Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

மீன் விற்பனைக் கூடம் அமைக்க தொண்டி பேரூராட்சி மன்றத்தில் தீர்மானம்

Print PDF

தினமணி 31.08.2009

மீன் விற்பனைக் கூடம் அமைக்க தொண்டி பேரூராட்சி மன்றத்தில் தீர்மானம்

திருவாடானை, ஆக. 30: திருவாடானை தாலுகா தொண்டி பேரூராட்சி மன்றக் கூட்டத்தில், மீன் விற்பனைக் கூடம் அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இக்கூட்டம் மன்றத் தலைவர் பாலுச்சாமி தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் தியாகராஜன், செயல் அலுவலர் மார்கண்டன் முன்னிலை வகித்தனர்.

இதில், திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் ரூ. 2 லட்சத்து 17 ஆயிரத்திலும், திரவக் கழிவு மழை நீர் வடிகால் திட்டம் ரூ. 87 ஆயிரம் மதிப்பிலும் செயல்படுத்தப்பட உள்ளது.

மேலும், தமிழ் மாநில மீன் வளக் கூட்டுறவு இணையம் மூலம் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் தாங்கள் பிடித்த மீன்களைப் பதப்படுத்தி விற்பனை செய்யும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. சோழியக்குடியில் நான்கு மீன் விற்பனைக் கூடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், தொண்டியில் மீன் விற்பனைக் கூடம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்டத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

605 உள்ளாட்சி பதவிகளுக்கு அக்டோபர் மாதம் தேர்தல் நெல்லையில் இன்று தேர்தல் ஆணையர் சந்திரசேகரன் பேட்டி

Print PDF

மாலை மலர் 29.08.2009

605 உள்ளாட்சி பதவிகளுக்கு அக்டோபர் மாதம் தேர்தல் நெல்லையில் இன்று தேர்தல் ஆணையர் சந்திரசேகரன் பேட்டி

நெல்லை, ஆக. 29-

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில்இன்று உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மாநில தேர்தல் ஆணையர் சந்திரசேகரன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் ஜெயராமன், நெல்லை மண்டல நகராட்சிகளின் இணை இயக்குனர் மோகன், மாநகர துணை போலீஸ் கமிஷனர் அவினாஷ்குமார் மற்றும் முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டம் முடிந்ததும் தேர்தல் ஆணையர் சந்திரசேகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் கிராம பகுதிகளில் 508 ஊராட்சி பதவிகளும், நகர் புறங்களில் 97 கவுன்சிலர் பதவிகளுமாக மொத்தம் 605 உள்ளாட்சி பதவிகள் காலியாக உள்ளன. இப்பதவிகளுக்கு வருகிற அக்டோபர் மாதம் தேர்தல் நடத்தப்படும்.

நெல்லை மாவட்டத்தில் மானூர் யூனியன் கவுன்சிலர், தென்காசி நகராட்சி கவுன்சிலர், செந்தட்டியாபுரம் பஞ்சாயத்து தலைவர் பதவி மற்றும் 11 கிராமபுற வார்டுகள் ஆகிய 14 இடங்களுக்கு இடைத்தேர்தல் நடக்கவிருக்கிறது.

கிராம பகுதிகளில் வாக்கு சீட்டு அடிப்படையில் தேர்தல் நடத்தப்படும். நகர்புறங்களுக்கு எந்திரம் மூலம் தேர்தல் ஓட்டுப்பதிவு நடத்தப்படும்.

தமிழகத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சி பதவிகளுக்கு எந்திரம் மூலம் தேர்தல் நடத்த ரூ.200கோடி செலவாகும். இதை அரசிடம் கேட்டுள்ளோம். அரசு ரூ.200 கோடி ஒதுக்கினால் 2011 உள்ளாட்சி தேர்தலில் அனைத்து வாக்குபதிவும் எந்திரம் மூலம் நடத்தப்படும்.

தமிழகத்தில் கடந்த உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட 3 ஆயிரம் பேர் தங்கள் வரவு செலவு கணக்குகளை தாக்கல் செய்ய வில்லை. இதனால் 3 ஆயிரம் பேர் இந்த இடை தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது வாக்காளர் பட்டியலை சரி பார்த்து பெயர்களை சேர்க்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இண்டர்நெட்டில் புதிய தகவல்களை சேர்க்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தல்களில் தொகுதி மறு சீரமைப்பு செய்வதை அரசுதான் முடிவு செய்ய வேண்டும்.

2 அடுக்கு தேர்தல் முறை கொண்டு வருவது குறித்தும் அரசு தான் முடிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

 

சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டம் 60 தீர்மானங்கள் நிறைவேறின

Print PDF

தினமணி 29.08.2009

சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டம் 60 தீர்மானங்கள் நிறைவேறின
சென்னை, ஆக. 28: சென்னை மாநகராட்சி சாதாரண மன்றக் கூட்டத்தில் வெள்ளிக்கிழமை 60 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டம் முடிந்ததும் மேயர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியது:

தென் சென்னை, மத்திய சென்னை, வட சென்னை ஆகிய மூன்று மக்களவை உறுப்பினர்களுக்கு, அவரவர் தொகுதியில் தோராயமாக ரூ. 25 லட்சம் மதிப்பில் அலுவலகம் கட்டித்தர மன்றக் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

கிண்டி திரு.வி.க. தொழிற்பேட்டையில் டான்சி நிறுவனத்துக்குச் சொந்தமான 5 ஏக்கர் நிலம் காலியாக உள்ளது. அதை சென்னை மாநகராட்சி எடுத்துக் கொண்டு சமூகநலத் திட்டங்களுக்கு பயன்படுத்திக் கொள்ள ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

வேளச்சேரியில் உள்ள பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான ஏரியையும், சேத்துப்பட்டில் உள்ள மீன்வளத் துறைக்குச் சொந்தமான ஏரியையும் மாநகராட்சி எடுத்துக் கொள்ள ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. மழை நீர் மட்டுமே தேங்கும் வகையில் இந்த இரண்டு ஏரிகளையும் சுத்தப்படுத்தி சுற்றுலா மையமாக உருவாக்க திட்டமிட்டுள்ளோம்.

ரூ. 1.39 கோடியில் மீர்சாகிப் பேட்டை சுகாதார நிலையத்துக்கும், ரூ. 3.39 கோடியில் சைதாப்பேட்டை ஜீனிஸ் சாலை மகப்பேறு மருத்துவமனைக்கும் கூடுதல் கட்டடம் கட்டுவதற்கு மன்றத்தின் அனுமதி பெறப்பட்டுள்ளது.

கிண்டி தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் காலியாக உள்ள சிட்கோ நிலங்களை மக்கள் பயன்பாட்டுக்காக மாநகராட்சி எடுத்துக் கொள்ளவும், தாடண்டர் நகர் அரசு குடியிருப்பு மற்றும் கிண்டி சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள சாலைகள் மற்றும் தெருவிளக்குகள் பராமரிப்பை மாநகராட்சி எடுத்துக் கொள்ளவும் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

7 ஆயிரம் தங்க மோதிரங்கள் வாங்க முடிவு: சென்னை மாநகராட்சி மருத்துவமனைகளில் பிறந்து தமிழில் பெயர் சூட்டப்படும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசளிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக ரூ. 1.05 கோடியில் 7 ஆயிரம் தங்க மோதிரங்கள் வாங்க அனுமதி பெறப்பட்டுள்ளது.

ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்புத் திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்டுள்ள 39 திட்டங்களை விரைவாக நிறைவேற்ற 8 நிபுணர்களை நியமிக்க மன்றத்தின் ஒப்புதல் பெறும் தீர்மானங்கள் உள்பட 60 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன என்றார் மேயர் மா. சுப்பிரமணியன்.

Last Updated on Saturday, 29 August 2009 02:03
 


Page 809 of 841