Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

நகர்மன்றத் தீர்மானத்தை மீறி பார்க்கிங் கட்டணம் வசூல்

Print PDF

தினமணி          08.10.2013

நகர்மன்றத் தீர்மானத்தை மீறி பார்க்கிங் கட்டணம் வசூல்

உதகை நகராட்சிப் பகுதியில் பொது இடங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என்று நகர்மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தாலும், அதை மீறி நடக்கும் வசூலால் தினந்தோறும் சர்ச்சை ஏற்பட்டு வருகிறது.

உதகை நகராட்சிப் பகுதியில் அனைத்துச் சாலைகளிலுமே வாகனங்களை நிறுத்திவிட்டுச் சென்று விடுவதாலும், சிலர் நாள் முழுக்க நிறுத்திவைத்துக் கொள்வதாலும், போக்குவரத்துக்கு தடை ஏற்படுவதுடன், சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களைக் கூட நிறுத்த முடியாத சூழல் ஏற்பட்டது. எனவே, பார்க்கிங் கட்டணம் வசூலிக்கும் முறை கடைபிடிக்கப்பட்டு வந்தது.

இதன்படி உதகை நகர்மன்றத்தின் ஒப்புதலுடன் வென்லாக் சாலை, கமர்சியல் சாலை, லோயர் பஜார், கோத்தகிரி சாலை, சேரிங் கிராஸ், பூங்கா சாலை உள்ளிட்ட 7 முக்கிய சாலைப்பகுதிகளில் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கும் உரிமை குத்தகை அடிப்படையில் ரூ. 6 லட்சத்திற்கு ஓராண்டிற்கு தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டது.

ஆனால், வாகனத்தை ஒரு சாலையில் நிறுத்திவிட்டு மற்றொரு சாலைப்பகுதிக்கு வந்தால் அங்கும் பார்க்கிங் கட்டணம் கட்ட வேண்டும் என்ற கட்டாய வசூல் நடத்தப்பட்டது. அதைத் தவிர இரு சக்கர வாகனங்களில் செல்வோர் சாலையோரத் திலுள்ள கடைக்குச் செல்வதற்காக வாகனத்தை நிறுத்தினால் கூட பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து உதகை நகர்மன்றக் கூட்டத்தில் "5 ரூபாய்க்கு பூ வாங்குவதற்காக 10 ரூபாய் பார்க்கிங் கட்டணம் கொடுக்கும் நிலை உதகையில் மட்டுமே உள்ளதாக' நகர்மன்ற பெண் உறுப்பினர்களே குற்றம் சாட்டினர்.

இதைத் தொடர்ந்தே உதகை நகரப்பகுதிகளில் அக்டோபர் 1-ஆம் தேதி முதல் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கும் முறை ரத்து செய்யப்படுவதாக நகர்மன்றத் தலைவர் சத்தியபாமா அறிவித்தார்.

ஆனால், அந்த அறிவிப்பு நகர்மன்றக் கூட்டத்துடனேயே முடிவுக்கு வந்துவிட்டது. பார்க்கிங் கட்டணம் வசூலிப்பதற்கு குத்தகை எடுத்தவர்கள் தொடர்ந்து கட்டணம் வசூலித்து வருகின்றனர்.

இதுபற்றிக் கேட்டால் கட்டணம் வசூலிப்பது தொடர்பான நகர்மன்ற உத்தரவுக்கு தாங்கள் நீதிமன்றத்தில் தடையாணை பெற்றுள்ளதாகக் கூறுகின்றனர். ஆனால், அத்தகைய தடையாணை ஏதும் பெறப்படவில்லை என்று நகர்மன்ற உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தக் குழப்பம் சுற்றுலாப் பயணிகளுக்கு தெரியாது என்பதால், அவர்கள் வழக்கம் போல பார்க்கிங் கட்டணம் செலுத்தி விடுகின்றனர். ஆனால், உள்ளூர் மக்கள் பார்க்கிங் கட்டணத்தை கட்ட மறுப்பதால் அனைத்துச் சாலைகளிலுமே சர்ச்சைகள் ஏற்படுகின்றன.

எனவே, இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், உதகை நகர்மன்றம் சார்பில் உடனடியாக உறுதியான அறிவிப்பு வெளியிடப்பட்டு, பார்க்கிங் கட்டணம் வசூலிப்பது நிறுத்தப்பட வேண்டும் என்பதே உதகை நகர மக்களின் கோரிக்கையாகும்.

 

திருவள்ளூர் நகராட்சியில் ஆதார் அட்டை வழங்கும் முகாம்

Print PDF

தினமணி           08.10.2013

திருவள்ளூர் நகராட்சியில் ஆதார் அட்டை வழங்கும் முகாம்

திருவள்ளூர் நகராட்சியில் அக்டோபர் 3-ம் தேதி முதல் ஆதார் அட்டை வழங்கும் முகாம் வார்டு வாரியாக நடைபெற்று வருகிறது.

இம்முகாமில் பொதுமக்களின் கைரேகைப் பதிவு, விழி ரேகைப் பதிவு மற்றும் புகைப்படம் ஆகியவை எடுக்கப்பட்டு கணினியில் பதிவு செய்யப்படுகிறது.

பின்னர் அவர்களின் சுயவிவரங்கள் ஏற்கெனவே கணினியில் பதிவாகியுள்ளதுடன் ஒப்பிடப்பட்டு சரியாக இருந்தால் அவர்களுக்கு ஆதார் அட்டை வழங்கப்படுகிறது.  ஆதார் அட்டைக்காக 2010-ம் மக்கள் தொகை கணக்கெடுப்பு செய்த பணியாளர்கள் தயார் செய்து கொடுத்த பட்டியலை வைத்து பொதுமக்களின் சுயவிவரங்கள் தற்போது சரிபார்க்கப்பட்டு வருகிறது. பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், முகாம்களில் பங்கேற்று விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தர வேண்டும். அந்த விண்ணப்பங்கள், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டு அங்கு கணினியில் பதிவு செய்தப் பின்னர், விடுபட்டவர்களுக்கு ஆதார் அட்டை வழங்கும் முகாம் குறித்த தேதி அறிவிக்கப்படும்.

இந்நிலையில் திருவள்ளூர் நகராட்சியில் திங்கள்கிழமை 16, 17, 27 ஆகிய வார்டுகளுக்கு ஆதார் அட்டை வழங்கும் முகாம் நடைபெற்றது.

முகாமுக்கு சென்ற 100-க்கும் மேற்பட்டவர்களின் பெயர்கள், பட்டியலில் இல்லை. குறைந்தபட்சம் 20 சதவீதம் முதல் 30 சதவீதம் பேர் வரையிலும் விடுபட்டுள்ளதாக அப்பகுதி கவுன்சிலர்கள் கூறினர்.

இதனால் அதிருப்தியுடன் பலர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்துவிட்டு வந்தனர்.

இதுபோன்ற நிலைக்கு காரணம் மக்கள் தொகை கணக்கெடுப்பு செய்த பணியாளர்களின் அஜாக்கிரதைதான் எனவும், விரைவில் விடுபட்டவர்களுக்கு விரைவில் ஆதார் அட்டை வழங்க வேண்டும் என்றும் நகர மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

"மூலிகை உணவகம்' தயாராகிறது உணவே மருந்து : மும்முர பணியில் மாநகராட்சி

Print PDF

தினமலர்             08.10.2013

"மூலிகை உணவகம்' தயாராகிறது உணவே மருந்து : மும்முர பணியில் மாநகராட்சி

கோவை : கோவை மாநகராட்சியில் மூலிகை உணவகம் அமைக்க, மகளிர் குழுவுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது; கட்டடம் புதுப்பிக்கும் பணிகள் நிறைவடைந்ததும், உணவகம் துவங்கப்படுகிறது. கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மூலிகை உணவகம் அமைப்பதற்கு, நகர் நல அலுவலர் அருணா தலைமையில் மருத்துவர்கள் குழு, சென்னை மாநகராட்சியிலுள்ள மூலிகை உணவகத்தை பார்வையிட்டனர்.

கோவையில் மூலிகை தாவரங்கள் அதிகளவில் கிடைப்பதால், இங்கும் மூலிகை உணவகம் அமைக்க திட்டமிடப்பட்டது. கோவையில் கிடைக்கும் தாவரங்களின் அடிப்படையாகக் கொண்டு பல்வேறு வகையான உணவு வகைகள் தயாரிக்க மகளிர் குழுவுக்கு பயிற்சி கொடுக்க திட்டமிடப்பட்டது.மூலிகை உணவு வகைகள் தயாரிப்பதில் அனுபவம் மிக்க மூன்று மகளிர் குழுவினர் தேர்வு செய்யப்பட்டனர். அதில், ஒரு குழுவுக்கு அவினாசி லிங்கம் பல்கலைக்கழகத்தில் சிறப்பு பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி பிரதான அலுவலகத்தின் பின்பகுதியில், வாகனங்கள் நிறுத்தும் இடத்திலுள்ள பழைய கட்டடம், மூலிகை உணவகத்திற்காக, புதுப்பிக்கப்பட்டு வருகிறது. பணிகள் நிறைவடைந்ததும், மூலிகை உணவகம் துவங்கப்படும், என, தெரிகிறது.மூலிகை உணவகத்தில், காலை நேரத்தில், கருவேப்பிலை இட்லி, ஆவாரம்பூ இட்லி, துளசி இட்லி, தினை மற்றும் சாமை இட்லி வகைகள், முருங்கைக்கீரை, நவதானியம் மற்றும் முசுமுசுக்கை வகை அடைகளும், குழிப் பணியாரம், கருப்பட்டி பணியாரம் போன்றவையும் சமைக்கப்படுகிறது.

உளுந்து களி, சுக்கு களி, தினை மற்றும் எள் உருண்டை, இயற்கை லட்டு, சைவ ஆம்லெட் வகைகள், மூலிகை டீ, மூலிகை சூப் வகைகளும், மூலிகை பழரசங்களும் சமைக்கப்படுகிறது.
மதிய நேரத்தில் புழுங்கல் அரிசி சாப்பாடு, ஆவாரம்பூ, முருங்கைக்கீரை, முடக்கற்றான் கீரை சாம்பார் வகைகள்; கொள்ளு, வேப்பம்பூ மற்றும் மணத்தக்காளி ரச வகைகள்; சுண்டை வற்றல், பூண்டு காரக்குழம்பு வகைகள்; இஞ்சி மற்றும் கருவேப்பிலை மோரும்; பிரண்டை, கொள்ளு, தூதுவளை துவையல் வகைகள் தயாரிக்க பயிற்சி பெற்றுள்ளனர்.

மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "மூலிகை உணவு வகைகள் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் என்பதால், கோவையில் அமைக்கப்படுகிறது. இதற்கு, ஆக., மாதம் நடந்த கவுன்சில் கூட்டத்தில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உணவு வகைகளுக்கு விலை நிர்ணயம் செய்யப்படவில்லை. உணவகத்திற்கு தேவையான சமையல் பாத்திரங்கள் மாநகராட்சி மூலம் வாங்கி கொடுக்கப்படும். உணவு வகைகள் தயாரிப்பதற்கான தானியங்கள், காய்கறிகள் மகளிர் குழுவினர் கொள்முதல் செய்து, உணவு வகைகளை வியாபாரம் செய்து கொள்ள வேண்டும். கட்டுமான பணிகள் 20 நாட்களில் முடிந்ததும், உணவு வகைகளுக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டு, உணவகம் திறக்கப்படும்' என்றனர்.

தினமும் 500 பேருக்கு : ""கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில், அலுவலர்கள், பணியாளர்கள் 300 பேர் பணியாற்றுகின்றனர். கவுன்சிலர்கள், மண்டல பணியாளர்கள், பொதுமக்கள் என, தினமும் 500 பேர் அலுவலகத்திற்கு பணி நிமித்தகமாக வந்து செல்கின்றனர். பிரதான அலுவலகத்தில் மூலிகை உணவகம் அமைத்தால், சர்க்கரை நோயாளிகள், ரத்த அழுத்தம், ரத்தக் கொதிப்பு போன்ற நோயாளிகள் பயனடைவர். அலுவலகத்துக்கு வருவோருக்கும் ஆரோக்கியமான உணவு வகைகள் கிடைக்கும் என்பதால், இத்திட்டத்தை மாநகராட்சி செயல்படுத்துகிறது,'' என, துணைக் கமிஷனர் சிவராசு தெரிவித்தார்.

 


Page 97 of 841