Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

15–ந்தேதி முதல் 'அம்மா' உணவகத்தில் 3 ரூபாய்க்கு 2 சப்பாத்தி

Print PDF

மாலை மலர்              10.09.2013

15–ந்தேதி முதல் 'அம்மா' உணவகத்தில் 3 ரூபாய்க்கு 2 சப்பாத்தி
சென்னை, செப். 10: ஏழை எளிய நடுத்தர மக்கள் விலைவாசி பிடியில் விடுபட சென்னையில் 'அம்மா மலிவு விலை உணவகம்' பிப்ரவரி மாதம் 19–ந்தேதி தொடங்கப்பட்டது. முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் இந்த திட்டம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

அம்மா உணவகத்தில் காலை 7 மணி முதல் 10 மணி வரை 1 இட்லி 1 ரூபாய்க்கும், மதிய உணவாக நண்பல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை சாம்பார் சாதம் 5 ரூபாய்க்கும், தயிர் சாதம் 3 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இட்லி தவிர பொங்கல்–சாம்பார் 5 ரூபாய்க்கும், மதிய உணவின்போது எலுமிச்சை சாதம் அல்லது கருவேப்பிலை சாதம் 5 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதனை வாங்கி சாப்பிட தினமும் கூட்டம் அலை மோதுகிறது. சென்னைக்கு வேலை தேடி வருபவர்கள், ஆட்டோ தொழிலாளர்கள், உழைக்கும் வர்க்கத்தினர், ஏழை தாய்மார்கள் பலர் அம்மா உணவகத்தில் தினமும் சாப்பிடுகின்றனர்.

அம்மா உணவகங்களில் இனி மாலை நேரங்களில் சப்பாத்தியும் வழங்கப்படும் என்று முதல்–அமைச்சர் ஜெயலலிதா கடந்த மே மாதம் 15–ந்தேதி சட்டசபையில் அறிவிப்பு வெளியிட்டார்.

200 மலிவு விலை உணவகங்களிலும் மாலை நேரத்தில் 2 சப்பாத்தி மற்றும் பருப்பு கடைசல் அல்லது குருமா 3 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என்றும் அறிவித்தார்.

இந்த அறிவிப்பின்படி வருகிற 15–ந்தேதி முதல் அம்மா உணவகங்களில் சப்பாத்தி விற்பனை தொடங்கப்படுகிறது.

சப்பாத்திக்கு மாவு பிசையும் மிஷின் ஒரு மண்டலத்துக்கு 1 வீதம் 15 மண்டலத்துக்கு ரூ.4 கோடி செலவில் வாங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் 1 கடைக்கு 2 ஆயிரம் சப்பாத்தி வீதம் 30 ஆயிரம் சப்பாத்தி 1 மண்டலத்திற்கு தயார் செய்யப்பட்டு 15 வார்டுகளில் உள்ள அம்மா உணவகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

இதே போல் மொத்தம் உள்ள 15 மண்டலங்களில் இருந்து 4 லட்சம் சப்பாத்தி தினமும் தயார் செய்யப்பட்டு அனுப்பப்படும்.

இதன் சோதனை ஓட்டம் நேற்று கோபாலபுரத்தில் உள்ள அம்மா உணவகத்தில் செய்து பார்க்கப்பட்டது. அப்போது சப்பாத்தி மிகவும் அருமையாக வந்தது. பருப்பு கடைசலும் குருமாவும் நன்றாக இருந்தது.

முதல்–அமைச்சர் ஜெயலலிதா 15–ந்தேதி சப்பாத்தி வினியோகத்தை தொடங்கி வைக்கிறார். இதைத் தொடர்ந்து 200 வார்டுகளில் உள்ள அம்மா உணவகங்களிலும் தினமும் மாலை நேரங்களில் 3 ரூபாய்க்கு 2 சப்பாத்தி கிடைக்கும்.

மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்த அம்மா உணவகங்கள் மதுரை, திருச்சி, கோவை, திருநெல்வேலி, சேலம், திருப்பூர், தூத்துக்குடி, வேலூர், ஈரோடு ஆகிய 9 மாநகராட்சிகளுக்கும் விரிவு படுத்தப்பட்டு தற்போது வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.
 

பெங்களூரு மாநகராட்சி மேயராக சத்தியநாராயணா போட்டியின்றித் தேர்வு

Print PDF

தினமணி             05.09.2013

பெங்களூரு மாநகராட்சி மேயராக சத்தியநாராயணா போட்டியின்றித் தேர்வு

பெங்களூரு மாநகராட்சி மேயராக பாஜகவைச் சேர்ந்த பசவனகுடி வார்டு உறுப்பினர் பி.எஸ்.சத்தியநாராயணா போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பெங்களூரு மாநகராட்சிக்கு மேயர், துணை மேயர் பதவிக்கு புதன்கிழமை தேர்தல் நடைபெற்றது. மேயர் பதவி பொது பிரிவுக்கும், துணை மேயர் பதவி பழங்குடியின மகளிருக்கும் ஒதுக்கப்பட்டிருந்தது.

இதில், பெங்களூரு பசவனகுடி வார்டு பாஜக உறுப்பினர் பி.எஸ்.சத்தியநாராயணா போட்டியின்றி மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். துணை மேயராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பேட்டராயணபுரா வார்டு உறுப்பினர் இந்திராவும் போட்டியின்றித்  தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேயராகப் பதவி ஏற்ற சத்தியநாராயணா, செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

பெங்களூரு மாநகராட்சி மேயராக என்னைத் தேர்ந்தெடுக்க காரணமான பாஜக பொதுச் செயலாளர் அனந்த்குமார், முன்னாள் துணை முதல்வர் ஆர்.அசோக், பாஜகவைச் சேர்ந்த அனைத்து உறுப்பினர்களுக்கு நன்றி.

பெங்களூரு மாநகராட்சியில் பாஜகவைச் சேர்ந்த மேயர்கள் பல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தியுள்ளனர்.

என்றாலும், பல திட்டங்கள் கிடப்பில் உள்ளன. இதனைப் படிப்படியாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

வாகனங்கள் நெரிசல் இல்லாமல் செல்லும் வகையில், சாலைகள் மேம்படுத்தப்படும். ஏரிகள் தூர் வாரப்படும். குடிநீர், மின்சாரம் தடையில்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். வரி, விளம்பரங்கள் மூலம் மாநகராட்சியின் வருவாய் பெருக்கப்படும். மத்திய, மாநில அரசுகளின் உதவியுடன் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றார் அவர்.

துணை மேயர் இந்திரா பேசியது:

நாட்டின் சுதந்திரத்திற்காகப் போராடி சிறைக்குச் சென்ற குடும்பத்திலிருந்து நான் அரசியலுக்கு வந்துள்ளேன். என்னை மாநகரின் இரண்டாவது குடிமகளாக தேர்ந்தெடுக்க காரணமான காங்கிரஸ் தலைவர்கள் அனைவருக்கும் நன்றி.

குப்பை பிரச்னையை தீர்த்து, குப்பையில்லா நகரமாக பெங்களூருவை ஆக்குவதே எனது லட்சியம் என்றார் அவர்.

 

சென்னையில் 158 இடங்களில் வாடகை சைக்கிள் திட்டம்

Print PDF

தமிழ் முரசு            05.09.2013

சென்னையில் 158 இடங்களில் வாடகை சைக்கிள் திட்டம்

சென்னை: நடந்து செல்பவர்களுக்கு வசதியாக 'சைக்கிள் ஷேரிங்' திட்டத்தை மாநகராட்சி விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. சென்னையில் வாகன எண்ணிக்கை அதிகரிப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது. இதைதடுக்க மாற்று ஏற்பாடாக சைக்க¤ள் ஓட்டும் பழக்கத்தை மக்களிடையே அதிகரிக்க மாநகராட்சி முடிவு செய்தது. இதற்காக தனி பாதை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதைதொடர்ந்து, சைக்கிள் ஷேரிங் திட்டத்தை மாநகராட்சி விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. இதன்படி மாநகராட்சி சார்பில் மெட்ரோ ரயில் நிலையங்கள், பறக்கும் ரயில் நிலையங்கள் மற்றும் முக்கிய ரயில், பஸ் நிலைய பகுதிகளில் சைக்கிள் ஸ்டாண்ட் அமைக்கப்படும். இங்கிருந்து சைக்கிளை பெற்றுக் கொண்டு இதே போன்று மற்றொரு இடத்தில் அமைக்கப்பட்டுள்ள ஸ்டாண்டில் நிறுத்திக் கொள்ளலாம். இதற்கு ஸ்மார்ட் கார்டு போன்ற சிஸ்டம் பயன்படுத்தப்படும். இதன்மூலம் மக்கள் இனி நடந்து செல்ல வேண்டிய அவசியமில்லை. அதோடு பார்க்கிங் பிரச்னை, வாகனங்கள் திருட்டு போய் விடுமோ என்று அச்சப்படவும் தேவையில்லை. இதன் மூலம் மக்களுக்கு உடல் ஆரோக்கியமும்  ஏற்படும் என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரியிடம் கேட்டபோது, ‘சென்னையில் முதல்கட்டமாக சைக்கிள் ஷேரிங் திட்டத்தை அறிமுகப்படுத்த 158 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதற்கு தேவைப்படும் சைக்கிள்களை வழங்கும் நிறுவனங்களை தேர்வு செய்யவும், கட்டணம் குறித்து முடிவு செய்யவும் ஆலோசித்து வருகிறோம். இத்திட்டம் இன்னும் ஒரு மாதத்தில் இறுதி வடிவம் பெறும். மக்களுக்கு பயனுள்ளதாக அமையும். நல்ல வரவேற்பு கிடைக்கும்‘ என்றார்.

 


Page 102 of 841