோடு. அலகு–2 முத்துகிருஷ்ணபுரம் 1, 2 ஆகிய தெருக்கள்.

30–ந் தேதி அலகு–1 டூவிபுரம் 4, 5, 6 ஆகிய தெருக்கள். அலகு–2 முத்துகிருஷ்ணாபுரம்.

திரேஸ்புரம்

1–ந் தேதி அலகு–1 டூவிபுரம் 5, 8, 9, 10, 11 ஆகிய தெருக்கள், ஜெயராஜ் ரோடு. வி.வி.டி.ரோடு, அலகு–2 பூபால்ராயர்புரம்.

2–ந் தேதி டூவிபுரம் 5, 10, 11 ஆகிய தெருக்கள், வி.வி.டி.ரோடு, அலகு–2 திரேஸ்புரம்.

3–ந் தேதி அலகு–1 கே.வி.கே.நகர், போல் பேட்டை, அலகு–2 பூபால்ராயர்புரம்.

4–ந் தேதி அலகு–2 போல் பேட்டை, அலகு–2 பூபால்ராயர்புரம், திரேஸ்புரம்.

ஆவணங்கள்

மேற்கண்ட தேதிகளில் நடைபெறும் முகாமில் பொதுமக்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட படிவம்–1–ல் குறிப்பிட்டு பட்டாதாரர் பெயர்களுக்கு முந்தைய கிரைய ஆவணங்கள் (மூலப்பத்திரம்), தொடர் கிரைய ஆவணங்கள், வில்லங்க சான்றுகள், வீட்டு தீர்வை ரசீதுகள், இறப்பு மற்றும் வாரிசு சான்றிதழ்களுடன் நேரில் ஆஜராக வேண்டும்.

அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்தால், உட்பிரிவு இல்லாதவைகளுக்கு 15 நாட்களிலும், உட்பிரிவு உள்ள ஆவணங்களுக்கு அதிகபட்சமாக 45 நாட்களில் பட்டா வழங்கப்படும்.

இவ்வாறு தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ம.ரவிகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

 

அரசு பொது மருத்துவமனையில் 'அம்மா உணவகம்' திறப்பு முதல் நாளில், 2,600 பேர் சாப்பிட்டனர்; பிற இடங்களிலும் துவங்க வலியுறுத்தல்

Print PDF

தினமலர்           21.11.2013

அரசு பொது மருத்துவமனையில் 'அம்மா உணவகம்' திறப்பு முதல் நாளில், 2,600 பேர் சாப்பிட்டனர்; பிற இடங்களிலும் துவங்க வலியுறுத்தல்

சென்னை:தமிழகத்தில் முதல் முறையாக, சென்னை, அரசு பொது மருத்துவமனையில், 'அம்மா உணவகம்' நேற்று திறக்கப்பட்டது. முதல் நாளில், 2,600 பேர், நீண்ட வரிசையில் காத்து நின்று, உணவை ருசித்தனர். மற்ற மருத்துவமனைகளிலும், அம்மா உணவகத்தைத் துவங்க வேண்டும் என, வலியுறுத்தினர்.

சென்னை மாநகராட்சியில், வார்டுக்கு ஒன்று என, 200 இடங்களில், 'அம்மா உணவகம்' திறக்கப்பட்டுள்ளன.

வரவேற்பு

ஐந்து ரூபாய்க்கு சாம்பார் சாதம், எலுமிச்சை சாதம், கறிவேப்பிலை சாதம், மூன்று ரூபாய்க்கு தயிர்சாதம், ஒரு ரூபாய்க்கு இட்லியும் தரப்படுகிறது. குறைந்த விலையில், தரமான உணவு கிடைப்பதால், மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இதுபோன்று, அரசு மருத்துவமனைகளிலும் அமைக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்தி வந்தனர்.

இதையேற்ற தமிழக அரசு, 'சென்னை அரசு பொது மருத்துவமனை, ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம், ராயப்பேட்டை அரசு மருத்துவமனைகள் உட்பட, ஏழு மருத்துவமனைகளிலும், மாநகராட்சி மூலம், 'அம்மா உணவகம்' திறக்கப்படும்' என, அறிவித்தது.

சாய்வு தளம்

முதற்கட்டமாக, சென்னை அரசு பொது மருத்துவமனையில், 'அம்மா உணவகம்' பிரமாண்டமாக, 5,100 சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில், 300 பேர் சாப்பிட முடியும்.

மாற்றுத்திறனாளிகள், எளிதாக வந்து செல்லும் வகையில், சாய்வு தளம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த உணவகத்தை, முதல்வர் ஜெயலலிதா, 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில், நேற்று திறந்து வைத்தார். முதல் நாளான நேற்று, மருத்துவமனைக்கு வந்த மக்கள், நீண்ட வரிசையில் நின்று, உணவுகளை வாங்கி ருசித்தனர். முதல் நாள் என்பதால், கேசரி இலவசமாக தரப்பட்டது.

அதிகாரிகள் கூறியதாவது:

அம்மா உணவகங்களில், தினமும், 1,500 இட்லி; 400 பொங்கல்; 500 சாம்பார் சாதம்; 300 தயிர் சாதம் விற்கப்படுகிறது. அரசு பொது மருத்துவமனையில் நேற்று ஒரு நாளில், 1,519 சாம்பார் சாதமும், 1,085 தயிர் சாதமும் விற்பனையானது.

மொத்தம், 2,600 பேர் வரை சாப்பிட்டுள்ளனர். வரும் நாட்களில், பயனாளிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். இவ்வாறு, அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

'காலையில் குறைந்த எண்ணிக்கையில் தயாரிக்கப்பட்ட இட்லி, இலவசமாக தரப்பட்டது; விற்பனை செய்யப்படவில்லை' என, ஊழியர்கள் தெரிவித்தனர்.

உணவை ருசித்த பெண்கள் கூறியதாவது:

குறைந்த விலை என்றாலும், சாப்பாடு நன்றாக உள்ளது. இது, நோயாளிகள், நோயாளிகளைப் பார்க்க வரும் உறவினர்கள், ஏழைகளுக்கும் பயனுள்ளதாக அமையும்.

ஸ்டான்லி உள்ளிட்ட பிற அரசு மருத்துவமனைகளிலும், அம்மா உணவகத்தை திறக்க வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள, அரசு மருத்துவமனைகளிலும் திறந்தால் நன்றாக இருக்கும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

 


Page 77 of 841