Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

சென்னை அரசு பொது மருத்துவமனையில் அம்மா உணவகம் : முதல்வர் துவக்கினார்

Print PDF

தினமணி          20.11.2013

சென்னை அரசு பொது மருத்துவமனையில் அம்மா உணவகம் : முதல்வர் துவக்கினார்

சென்னை அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட அம்மா உணவகத்தை தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு வீடியோ கான்பரன்சிங் மூலமாக, முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளிலும் அம்மா உணவகங்கள் ஏழை எளிய மக்களின் ஏகோபித்த வரவேற்புடன் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. இந்த உணவகங்களில் காலை 7 மணி முதல் 10 மணி வரை இட்லி, பொங்கலுடன் சாம்பாரும், மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை சாம்பார் சாதம், தயிர்சாதம், கறிவேப்பிலை சாதம், எலுமிச்சை சாதம் ஆகியவை மலிவு விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இதேபோன்று ஏழை எளிய நடுத்தர மக்கள் அதிக அளவில் வந்து செல்லும் சென்னை, அரசு பொது மருத்துவமனையிலும் ஒரு அம்மா உணவகம் திறக்கப்பட வேண்டும் என்று மருத்துவமனைக்கு வந்து செல்லும் பொதுமக்கள் கோரியிருந்தனர்.

பொதுமக்களின் கோரிக்கையினை நிறைவேற்றிடும் வகையிலும், அதிக அளவில் ஏழை, எளிய மக்கள் வந்து செல்லும் மருத்துவமனை என்பதைக் கருத்தில் கொண்டும், சென்னை, அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் 5100 சதுர அடி பரப்பளவில், ஒரே நேரத்தில் சுமார் 300 பேர் சாப்பிடும் வகையிலும், முதியோர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் எளிதாக வந்து செல்ல சாய்வு தளம் அமைத்தும், அவர்கள் சிரமமின்றி அமர்ந்து சாப்பிடும் வகையில் தாழ்வான மேஜை உள்ளிட்ட வசதிகளுடன் அம்மா உணவகம் அமைத்திட முதல்வர் உத்திரவிட்டார். அதன்படி, புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்த அம்மா உணவகத்தை முதல்வர் இன்று காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.

 

சென்னையில் அம்மா உணவகங்களில் நாளை முதல் ரூ.3-க்கு 2 சப்பாத்திகள்

Print PDF

மாலை மலர்            19.11.2013

சென்னையில் அம்மா உணவகங்களில் நாளை முதல் ரூ.3-க்கு 2 சப்பாத்திகள்
 
சென்னையில் அம்மா உணவகங்களில் நாளை முதல் ரூ.3-க்கு 2 சப்பாத்திகள்
சென்னை, நவ.19 - சென்னையில் வார்டுக்கு ஒன்றுவீதம் 200 வார்டுகளிலும் சென்னை மாநகராட்சியின் அம்மா உணவகம் இயங்கி வருகிறது. இந்த உணவகத்தில் காலை 7 மணி முதல் 10 மணி வரை காலை உணவாக ஒரு இட்லி ரூ.1-க்கும், பொங்கல் ரூ.5-க்கும், மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையில் மதிய உணவாக ரூ.5-க்கு சாம்பார் சாதமும், ரூ.5-க்கு கறிவேப்பிலை சாதம் அல்லது எலுமிச்சை சாதமும், ரூ.3-க்கு தயிர் சாதமும் வழங்கப்பட்டு வருகிறது.

சென்னையில் உள்ள 200 அம்மா உணவகங்களிலும் மாலை நேர உணவாக ரூ.3-க்கு, 2 சப்பாத்திகளும், பருப்பு கடைசலும் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். அதன்படி, சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் நாளை(புதன்கிழமை) முதல் மாலை நேர உணவாக ரூ.3-க்கு 2 சப்பாத்திகள் வழங்கப்பட உள்ளது.

இதற்கான பணியில் சென்னை மாநகராட்சி முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறது. சென்னையில் 14 மையங்களில் ஒரு மணி நேரத்தில் 3 ஆயிரம் சப்பாத்திகளை தயார் செய்யும் நவீன எந்திரம் பொருத்தப்பட்டு, சோதனை அடிப்படையில் சப்பாத்திகள் தயார் செய்யும் பணி கடந்த 2 நாட்களாக நடைபெற்று வருகின்றது.

சோதனையில் சப்பாத்தியின் சுவையும், பருப்பு கடைசல் சுவையும் அருமையாக வந்துள்ளது. சென்னை கோபாலபுரத்தில் உள்ள அம்மா உணவகத்தில் ரூ.3-க்கு 2 சப்பாத்திகள் மற்றும் பருப்பு கடைசல் வழங்கும் திட்டத்தினை முதல்-அமைச்சர் ஜெயலலிதா சென்னை தலைமை செயலகத்தில் இருந்து ‘காணொலி’ காட்சி மூலம்(வீடியோ-கான்பரன்சிங்)நாளை மாலை அறிமுகம் செய்து வைக்கிறார்.

அம்மா உணவகத்தில் சப்பாத்தி வழங்கப்படுவது குறித்து மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘சென்னை மாநகராட்சி அம்மா உணவகங்களில் சப்பாத்தி செய்வதற்கான கோதுமைகளை தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிப கழகம் வழங்குகிறது.

சப்பாத்தி தயார் செய்யும் பணியினை கோயம்புத்தூரை சேர்ந்த ஒரு தனியார் கேட்டரிங் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. அந்த நிறுவனம் தான் நவீன சப்பாத்தி எந்திரங்களை கொள்முதல் செய்து வழங்கி உள்ளது.’ என்றார். சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவனையில் நாளை(புதன்கிழமை) அம்மா உணவகம் திறக்கப்பட உள்ளது.

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘சென்னையில் உள்ள அம்மா உணவகங்களிலேயே ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் கட்டப்பட்டுள்ள அம்மா உணவகம் தான் மிக பெரியதாகும். 123 அடி நீளத்திலும், 29 அடி அகலத்திலும் கட்டப்பட்டுள்ள அம்மா உணவகத்தில் ஒரே நேரத்தில் ஆயிரம் பேர் வரை சாப்பிடலாம்.

நோயாளிகள் சக்கர நாற்கலிகளில் அமர்ந்து உணவு அருந்தும் வகையிலும், முதியோர்கள் சிரமம் இன்றி உணவு அருந்தும் வகையிலும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியை தொடர்ந்து, அடுத்தடுத்து மற்ற அரசு மருத்துவமனைகளில் அம்மா உணவகம் விரைவில் திறக்கப்படும்’ என்றார். சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் அம்மா உணவகத்தை முதல்-அமைச்சர் ஜெயலலிதா நாளை(புதன்கிழமை) காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கிறார்.

பார்சல் கிடையாது: 
  • ஒரு சப்பாத்தி 6 அங்குலம் அளவும், 30 கிராம் எடையும் கொண்டது.
  • சப்பாத்தியுடன் 40 மில்லி கிராம் பருப்பு கடைசல் வழங்கப்படும்.
  • மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை சப்பாத்திகள்(இருப்பு இருக்கும் வரை) கிடைக்கும்.
  • காலை மற்றும் மதிய உணவுகளை போன்றே சப்பாத்திகளுக்கும் பார்சல்கள் கிடையாது.
  • முதற்கட்டமாக ஒருநாளைக்கு ஒரு அம்மா உணவகத்துக்கு 2 ஆயிரம் சப்பாத்திகள் வீதம் 200 அம்மா உணவகத்துக்கு 4 லட்சம் சப்பாத்திகள் தயார் செய்து வழங்கப்படும்.
  • 25 கிலோ கோதுமை மாவு நவீன எந்திரம் மூலம் 15 நிமிடங்களில் பிசையப்படுகிறது.
  • ஒரு கிலோ கோதுமை மாவில் 40 சப்பாத்திகள் வரை தயார் செய்யப்படுகிறது.
 

அரசு பொது மருத்துவமனையில் 'அம்மா' உணவகம் நாளை திறப்பு

Print PDF

தினமலர்          19.11.2013

அரசு பொது மருத்துவமனையில் 'அம்மா' உணவகம் நாளை திறப்பு

சென்னை:சென்னை அரசு பொது மருத்துவமனையில், 6,000 சதுர அடியில் அமைந்துள்ள, 'அம்மா' உணவகம், நாளை திறக்கப்படுகிறது. மற்ற மருத்துவமனைகளில் பணிகள் முடியாததால், திறப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில், 200 வார்டுகளில், மலிவு விலை உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த உணவகங்களில், 3 ரூபாய்க்கு இரண்டு சப்பாத்தி தரும் திட்டம், நாளை துவக்கப்பட உள்ளது. ரூ.2 க்கு டீ இந்த நிலையில், சென்னை அரசு பொது மருத்துவமனையில், 6,000 சதுர அடியில் அமைக்கப்பட்டு உள்ள பிரமாண்டமான மலிவு விலை உணவகமும், நாளை திறக்கப்பட உள்ளது.

அதில், ஒரே நேரத்தில், 400 பேர் சாப்பிடலாம். மாற்றுத்திறனாளிகளுக்கும் பிரத்யேக வசதி செய்யப்பட்டு உள்ளது. இங்கு, 2 ரூபாய்க்கு டீ வழங்கவும், முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம், ராயப்பேட்டை அரசு மருத்துவமனை, திருவல்லிக்கேணி கஸ்துாரிபாய் மருத்துவமனை, எழும்பூர் மகப்பேறு மருத்துவமனை, குழந்தைகள் நல மருத்துவமனைகளில், உணவகப் பணிகள் நடந்து வருகின்றன. விரைவில் அவை திறக்கப்படும்' என்றனர்.

சோதனை ஓட்டம்  தேனாம்பேட்டை மண்டலத்தில் உள்ள மலிவு விலை உணவகத்தில், நேற்று, சப்பாத்தி தயாரிப்பு சோதனை ஓட்டம் நடந்தது. அதற்கான இயந்திரம் மூலம், ஒரு மணி நேரத்திற்கு, 3,000 சப்பாத்திகள் தயாரிக்கப்பட்டன. இவை, மண்டலத்தில் உள்ள, 18 மலிவு விலை உணவகங்களுக்கு வழங்கப்பட்டது.

 


Page 80 of 841