Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

கரூர் நகராட்சி புதிய கட்டிடத்தில் இன்று "முதல்' கூட்டம் நடத்த முடிவு

Print PDF

தினமலர்        30.10.2013

கரூர் நகராட்சி புதிய கட்டிடத்தில் இன்று "முதல்' கூட்டம் நடத்த முடிவு

கரூர்: கடந்த தி.மு.க., ஆட்சியில், ஒரு கோடியே, 45 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்ட, புதிய கரூர் நகராட்சி கட்டிடத்தில், இன்று காலை நகராட்சி கூட்டம் நடக்கும், என, எதிர் பார்க்கப்படுகிறது. புதிய கட்டிடத்தில் முதல் கூட்டம் என்பதால், இன்றைய நகராட்சி கூட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம், 82 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெத்தாச்சி கட்டிடத்தில் நடந்து வந்தது. கடந்த தி.மு.க., ஆட்சியில். பழைய நகராட்சி கட்டிட வளாகத்தில், ஒரு கோடியே, 45 லட்ச ரூபாய் செலவில், கரூர் நகராட்சிக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டது. அதை அப்போதைய துணை முதல்வர் ஸ்டாலின், கடந்த, 2010ம் ஆண்டு, நவம்பர் மாதம் திறந்து வைத்தார்.

கடந்த, 2011ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த சட்டசபை தேர்தலின் போது, தேர்தல் கமிஷன் உத்தரவுபடி புதிய நகராட்சி கட்டிடம் பூட்டப்பட்டது. சட்டசபை தேர்தலில் தி.மு.க., தோற்றது. அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்த நிலையில், புதிய நகராட்சி கட்டிடத்தை திறக்கக்கோரி, தி.மு.க.,வைச் சேர்ந்த அப்போதைய நகராட்சி தலைவர் சிவகாம சுந்தரி உள்ளிட்ட கவுன்சிலர்கள், பல்வேறு போராட்டங்களை நடத்தினர். ஆனால் புதிய கட்டிடம் திறக்கப்படாததால், தலைவர் சிவகாமசுந்தரி உள்பட தி.மு.க., கவுன்சிலர்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.

தொடர்ந்து கடந்த, 2011 ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த உள்ளாட்சி தேர்தலில், அ.தி.மு.க.,வைச் சேர்ந்த செல்வராஜ் நகராட்சி தலைவராக முதன் முறையாக வெற்றி பெற்றார். அ.தி.மு.க., ஆளும் கட்சியாக இருப்பதால், புதிய கட்டிடத்தில் நகராட்சி கூட்டம் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடந்த, இரண்டாண்டுகளாக கரூர் நகராட்சி கூட்டம், பழைய பெத்தாச்சி கட்டிடத்தில் தான் நடந்து வந்தது.

இதனால் பூட்டப்பட்டுள்ள புதிய கட்டிடம் சிதிலம் அடையும் நிலையில் உள்ளதால், அதில் நகராட்சி கூட்டம் நடத்த வேண்டும் என, நகராட்சி கூட்டங்களில் கவுன்சிலர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.

இதையடுத்து புதிய நகராட்சி கட்டிடத்தை பார்வையிட்ட நகராட்சி தலைவர் செல்வராஜ், ""புதிய கட்டிடத்தில் சில இடங்களில் உதய சூரியன் சின்னம் மாதிரி டிசைன் செய்யப்பட்டுள்ளது. தரையில் போடப்பட்ட டைல்ஸ்கள் உடைந்த நிலையில் உள்ளது. மேல் தளங்களில் நீர்க்கசிவு உள்ளது. அவற்றை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, பணிகள் முடிந்த பிறகு, முதல்வர் ஜெயலலிதா ஆலோசனைப்படி புதிய கட்டிடம் திறக்கப்படும்,'' என்றார்.

முதல் கட்டமாக புதிய கட்டிடத்துக்கு பர்னிச்சர் பொருட்கள் மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக, 25 லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டு, புதிய கட்டிட சீரமைப்பு பணிகள் நடந்து முடிந்தது. இந்நிலையில் கடந்த வாரம் பழைய நகராட்சி கட்டிடத்தில் இருந்து, சில அலுவலகங்கள் புதிய கட்டிடத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது. புதிய கூட்ட அரங்கில், 48 கவுன்சிலர்கள், அதிகாரிகள் மற்றும் நிருபர்கள் அமர சேர்கள் போடப்பட்டது. மேலும், ஒவ்வொரு கவுன்சிலர்களுக்கும் தனித்தனியாக மைக் வசதி செய்யப்பட்டது.

ஆகையால், கரூர் நகராட்சி தலைவராக அ.தி.மு.க.,வைச் சேர்ந்த செல்வராஜ் பொறுப்பேற்று, கடந்த, 25ம் தேதியுடன் இரண்டாண்டுகள் முடிந்த நிலையில், இன்று புதிய கட்டிடத்தில் நகராட்சி கூட்டம் நடக்கும் என தெரிகிறது. இந்த சாதாரண கூட்டத்தில் மட்டும், 73 தீர்மானங்கள், நிறைவேற்றுவதற்காக கூட்டத்தில் இடம் பெறுகிறது.

"ஸ்பெஷல்' தீர்மானங்கள்

கரூர் நகராட்சி கூட்டத்தில், வழக்கமாக சாதாரண கூட்டத்துக்கு பிறகு, அவசர கூட்டம் பெரும்பாலும் தொடர்ந்து நடக்கும். அதில் முக்கிய தீர்மானங்கள் திடீரென படிக்கபட்டு நிறைவேற்றப்படும். இன்று நடைபெறவுள்ள, மூன்றாமாண்டு துவக்க விழா நகராட்சி கூட்டத்தில், அவசர கூட்டம் என்ற பெயரில் "ஸ்பெஷல் தீர்மானங்கள்' நிறைவேற்றப்படும், என எதிர்பார்க்கப்படுகிறது.

 

கருங்கல்பாளையம் - பள்ளிபாளையம் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே புதிய பாலம் ரூ.25 கோடியில் கட்டும் பணி துவக்கம்

Print PDF

தினகரன்           29.10.2013

கருங்கல்பாளையம் - பள்ளிபாளையம் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே புதிய பாலம் ரூ.25 கோடியில் கட்டும் பணி துவக்கம்

ஈரோடு, : ஈரோடு கருங்கல்பாளையம் - பள்ளிபாளையம் இடையே சாலை போக்குவரத்து நெரிசலை தவிர்க்க காவிரி ஆற்றின் குறுக்கே ரூ.25 கோடியில் புதிய பாலம் கட்டும் பணி நேற்று துவங்கியது.

ஈரோடு கருங்கல்பாளையத்தையும், நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தையும் இணைக்கும் வகையில் கடந்த 1961ல் காவிரி ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்பட்டது. நாமக்கல், திருச்சி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, பெங்களூர், ராசிபுரம், திருச்செங்கோடு, கள்ளக்குறிச்சி, ஆத்தூர், விழுப்புரம், சென்னை, வேலூர் போன்ற பகுதிகளுக்கு ஈரோட்டிலிருந்து செல்லும் மக்கள் பெரும்பாலும் இந்த பாலத்தின் வழியாகவே செல்வதால் எப்போதும் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும். எனவே காவிரி ஆற்றின் குறுக்கே மேலும் ஒரு பாலம் புதிதாக கட்ட வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

இக்கோரிக்கையை ஏற்று நபார்டு வங்கி உதவியுடன் ரூ.25 கோடி செலவில் புதிதாக பாலம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் நடந்தது. விழாவிற்கு நாமக்கல் மாவட்ட கலெக்டர் தட்சிணாமூர்த்தி தலைமை வகித்தார். அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்று தொழில்துறை அமைச்சர் தங்கமணி, பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

பாலம் கட்டும் பணியை நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்து பேசியதாவது: போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக ஈரோடு- பள்ளிபாளையம் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே நபார்டு வங்கி உதவியுடன் ரூ.25.14 கோடி செலவில் புதிதாக பாலம் கட்டுவதன் மூலம் இம்மாவட்ட மக்களும், அண்டை மாவட்ட மக்களும் பெரிதும் பயனடைவார்கள்.

அதிமுக., அரசு பொறுப்பேற்ற பிறகு தொடர்ந்து சாலை விரிவாக்கப்பணிகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தொடர்ந்து பணிகள் நடந்து வருகிறது. ஈரோட்டிலிருந்து பள்ளிபாளையம், திருச்செங்கோடு வழியாக ராசிபுரம் வரை, ஈரோட்டிலிருந்து காங்கயம் வழியாக தாராபுரம் வரை, பவானியில் இருந்து தொப்பூர் வரை, ப.வேலூரில் இருந்து தாரமங்கலம் வழியாக ஓமலூர் வரையிலும் நான்கு வழிச்சாலையாக மாற்றப்படும்.

இதேபோல ஈரோடு அரசு மருத்துவமனை அருகே ரூ.50 கோடி செலவில் மேம்பாலம் கட்டவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஈரோடு திண்டல் வரையிலும் புறவழிச்சாலை அமைக்கும் பணியும், ஈரோடு- சித்தோடு, ஈரோடு- பவானி ஆகிய பகுதிகளை இணைத்து புறவழிச்சாலை அமைக்கும் பணியும் விரைவில் துவங்கப்பட உள்ளது.

மேலும் நாமக்கல் மாவட்டம் எஸ்பிபீ., காலனிக்கு செல்லும் வழியில் உள்ள ரயில்வே பாலத்தின் கீழ் அடிக்கடி மழைநீர் தேங்குவதால் அவ்வழியே போக்குவரத்து பாதிக்கப்படுவதை தடுப்பதற்காக ரூ.40 கோடி செலவில் பாலம் அமைக்கும் பணியும், நாமக்கல் மாவட்டம் மோகனூர்- கரூர் மாவட்டம் வாங்கல் பகுதியை இணைக்க காவிரி ஆற்றின் குறுக்கே விரைவில் பாலம் கட்டும் பணியும் விரைவில் துவங்கப்பட உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் சாலைகள் சீரமைப்பு பணிக்காக ரூ.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

விழாவில் ஈரோடு மாநகராட்சி மேயர் மல்லிகாபரமசிவம், துணைமேயர் கே.சி.பழனிசாமி, மண்டல தலைவர் மனோகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

பவானி நகராட்சி புதிய அலுவலக கட்டிடம் கட்ட பூமிபூஜை

Print PDF

தினகரன்           29.10.2013

பவானி நகராட்சி புதிய அலுவலக கட்டிடம் கட்ட பூமிபூஜை

பவானி, : பவானி நகராட்சி அலுவலக வளாகத்தில் ரூ.75 லட்சத்தில் புதிய அலுவலக கட்டிடம், நகர்மன்ற கூட்டரங்கம், தகவல் மையம் மற்றும் சுகாதார ஆய்வாளர் அலுவலக கட்டிடங்கள் கட்டும் பணிக்கு நேற்று பூமி பூஜை நடைபெற்றது.

ஆணையாளர் ராஜேஸ்வரி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். கட்டுமானப் பணிகளை நகராட்சித் தலைவர் கருப்பணன் தலைமை தாங்கி தொடக்கி வைத்தார்.

பகுதி இரண்டு திட்டத்தின் கீழ் புதிய அலுவலக கட்டிடங்கள் கட்டப்படுகிறது. இதற்காக, ஏற்கெனவே இருந்த பழைய கட்டடம் ரூ.1.18 லட்சத்தில் ஏலம் விடப்பட்டு இடித்து அப்புறப்படுத்தப்பட்டது. தற்போது 7253 சதுர அடியில் விசாலமாக கட்டப்படும் இந்த புதிய கட்டடப் பணிகள் நிறைவு பெற்றால், குடிநீர் தொட்டிக்கு கீழே செயல்பட்டு வரும் அலுவலங்கள் அனைத்தும் மாறுதல் செய்யப்படும்.

விழாவில், நகராட்சி கவுன்சிலர்கள் முத்துசாமி, ராஜா, முருகேசன், ஆறுமுகம், கவிதா சந்திரன், ஆறுமுகம், சத்தியமூர்த்தி, குருமூர்த்தி, கு.செல்வராஜ், ராஜசேகர், சரவணக்குமார், பட்டம்மாள் கோபால், பத்மாவதி, சீனிவாசன், ஒப்பந்ததாரர் செம்பாக்கவுண்டர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 


Page 90 of 841