Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

வெள்ள நீர் வடிகால் பணி 10 தினங்களில் நிறைவடையும்

Print PDF

தினமணி 10.11.2009

வெள்ள நீர் வடிகால் பணி 10 தினங்களில் நிறைவடையும்

விழுப்புரம், நவ. 9: விழுப்புரத்தில் நடைபெறும் வெள்ள நீர் வடிகால் பணிகள் இன்னும் 10 தினங்களுக்குள் முடிவடையும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி தெரிவித்தார்.

தற்போது பெய்த மழையில் விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் மழை நீர் தேங்கியுள்ளது. அந்த மழை நீரை வெளியேற்றும் பணிக்காக ரூ.1.55 கோடியில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இப் பணிகளை பார்வையிட்டு உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி கூறியது:

""கடந்த ஆண்டு மழை வெள்ளம் ஏற்பட்டபோது இருந்த தண்ணீர் இப்போது பஸ் நிலையத்தில் இல்லை. மேலும் குடிநீர் வடிகால் வாரியத்தின் வாயிலாக அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு வருகின்றன. 100 குதிரை திறன் கொண்ட மின்மோட்டார் பொறுத்தும் பணி மட்டும் நிலுவையில் உள்ளது.

தற்போது மழை நீரை வெளியேற்ற வடிகால்கள் அமைக்கப்படும். இன்னும் 10 தினங்களில் மின்மோட்டார் நிறுவப்பட்டு, அனைத்து பணிகளும் முடிக்கப்படும். இதனால் விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் வெள்ள நீர் தேங்குவதற்கு வாய்ப்பே இல்லை'' என்றார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் அளித்த பதில்:

""விழுப்புரத்தில் நடைபெற்று வரும் பாதாளச் சாக்கடை பணிகள் 80 சதவீதம் முடிவடைந்துவிட்டது. குறிப்பாக நகராட்சி பகுதியில் 86 கி.மீ. நீளத்துக்கு 70 கி.மீ. நீளம் பாதாளச் சாக்கடை பணிகள் முடிவடைந்துவிட்டன. இரு மாதத்துக்குள் அனைத்து பணிகளும் முடிக்கப்படும். அதன் பிறகு அனைத்து சாலைகளும் சிமென்ட் சாலைகளாக மாற்றப்படும்'' என்றார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் ஆர்.பழனிச்சாமி, நகர் மன்றத் தலைவர் ஆர்.ஜனகராஜ், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் அமல்ராஜ், நகராட்சி ஆணையர் ஏ.கே.சிவக்குமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Last Updated on Tuesday, 10 November 2009 07:32
 

மழை தீவிரம்: முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் மாநகராட்சி

Print PDF

தினமணி 10.11.2009

மழை தீவிரம்: முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் மாநகராட்சி

மதுரை, நவ.9: பருவமழை தீவிரமடைந்து வருவதைக் கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருவதாக ஆணையர் எஸ். செபாஸ்டின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்திற்குத் தலைமை வகித்து அவர் பேசியது:

மதுரையில் தாழ்வான பகுதிகளில் தேங்கும் நீரை மாநகராட்சி ஊழியர்கள் மூலம் அகற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மழைநீர் வெளியேற சுமார் 868 கி.மீ. நீளத்துக்கு வடிகால் அமைக்கப்பட்டு வருகிறது. கிருதுமால், சிந்தாமணி, அவனியாபுரம், சொட்டதட்டி, பீ.பீ.குளம், பனையூர் வாய்க்கால்களைத் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படும் என்பதால், வைகையாற்றின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. கல்பாலத்தின் கீழே உள்ள துவாரங்களில் உள்ள அடைப்புகள் உடனடியாக அப்புறப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

மழைநீர் வடிகால் குழாய்களில் உள்ள அடைப்புகளை சுத்தம் செய்தல், அபாயகரமான மரங்களை வெட்டுதல், சீரற்ற கட்டடங்கள் மீது பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளுதல், காலரா பரவாமல் தடுக்க தடுப்பூசி போடுதல், நடமாடும் மருத்துவக் குழு அமைத்தல், வானிலை எச்சரிக்கை செய்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களை அருகில் உள்ள மாநகராட்சிப் பள்ளிகளில் தங்கவைப்பதற்கு 20 பள்ளிகள் தயார் நிலையில் உள்ளன. அவர்களுக்குத் தேவையான உணவு வழங்குதல் போன்ற பணிகளில் மாநகராட்சி அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள், துப்புரவுப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மண்டல அலுவலகங்களில் 24 மணி நேரமும் பணியாற்றுவதற்கு வசதியாக சுழற்சி முறைப் பணி அடிப்படையில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பொதுமக்கள் குடிநீரை காய்ச்சிப் பருக வலியுறுத்துதல், கழிவுநீர் தேங்காத வண்ணம் அகற்றுதல், கொசு மருந்து அடித்தல் உள்பட பல்வேறு முன்னெச்சரிக்கைப் பணிகள் சுகாதாரத் துறை மூலம் எடுக்கப்பட்டு வருகிறது என்றார் ஆணையர்.கூட்டத்தில் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Last Updated on Tuesday, 10 November 2009 07:26
 

ராமநாதபுரத்தில் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை

Print PDF

தினமணி 10.11.2009

ராமநாதபுரத்தில் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை

ராமநாதபுரம், நவ. 9: ராமநாதபுரம் நகரில் நாகநாதபுரம் ஊருணியில் மழைநீர் நிரம்பி நகருக்குள் வராமல் தடுப்பதற்காக எடுக்கப்படும் நடவடிக்கையை,வருவாய் கோட்டாட்சியர் மற்றும் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டனர் .

ராமநாதபுரம் நகரில் தொடர்ந்து மழை பெய்தால், நாகநாதபுரம் ஊருணி நிரம்பி, சின்னக்கடைத் தெரு, நாகநாதபுரம், பாரதிநகர், புளிக்காரத் தெரு ஆகிய பகுதிகளில் தண்ணீர் வீடுகளை சூழந்துவிடும். இதனால், இப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர்.

எனவே, ராமநாதபுரம் ஆட்சியர் த.. ஹரிஹரன், மக்களவை உறுப்பினர் ஜே.கே. ரித்தீஷ் ஆகியோரது ஆலோசனையின்பேரில், நாகநாதபுரம் ஊரணியிலிருந்து வெளியேறும் மழை நீரை நகருக்குள் வராமல் தடுக்க, பெரிய குழாய்கள் பதித்து அதன் வழியாக தண்ணீரை சக்கரக்கோட்டை கால்வாய் வழியாக கடலுக்குள் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து, மக்களவை உறுப்பினர் தொகுதி நிதியிலிருந்து ரூ. 20 லட்சம் மதிப்பில், பொதுப்பணித் துறை அதிகாரிகள் தலைமையில், கடந்த ஒரு மாதமாக பெரிய குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்று வந்தன.

இப்பணி முடிந்து, ஊருணி நீரை குழாய்கள் வழியாக கால்வாய்க்கு திறந்து விடப்படுவதை, ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் து. இளங்கோ, வட்டாட்சியர் து. இந்திரஜித், வருவாய் ஆய்வாளர் பழனிக்குமார், நகராட்சி ஆணையர் கே.வி. பாலகிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர் சுரேஷ்குமார் ஆகியோர் பார்வையிட்டனர். இந்த நடவடிக்கைக்கு பாராட்டை தெரிவித்தனர்.

Last Updated on Tuesday, 10 November 2009 07:24
 


Page 764 of 841