Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

பெரியகுளத்தில் கல்லறைகள் அகற்றம்

Print PDF

தினமணி 24.09.2009

பெரியகுளத்தில் கல்லறைகள் அகற்றம்

பெரியகுளம், செப். 23: பெரியகுளத்தில் நகராட்சி மயானத்தில் இருந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட கல்லறைகள் ஜேஸிபி இயந்திரம் மூலம் புதன்கிழமை அகற்றப்பட்டன.

பெரியகுளம் வடகரைப் பகுதியில் சுமார் 3 ஏக்கரில் நகராட்சி மயானம் உள்ளது. இங்கு இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் கல்லறைகள் அமைத்து வழிபடுகின்றனர். சுமார் 300-க்கும் மேற்பட்ட கல்லறைகள் உள்ளன.

எதிர்காலத்தில் புதைப்பதற்கு இடவசதியில்லாத சூழ்நிலை ஏற்படும் என்பதால், கல்லறைகளை அகற்றக்கோரி பல்வேறு சமூகநல அமைப்புகள் நகராட்சிக்கு கோரிக்கை விடுத்தன. இதைத் தொடர்ந்து கல்லறைகளை அகற்றுவது தொடர்பாக முக்கியப் பிரமுகர்கள், சமுதாயத் தலைவர்கள் ஆகியோருடன் நகராட்சி மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை.

இருப்பினும் பொதுசுகாதாரத்தை பேணும் பொருட்டும், மயானத்தை நவீனமயமாக்கும் பொருட்டும், மயானத்தில் உள்ள கல்லறைகள் 5 ஜேஸிபி இயந்திரங்கள் முலம் புதன்கிழமை அகற்றப்பட்டன.

நகராட்சி ஆணையர் கே. சரவணக்குமார், தாசில்தார் பி. குமரேஸ்வரன், வருவாய் ஆய்வாளர் (பொறுப்பு) ஆர். சுப்பிரமணியன் ஆகியோர் இப் பணிகளைப் பார்வையிட்டனர்.

மேலும் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்கும் பொருட்டு,

பெரியகுளம் டி.எஸ்.பி. ஜெயராமன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸôர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

கல்லறைகள் அகற்றப்பட்ட இடத்தை பொதுமக்கள் வசதிக்காக நவீனப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

Last Updated on Thursday, 24 September 2009 06:17
 

நெல்லைக்கு அக். 13, 14-ல் ஸ்டாலின் வருகை: ரூ.100 கோடி பணிகளை தொடக்கி வைக்கிறார்

Print PDF

தினமணி 24.09.2009

நெல்லைக்கு அக். 13, 14-ல் ஸ்டாலின் வருகை: ரூ.100 கோடி பணிகளை தொடக்கி வைக்கிறார்

திருநெல்வேலி, செப். 23: திருநெல்வேலி மாவட்டத்தில் அக்டோபர் 13, 14 ஆம் தேதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் துணை முதல்வர் மு.. ஸ்டாலின் சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள திட்டப் பணிகளைத் தொடக்கி வைக்க உள்ளார்.

இம் மாவட்டத்தில் துணை முதல்வர் பங்கேற்றும் இரண்டு நாள் நிகழ்ச்சிகளுக்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்திற்கு சட்டப் பேரவைத் தலைவர் இரா. ஆவுடையப்பன் தலைமை தாங்கினார். மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பூங்கோதை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட ஆட்சியர் மு. ஜெயராமன் பேசியதாவது:

இம் மாவட்டத்தில் அக்டோபர் 13, 14 ஆகிய இரண்டு நாள்களும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் துணை முதல்வர் கலந்து கொள்கிறார். அக்டோபர் 13 ஆம் தேதி காலையில் ராதாபுரம் பஸ்நிலையம், பெரியார் சமத்துவபுரம் ஆகியவற்றை அவர் திறந்து வைக்கிறார். இந்த விழாக்களில் அரசுத் துறைகள் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்குவார்.

அன்று மாலையில் திருநெல்வேலியில் நடைபெறும் அரசு விழாவில், மாநகராட்சிக்கான குடிநீர் திட்டப் பணிகளையும், ரூ.50 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளையும் தொடக்கி வைக்கிறார். மேலும், 2,000 மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு சுழல் நிதியையும் அவர் வழங்க உள்ளார்.

அக்டோபர் 14 ஆம் தேதி காலையில் தென்காசியில் நடைபெறும் அரசு விழாவில், அங்கு ரயில்வே பாலம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல்லை நாட்டி வைக்கிறார் ஸ்டாலின்.

இந்த இரண்டு நாள் நிகழ்ச்சிகளிலும் மொத்தம் சுமார் ரூ. 100 கோடி மதிப்புள்ள திட்டங்கள் தொடங்கப்பட உள்ளன என்றார் ஆட்சியர்

கூட்டத்தில், மேயர் அ.லெ. சுப்பிரமணியன், சட்டப் பேரவை உறுப்பினர்கள் வீ. கருப்பசாமி பாண்டியன், என். மாலைராஜா, மு. அப்பாவு ஆகியோர் பேசினர். மாவட்ட வருவாய் அலுவலர் பெ. ரமண சரஸ்வதி, மாவட்ட ஊராட்சித் தலைவர் ம. கிரஹாம்பெல், துணை மேயர் கா. முத்துராமலிங்கம், மாநகராட்சி ஆணையர்

பாஸ்கரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் உல. ரவீந்திரன், சுற்றுலா அலுவலர்

செல்லப்பா மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Last Updated on Thursday, 24 September 2009 06:05
 

சுவரொட்டிகளை ஒழிக்க புது முயற்சி கலாசார சின்னங்களைத் தீட்டி சுவரை அழகுபடுத்தும் பெங்களூர் மாநகராட்சி

Print PDF

தினமணி 24.09.2009

சுவரொட்டிகளை ஒழிக்க புது முயற்சி கலாசார சின்னங்களைத் தீட்டி சுவரை அழகுபடுத்தும் பெங்களூர் மாநகராட்சி

பெங்களூர், செப். 23: சுவரொட்டி இல்லாத பெங்களூர் நகரை உருவாக்கும் முயற்சியாக சுவர்களில் சரித்திர, கலாசார சின்னங்களைத் தீட்டிவருகிறது பெங்களூர் மாநகராட்சி.

பெங்களூர் நகரம் பூங்கா நகரம், தொழில்நுட்ப நகரம் என்ற பெயரைப் பெற்றிருந்தாலும், நகரை அழகுபடுத்துவதிலும், தூய்மையாக வைத்திருப்பதிலும் அந்தப் பெயரைப் பெறவில்லை. நகரில் எங்கு பார்த்தாலும் சினிமா, விளம்பர சுவரொட்டிகள் மயமாகவே காட்சியளிக்கிறது. அதுவும் அரசு சுவர்களில் சுவரொட்டிகளுக்குப் பஞ்சமே இல்லை. சுவரொட்டிகளை அவ்வப்போது மாநகராட்சி அகற்றினாலும் மறுநாள் காலையில் திரைப்படங்களின் புதிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருக்கும்.

மாநகராட்சிக்கு பதவிக்காலம் முடிவடைந்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்னும் தேர்தல் நடத்தப்படவில்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட மாநகராட்சி நிர்வாகம் இருந்தாலும் இதே நிலைதான். இந்நிலையில் மாநகராட்சி இப்போது பெருநகர மாநகராட்சியாக மாற்றப்பட்டுள்ளது. மாநகராட்சியுடன் புதிதாக 7 நகரசபைகள், ஒரு டவுன் பஞ்சாயத்து மற்றும் 210 கிராமங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால் மாநகராட்சியின் எல்லை விரிவடைந்துள்ளது.

இந்தச் சூழ்நிலையில் மாநகராட்சி ஆணையராகப் பொறுப்பேற்றுள்ள பரத்லால் மீனா பெங்களூரை சுவரொட்டிகள் இல்லாத நகரமாக மாற்ற முயற்சி மேற்கொண்டுள்ளார். இதையடுத்து முதல்கட்டமாக அவர் திரைப்பட வர்த்தகசபைக்கு கடிதம் எழுதி நகரில் பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டக்கூடாது என்று தெரிவித்து, திரைப்பட விளம்பரங்கள் செய்வதற்குத் தனி இடம் ஒதுக்கிக் கொடுக்கத் தயார். அதற்காக மாநகராட்சியை அணுகலாம் என்று தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து சுவரொட்டிகள் ஒட்டத் தடை விதித்து கண்டிப்பான உத்தரவு பிறப்பித்தார். மீறி ஒட்டப்பட்ட சுவரொட்டிகளின் திரைப்பட தயாரிப்பாளர்கள் மீது போலீஸில் புகார் செய்யப்பட்டது.

சுரவரொட்டிகள் ஒட்டப்படாமல் இருக்கும் சுவர்களை அழகுபடுத்தும் பணியை மாநகராட்சி இப்போது துவக்கியுள்ளது. சுவர்களில் கர்நாடகத்தின் கலை, கலாசாரம், சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை, சின்னங்களைப் படமாக வரைந்து வருகிறது மாநகராட்சி. ஹம்பி, பேலூர், ஹளபேடு, சரவணபலகோலா, பிஜாப்பூர், பெல்லாரி, மைசூர் அரண்மனை, கர்நாடகத்தின் முக்கிய பகுதிகளில் உள்ள சுற்றுலாத்தலங்கள், சரித்திர புகழ்பெற்ற இடங்கள், புராதன இடங்களை சுவர்களில் தீட்டி வருகிறது. இவற்றை பார்க்கும்போது பிரமிப்பாகவும், அழகாகவும் உள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: வழிபாட்டுத் தலங்கள், சாமி சிலைகள் தவிர 60 வகையான பொருள்கள் தேர்வு செய்யப்பட்டு சுவர்களில் வரையப்பட்டு வருகிறது.

நகரை அழகுபடுத்தும் பணிக்கு மாநகராட்சி சார்பில் பணம் ஏதும் செலவு செய்யப்படவில்லை. மாநகராட்சியிடம் விளம்பரம் வைக்க அனுமதி பெற்ற விளம்பரதாரர்கள் அவர்களிடம் பணியாற்றும் ஓவியர்களைக் கொண்டு சுவர்களை அழகுபடுத்த கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். அவர்கள் இதை செய்கிறார்கள்.

மேலும் ஓவியக் கல்லூரியில் பயிலும் மாணவர்களும் நகரில் பல்வேறு இடங்களில் சுவர்களை அழகுபடுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுதவிர சில ஹோட்டல் நிர்வாகத்தையும் மாநகராட்சி அணுகியுள்ளது. அந்த ஹோட்டல்கள் இருக்கும் பகுதியில் சுவர்களை அழகுபடுத்த அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.

அதுபோல் சில சமூக நல அமைப்புகளும், இளைஞர் சங்கமும் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளன. இவ்வாறு வரையப்படும் ஓவியங்கள் மீது நோட்டீஸ் ஒட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதை அப்பகுதி மக்கள் கண்காணித்து வருகிறார்கள் என்றார் அவர்.

Last Updated on Thursday, 24 September 2009 06:03
 


Page 790 of 841