Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

துப்புரவுப் பணியாளர்களுக்கான கோலப்போட்டி

Print PDF

தினமணி 09.11.2009

துப்புரவுப் பணியாளர்களுக்கான கோலப்போட்டி

திருப்பத்தூர், நவ.8: திருப்பத்தூரில் உள்ளாட்சி தின விழாவையொட்டி கோலப்போட்டி நடைபெற்றது.

சனிக்கிழமை நடைபெற்ற கோலப் போட்டியில், திருப்பத்தூர் பேரூராட்சியில் பணிபுரியும் துப்புரவுப் பெண் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

நடுவராக, தலைமை எழுத்தர் சாந்தி, பரிசுக்கான கோலங்களைத் தேர்வு செய்தார். பதினைந்து பெண்கள் கலந்து கொண்ட இப்போட்டியில் ராணி முதல் பரிசையும், காளீஸ்வரி இரண்டாம் பரிசையும், நாச்சம்மை மூன்றாம் பரிசையும் பெற்றனர்.

தேர்வு செய்யப்பட்ட பெண்களுக்குத் திருப்பத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் அமானுல்லா பாராட்டு சான்றிதழ்களையும் பரிசுகளையும் வழங்கினார்.

Last Updated on Monday, 09 November 2009 09:29
 

அரியலூர் நகராட்சியில் வெள்ள நிவாரணப் பணிகள்

Print PDF

தினமணி 9.11.2009

அரியலூர் நகராட்சியில் வெள்ள நிவாரணப் பணிகள்

அரியலூர், நவ. 8: அரியலூர் நகராட்சியில் மழைநீர் தேங்காத வகையில், வெள்ள நிவாரணப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக நகராட்சியின் நிர்வாக அதிகாரி த. சமயச்சந்திரன் தெரிவித்தார்.

அரியலூர் ஐயப்பன் ஏரிக்கரை, சித்தேரி வடிகால் ஓடைகளில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை பார்வையிட்டு, பின்னர் அவர் கூறியது:

அரியலூர் நகராட்சியில் கடந்த ஆண்டு மழை பெய்தபோது, பெரியத் தெரு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கோ.சி. நகர், சடையப்பர் தெரு உள்ளிட்ட இடங்களில் உள்ள 500-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது. இதைக் கருத்தில் கொண்டு மழைக்காலம் தொடங்கும் முன்னரே, நகராட்சியின் சுகாதாரப் பணியாளர்கள் மூலம் வடிகால் ஓடைகளில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. இதனால், அரியலூர் நகரின் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் தேங்காத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், செட்டி ஏரி, ஐயப்பன் ஏரி, சித்தேரி, அரசு நிலையுட்டான் ஏரி உள்ளிட்ட ஏரிகள் நிரம்பி வருகின்றன.

மழையினால் சேதமடைந்த சாலைகள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அதை உடனடியாகச் சீரமைக்கும் வகையில், அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட உள்ளது.

அரியலூர் நகராட்சி எல்லைக்கு உள்பட்ட பகுதியில் மாட்டு சாணங்களை சிலர் கொட்டி ஆக்கிரமித்துள்ளனர். அதை உடனடியாக அவர்களே அகற்றிக் கொள்ள வேண்டும். இல்லையெனில், அவற்றை நகராட்சி நிர்வாகத்தின் மூலம் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் சமயச்சந்திரன். அப்போது, மேற்பார்வையாளர் பாண்டு, சுகாதார ஆய்வாளர் ரவீந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

நிவாரணப் பணிகளில் உள்ளாட்சி அமைப்பினர் ஈடுபட வேண்டும்

Print PDF

தினமணி 9.11.2009

நிவாரணப் பணிகளில் உள்ளாட்சி அமைப்பினர் ஈடுபட வேண்டும்

காரைக்கால், நவ. 8: மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரணப் பணிகளில் உள்ளாட்சி அமைப்பினர் ஈடுபட வேண்டும் என்று புதுவை அமைச்சர் ஏ. நமசிவாயம் கேட்டுக் கொண்டார்.

புதுவை உள்ளாட்சித் துறை அமைச்சர் ஏ. நமசிவாயம் சனிக்கிழமை மாலை காரைக்கால் வந்தார். அவரிடம், மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ந.வசந்தகுமார், நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்துப் பிரதிநிதிகள் விளக்கிக் கூறினர். பின்னர் அமைச்சர் அளித்த பேட்டி:

மழையால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவும் வகையில், உள்ளாட்சி அமைப்புகள் தீவிரமாக பணியாற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். மழையால் பாதிப்பு நிவாரண உதவி மேற்கொள்ள நகராட்சிக்கு ரூ. 1 லட்சமும், கொம்யூன் பஞ்சாயத்துக்கு தலா ரூ.50 ஆயிரமும் தரப்பட்டுள்ளது. இதைக் கொண்டு வெள்ள நீர் வடியச் செய்வது உள்ளிட்ட பணிகளைச் செய்ய வேண்டும்.

காரைக்காலில் தேங்கி நிற்கும் மழை நீரை வடியச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வாய்க்கால்கள் உரிய நேரத்தில் தூர்வாரப்பட்டதால் பெரும் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.

விவசாயப் பாதிப்புகள் குறித்து தற்போது கணக்கெடுக்க முடியாது. இதற்கான வேலைகளை உரிய நேரத்தில் மேற்கொள்ளப்படும். சாக்கடைகள் அடைப்பட்டு, ஆங்காங்கே தண்ணீர் தேங்குவதால் புகார் கூறப்பட்டுள்ளது.

அந்த இடங்களை கண்டறிந்து உடனடியாக சீர் செய்ய நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார் அமைச்சர்.

Last Updated on Monday, 09 November 2009 09:22
 


Page 766 of 841