Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

பூங்காவை விரிவுபடுத்த திட்டம் கோவை வ.உ.சி. பூங்காவுக்கு சிங்கம், புலி, கரடி போன்ற விலங்குகள் கொண்டு வரப்படுகின்றன

Print PDF

தினத்தந்தி            07.10.2013

பூங்காவை விரிவுபடுத்த திட்டம் கோவை வ.உ.சி. பூங்காவுக்கு சிங்கம், புலி, கரடி போன்ற விலங்குகள் கொண்டு வரப்படுகின்றன

கோவை வ.உ.சி. உயிரியல் பூங்காவை விரிவுபடுத்தி சிங்கம், புலி, கரடி போன்ற விலங்குகளை பொது மக்கள் பார்வைக்கு கொண்டுவர திட்டமிட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

வ.உ.சி உயிரியல் பூங்கா

கோவை மாநகராட்சி வ.உ.சி உயிரியல் பூங்காவில் குரங்கு வகைகள், பறவை வகைகள் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. தற்போது இங்கு குரங்குகள், மான்கள், வெளிநாட்டு பறவைகள், ஒட்டகம், நரி, முதலைகள், பாம்புகள், கொடிய விஷம் கொண்ட கண்ணாடி விரியன் பாம்புகள் உள்பட 800–க்கும் மேற்பட்ட உயிரினங்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது.

கோவை மாநகர பகுதியில் உள்ளவர்களுக்கு பொழுதுபோக்கு இடம் உயிரியல் பூங்கா மட்டும் உள்ளதால் இங்கு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அதுதவிர கோவைக்கு வரும் வெளிநாட்டு பயணிகளும் இந்த பூங்காவுக்கு வந்து செல்கிறார்கள்.

சிறிய மிருகங்கள்

சுமார் 4½ ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த பூங்கா கடந்த 1965–ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. கடந்த 2003–ம் ஆண்டு வரை இங்கு சிங்கம், புலி, கரடி வகைகள் இருந்தது. பெரிய மிருகங்களை வைத்து பராமரிப்பு செய்ய குறைந்தது 25 ஏக்கர் நிலமாவது தேவை என்பதால், அந்த மிருகங்கள் அனைத்தும் இடமாற்றம் செய்யப்பட்டன. தற்போது சிறிய மிருகங்கள் மட்டும் பராமரிக்கப்பட்டு வருகிறது.

பூங்கா மிகவும் குறுகலாக இருப்பதாலும், அங்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும், வேறு இடத்துக்கு மாற்றலாமா என்று ஆலோசனை செய்யப்பட்டது. அதற்காக எட்டிமடை அருகே ஆய்வும் செய்யப்பட்டது. அந்த இடம் தூரமாக இருந்ததால், அனைத்து தரப்பு மக்களும் அங்கு செல்வார்களா என்ற சந்தேகம் எழுந்ததால், பூங்காவை இடம் மாற்றும் பணியை அதிகாரிகள் நிறுத்தி வைத்தனர்.

பூங்காவை விரிவுபடுத்தும் திட்டம் எதாவது உள்ளதா என்று மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:–

பெரிய விலங்குகள்

தற்போது பூங்கா 4½ ஏக்கரில் உள்ளது. மேற்கொண்டு 25 ஏக்கர் நிலம் பூங்காவுக்கு நிலம் தேர்வு செய்து அதற்கான நிலத்தை பெற்ற பின்னர் அங்கு பெரிய விலங்குகளான சிங்கம், புலி, கரடி போன்ற விலங்குகளை பராமரிக்க திட்டம் தீட்டப்பட்டு உள்ளது. இதற்கு அனுமதி கேட்டு தேசிய பூங்கா இயக்குனரக அதிகாரிகளுக்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளது. அவர்களும் விரைவில் வந்து பார்ப்பதாக பதில் அனுப்பி உள்ளனர்.

எனவே பூங்காவின் அருகே உள்ள மத்திய சிறைக்கு சொந்தமான இடத்தில் இருந்து பூங்காவுக்கு தேவையான நிலத்தை கொடுக்க வேண்டும் என்று அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அதற்கான பதில் கிடைத்ததும், விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

 

மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்

Print PDF

தினமணி           04.10.2013

மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்

ஆம்பூர் நகராட்சி மற்றும் மஜ்ஹருல் உலூம் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் துண்டு பிரசுரம் விநியோகிக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

 ஆம்பூர் நகராட்சி பணியாளர்கள் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட தொண்டர்கள் கொண்ட குழுவினர் அந்தந்த பகுதியில் உள்ள வீடுகளுக்கு நேரடியாகச் சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி, மழைநீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு உருவாக்க வலியுறுத்தும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது.

 அதனடிப்படையில் ஆம்பூர் மஜ்ஹருல் உலூம் மேல்நிலைப் பள்ளியிலிருந்து மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை ஆம்பூர் நகர்மன்றத் தலைவர் சங்கீதா பாலசுப்பிரமணி தொடங்கி வைத்தார். ஆணையர் (பொறுப்பு) எல்.குமார், ஷபீக் ஷமீல் சமூக சேவை சங்கத் தலைவர் பிர்தோஸ் கே.அஹமத், பள்ளித் தலைமை ஆசிரியர் ஏ.லாயக் அலிகான், நாட்டு நலப்பணித் திட்ட மாவட்டத் தொடர்பு அலுவலர் எல்.சீனிவாசன், துப்புரவு அலுவலர் பாஸ்கர், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஆசிப் இக்பால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் மற்றும் நகராட்சிப் பணியாளர்கள் தொடர்ந்து 4 நாள்களுக்கு 8,9 மற்றும் 28 ஆகிய வார்டுகளில் உள்ள வீடுகளுக்கு நேரடியாக சென்று பொதுமக்களை சந்தித்து மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்ய உள்ளனர்.

 

திருச்சி மாநகராட்சி பகுதியில் மக்கள்தொகை பதிவேட்டிற்கு இரண்டாம் கட்டமாக புகைப்படம் எடுக்கும் பணி இன்று தொடங்குகிறது

Print PDF

தினத்தந்தி           04.10.2013

திருச்சி மாநகராட்சி பகுதியில் மக்கள்தொகை பதிவேட்டிற்கு இரண்டாம் கட்டமாக புகைப்படம் எடுக்கும் பணி இன்று தொடங்குகிறது

திருச்சி மாநகராட்சி பகுதியில் மக்கள் தொகை பதிவேட்டிற்கு இரண்டாம் கட்டமாக புகைப்படம் எடுக்கும் பணி இன்று தொடங்குகிறது.

இது தொடர்பாக திருச்சி மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

இரண்டாம் கட்ட பணி

திருச்சி மாநகராட்சியால் அறிவிக்கப்பட்ட மையங்களில் தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிக்கும் பணி இரண்டாம் கட்டமாக தொடர்ந்து நடைபெற உள்ளது. மாநகராட்சிக்குட்பட்ட முதல் கட்டமாக நடைபெற்ற முகாம்களில் புகைப்படம் எடுக்காதவர்கள் மற்றும் புகைப்படம் எடுக்க புதிதாக விண்ணப்பம் கொடுத்த 5 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இந்த சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு தங்களது புகைப்படம், கைவிரல் ரேகைகள் மற்றும் கண் கருவிழிப்படலம் ஆகியவற்றினை பதிவு செய்து கொள்ளலாம். ஒவ்வொரு நபருக்கும் பிரத்யேக அடையாள எண், அடையாள அட்டை (ஸ்மார்ட் கார்டு) வழங்கப்படும்.

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 1 முதல் 60 வார்டு வரை தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்.பி.ஆர்.) தாள் தயாரிக்கும் பணி இரண்டாம் கட்டமாக இன்று (வியாழக்கிழமை) தொடங்கி தொடர்ந்து நடைபெற உள்ளது. நாள் ஒன்றுக்கு 150 பேருக்கு புகைப்படம் எடுக்கும் பணி மேற்கொள்ளப்படும். நாள் ஒன்றுக்கு 150 பேருக்கு டோக்கன் வழங்கப்படும். அதிகப்படியான நபர்கள் புகைப்படம் எடுக்க வரும்போது அவர்களுக்கு அடுத்த நாள் மட்டுமே டோக்கன் வழங்கப்பட்டு புகைப்படம் எடுக்கப்படும்.

அட்டையின் பயன்கள்

இந்த அடையாள அட்டையானது புதிய குடும்ப அட்டைகள் பெறுவதற்கும், இந்தியா முழுவதும் எங்கு வேண்டுமானாலும் அடையாளத்தை நிரூபிக்க, அரசு நல திட்ட உதவிகள் மற்றும் இதர சலுகைகள் பெற, வயது மற்றும் பிறந்த தேதி நிரூபிக்க, வங்கி கணக்கு தொடங்க, பாஸ்போர்ட்டு பெற, வாகனங்கள் பதிவு செய்ய, தொலைபேசி, கைப்பேசி எரிவாயு இணைப்பு பெற நிலம் பதிவுகள் திருமணம் பதிவுகள் போன்ற எண்ணற்றவைக்கு பயன்படும்.

புகைப்படம் எடுக்கும் மையத்திற்கு மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது வழங்கப்பட்ட ரசீது, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம், பான்கார்டு, பாஸ்போர்ட்டு, 100 நாள் வேலை திட்ட அடையாள அட்டை ஆகியவற்றை கொண்டு செல்ல வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 


Page 98 of 841