Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

பெங்களூர் மாநகராட்சி வார்டு இடஒதுக்கீடு பட்டியல் புதிதாக தயாரிக்கப்படும்

Print PDF

தினமணி 25.08.2009

பெங்களூர் மாநகராட்சி வார்டு இடஒதுக்கீடு பட்டியல் புதிதாக தயாரிக்கப்படும்

பெங்களூர், ஆக. 24: பெங்களூர் மாநகராட்சி வார்டுகளின் இட ஒதுக்கீடு பட்டியல் புதிதாக தயாரிக்கப்பட்டு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று குடிநீர் மற்றும் செய்தித் துறை அமைச்சர் கட்டா சுப்பிரமணிய நாயுடு தெரிவித்தார்.

பெங்களூர் சதாசிவநகர் பகுதியில் உள்ள சாங்கே ஏரியில் பொதுமக்கள் வசதிக்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியை திங்கள்கிழமை துவக்கிவைத்தார் கட்டா சுப்பிரமணிய நாயுடு.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியது:

பெங்களூர் பெருநகர மாநகராட்சி வார்டுகள் எண்ணிக்கை 198 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி மன்றத்துக்குத் தேர்தல் நடத்த வசதியாக இந்த 198 வார்டுகளுக்கும் இட ஒதுக்கீடு செய்து ஆகஸ்ட் 22-ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியல் அவசரமாக தயாரித்து அதிகாரிகளால் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் பல குளறுபடிகள் உள்ளன. எனவே, ஆகஸ்ட் 22-ம் தேதி வெளியிடப்பட்ட இடஒதுக்கீடு பட்டியல் வாபஸ் பெறப்பட்டு புதிய பட்டியல் விரைவில் தயாரிக்கப்படும்.

இந்தப்பட்டியல் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, உயர்நீதிமன்றம் விதித்துள்ள காலக்கெடுவுக்குள் மாநகராட்சி மன்றத்துக்குத் தேர்தல் நடத்தப்படும்.

ஆட்சேபமில்லை: சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிட்ட வீட்டு வசதி துறை அமைச்சர் வி.சோமண்ணா தோல்வி அடைந்துவிட்டார். இது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது.

இதனால் அவர் அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என சிலர் வலியுறுத்துகிறார்கள்.

அமைச்சர் பதவியில் சோமண்ணா நீடிக்க வேண்டுமா, வேண்டாமா என்பதை பாஜக கட்சித் தலைவர்கள் கூடி முடிவு செய்வார்கள்.

என்னைப் பொறுத்தவரை அவர் அமைச்சர் பதவியில் நீடிக்க ஆட்சேபமில்லை.

மழை நீர் சேமிப்பு கட்டாயம்: மழை நீர் சேமிப்பு திட்டம் புதிய கட்டடங்களில் கட்டாயமாக அமல்படுத்தப்பட வேண்டும்.

வருகிற செப்டம்பர் மாதம் முதல் 3 மாதங்கள் இத்திட்டத்தை நகரில் அமல்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி, முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் இல்லங்களில் மழை நீர் சேகரிப்புத் திட்டம் துவக்கப்படவுள்ளது என்றார் அவர்.

 

கொடைக்கானல் பகுதியில் ரூ. 3 கோடியில் வளர்ச்சிப் பணி

Print PDF

தினமணி 25.08.2009

கொடைக்கானல் பகுதியில் ரூ. 3 கோடியில் வளர்ச்சிப் பணி

கொடைக்கானல், ஆக. 24: கொடைக்கானலில் நடைபெற்றுவரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளைப் பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் ம. வள்ளலார்.

மேலும் ஏரிச்சாலை, உழவர் சந்தை ஆகிய இடங்களைப் பார்வையிட்டு முழுமையான முறையில் பணிகள் நடைபெற அதிகாரிகள் உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இந் நிகழ்ச்சியில், வருவாய் கோட்டாட்சியர் ஞானசேகரன், வட்டாட்சியர் உதயக்குமார், நகரமைப்பு அலுவலர் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து ஆட்சியர் கூறியதாவது:

சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காகவும், அதிகமாக வருவதற்காகவும் கொடைக்கானலில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏரியைச் சுற்றியுள்ள கழிவுகளை அகற்றும் பணிக்காக ரூ. 9 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணி நடைபெற்று வருகிறது.

மேலும் ஏரியின் அழகை ரசிப்பதற்காக ரூ. 5 லட்சம் செலவில் அழகு இருக்கைகள் அமைக்கப்பட உள்ளன.

ஆபத்து ஏற்படுத்தும் வகையில் உள்ள பழமையான படகு குழாம் கட்டடம் இடிக்கப்படும். சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் வகையிலும், அரசுக்கு வருவாய் இழப்பீடு செய்யும் வகையில் அனுமதியின்றி நடத்தப்படும் காட்டேஜ்கள், லாட்ஜ்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

சுற்றுலாப் பயணிகளுக்கு சேவை நோக்கத்துடன் பணியாற்றுவதற்காக சுற்றுலா வழிகாட்டிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு, சீருடை அடையாள அட்டை வழங்கப்படும்.

கொடைக்கானல் ஒன்றியப் பகுதிகளில் பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதற்காக ரூ. 3 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சுற்றுச் சூழல் பாதிக்கும் வகையில் பாறைகளை வெடிவைத்து உடைப்பவர்கள் மீதும், பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்தும் ஹோட்டல் நிறுவனங்கள் மீதும், அனுமதியின்றி டாஸ்மாக் பார் நடத்துபவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

 

முதல்வர் காப்பீட்டுத் திட்ட அடையாள அட்டை ஆக. 28 மேலூரில் வழங்கல்

Print PDF

தினமணி 25.08.2009

முதல்வர் காப்பீட்டுத் திட்ட அடையாள அட்டை ஆக. 28 மேலூரில் வழங்கல்

மதுரை, ஆக. 24: உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான தமிழக முதல்வர் காப்பீட்டுத் திட்ட அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி ஆக. 28-ம் தேதி மேலூரில் நடைபெறவுள்ளது என, மாவட்ட ஆட்சியர் ந.மதிவாணன் தெரிவித்துள்ளார்.

இத்திட்டம் தொடர்பாக ஆட்சியர் தலைமையில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி மன்றத் தலைவர்கள் பங்கேற்ற கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் ஆட்சியர் பேசுகையில், "இத்திட்டம் குறித்து கிராமப்புறங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். மேலும், இத் திட்டத்தின்கீழ் ஸ்டார் ஹெல்த் காப்பீட்டு நிறுவனம் பயனாளிகளை புகைப்படம் எடுத்து அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் பணி மேலூர் வட்டத்தில் ஆக.28 முதல் செப். 3-ம் தேதி வரை நடைபெறுகிறது. அனைத்துப் பகுதிகளிலும் அடையாள அட்டைகள் வழங்கும் பணி விரைவில் விரிவுபடுத்தப்படும்' என்றார்.

கூட்டத்தில், மாநகராட்சி மேயர் கோ.தேன்மொழி, மாவட்ட வருவாய் அலுவலர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், துணை மேயர் மன்னன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் வே.பிச்சை, துணை இயக்குநர் (மருத்துவப் பணிகள்) பழனிச்சாமி, அரசு ராஜாஜி மருத்துவமனை டீன் எஸ்.எம். சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 


Page 815 of 841