Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

உதகை நகராட்சி சார்பில் உள்ளாட்சி தின விழா

Print PDF

தினமணி 2.11.2009

உதகை நகராட்சி சார்பில் உள்ளாட்சி தின விழா

உதகை, நவ. 1: உதகை நகராட்சியின் சார்பில் உள்ளாட்சி தின விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

இதையொட்டி உதகை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து நகர்மன்ற அலுவலகம் வரை நடைபெற்ற பேரணியில் நகர்மன்ற அதிகாரிகளும், நகர்மன்ற உறுப்பினர்களும் பங்கேற்றனர்.

உதகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உள்ளாட்சி தின விழா பேரணியை நகர்மன்ற தலைவர் ராஜேந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதில் நகர்மன்ற ஆணையர் கிரிஜா, பொறியாளர் ராமமூர்த்தி, நகர்நல அலுவலர் பூங்கொடி, நகரமைப்பு அலுவலர் சவுந்திரராஜன், துணைத்தலைவர் ஜே.ரவிக்குமார் ஆகியோருடன் இளங்கோவன், முஸ்தபா, இம்தியாஸ், கார்த்திக், ரமேஷ், ரவி, நாகராஜ் உள்ளிட்ட 36 வார்டுகளின் உறுப்பினர்களுமாக நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

இப்பேரணியில் உதகை நகராட்சியின் செயல்பாடுகள் குறித்த விளக்க அட்டைகளை ஏந்தி ஏராளமான மகளிர் சுய உதவிக்குழுவினரும் பங்கேற்றனர்.

மத்திய பேருந்து நிலைய வளாகத்திலிருந்து தொடங்கிய இப்பேரணி நகரின் முக்கிய சாலைகள் வழியாக நகர்மன்ற அலுவலகத்தை வந்தடைந்தது.

இந்த பேரணி சென்ற பாதைகளில் அரசின் நலத்திட்ட உதவிகள், தனி நபர்களுக்கு வழங்கப்பட்ட உதவிகள், நகராட்சியால் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்த விளம்பர பலகைகள் ஆங்காங்கே நிறுவப்பட்டு பொதுமக்களுக்கு நகராட்சியின் செயல்பாடுகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டன.

 

மேட்டுப்பாளையம் நகராட்சி சார்பில் இலவச மருத்துவ முகாம்

Print PDF

தினமணி 2.11.2009

மேட்டுப்பாளையம் நகராட்சி சார்பில் இலவச மருத்துவ முகாம்

மேட்டுப்பாளையம், நவ. 1: மேட்டுப்பாளையம் நகராட்சி மற்றும் பொது சுகாதாரம்-நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் வருமுன் காப்போம் திட்டத்தின்கீழ் இலவச மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மேட்டுபாளையம் நகரவை மகளிர் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற முகாமிற்கு நகராட்சி ஆணையர் சுந்தரம் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ஆறுமுகம் முன்னிலை வகிக்க, நகராட்சி மருத்துவ அலுவலர் நஞ்சப்பன் வரவேற்றார். நகர்மன்றத் தலைவர் சத்தியவதி கணேஷ் குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்தார்.

காரமடை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சக்திவேல் தலைமையில் டாக்டர்கள் மாரியப்பன், விஜயகுமார், உதயகுமார், அனுராதா, மீனாட்சி உட்பட மருத்துவ குழுவினர் சார்பில் 1200 பேருக்கு பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டு இலவச மருந்துகளும் வழங்கப்பட்டன.

இதில் நகர திமுக செயலர் கதிரவன், சுகாதார ஆய்வாளர்கள் சரவணன், நல்லுசாமி, செந்தில், அங்குராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நகராட்சி மின் கண்காணிப்பாளர் அன்வர் நன்றி கூறினார்.

 

உள்ளாட்சி தின விழா: திருப்பூர் மாநகராட்சியில் கொண்டாட்டம்

Print PDF

தினமணி 2.11.2009

உள்ளாட்சி தின விழா: திருப்பூர் மாநகராட்சியில் கொண்டாட்டம்

திருப்பூர், நவ. 1: திருப்பூர் மாநகராட்சி சார்பில் உள்ளாட்சி தினவிழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, மாநகராட்சியிலிருந்து நஞ்சப்பா மாநகராட்சி பள்ளி வரை பேரணி நடத்தப்பட்டது.

மேயர் க.செல்வராஜ் தலைமையில் நடந்த இப்பேரணியில் துணை மேயர் கே.செந்தில்குமார், ஆணையர் ஆர்.ஜெயலட்சுமி, பொறியாளர் கௌதமன், மாநகர் நல அதிகாரி ஜவஹர்லால் உள்பட மாநகராட்சி அலுவலர்கள், துப்புரவு பணியாளர்கள், மகளிர் சுயஉதவிக்குழுவினர் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். நஞ்சப்பா பள்ளியில் மாநகராட்சி பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கவிதை, கட்டுரை, பேச்சு, பாடுப்போட்டிகள் நடத்தப்பட்டன. மாநகராட்சி பணியாளர்களுக்கும் மாமன்ற உறுப்பினர்களுக்கும் இசை நாற்காலி, கயிறு இழுத்தல், சட்டி உடைத்தல் உள்ளிட்ட போட்டிகளும் நடத்தப்பட்டன.

மாலையில் பரிசளிப்பு விழா நடந்தது. விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் சி.சமயமூர்த்தி தலைமை வகித்தார். மாநகராட்சி ஆணையர் ஆர்.ஜெயலட்சுமி வரவேற்றார். போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பரிசுகள் வழங்கினார். மேயர் க.செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதேபோல் மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் ஊராட்சிகளிலும் உள்ளாட்சி தினவிழா கொண்டாடப்பட்டது.

 


Page 781 of 841