Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

பேரூர் பேரூராட்சியில் "குப்பைக்கு தங்கம்' திட்டத்தின் கீழ் பரிசு

Print PDF

தினமணி               02.09.2013

பேரூர் பேரூராட்சியில் "குப்பைக்கு தங்கம்' திட்டத்தின் கீழ் பரிசு

பேரூர் பேரூராட்சியில் "குப்பைக்கு தங்கம்' திட்டத்தின் கீழ் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

பேரூர் பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் ஆகஸ்ட் 8-ஆம் தேதிமுதல் 14-ஆம் தேதி வரை "குப்பைக்கு தங்கம்' என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

அதன்படி பேரூராட்சிக்கு உள்பட்ட 15 வார்டுகளில் உள்ள 2,200 வீடுகளில் ஒரு வார காலத்திற்கு குப்பைகள் சேகரிக்கப்பட்டன. இத்திட்டத்தின் கீழ் மட்கும் குப்பை, மட்காத குப்பை ஆகியவற்றை பொதுமக்களே தரம் பிரித்து வழங்க வேண்டும்.  இதனை பேரூராட்சி துப்புரவுத் தொழிலாளர்கள் தினமும் வீடு வீடாக சென்று சேகரித்து வந்தனர்.

இத்திட்டத்தை முழுமையாக செயல்படுத்தி, கண்காணிக்கும் பொறுப்பு தன்னார்வ அமைப்புகளைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இது குறித்து பேரூராட்சியின் செயல் அலுவலர் தமிழ்ச்செல்வன் கூறியது:

குப்பைகளை மறுசுழற்சி செய்ய தேவையாக குப்பைகளை தரம் பிரிப்பது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, குப்பை இல்லாத சுற்றுச்சூழலை உருவாக்கவே குப்பைக்கு தங்கம் என்ற திட்டம் பேரூராட்சியால் அறிமுகப்படுத்தப்பட்டது.

இத்திட்டத்திற்கு பொதுமக்களிடம் பெரும் ஆதரவு கிடைத்தது. மேலும் குப்பைகளை முறையாக தரம் பிரித்து வழங்குபவர்களுக்கு தனியார் அமைப்புகளின் பங்களிப்புடன் தங்கம், வெள்ளி நாணயம், பட்டுப் புடவை உள்ளிட்ட பரிசுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

அதன்படி ஒவ்வொரு வார்டிலும் தலா பத்து பேரை தேர்ந்தெடுத்து பேரூராட்சி தலைவர் லட்சுமி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழச்சியின் போது பரிசுகள் வழங்கப்பட்டன என்றார்.

 

பழனி நகர்மன்றக் கூட்டம்

Print PDF

தினமணி               02.09.2013

பழனி நகர்மன்றக் கூட்டம்

பழனி  நகர்மன்றக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

   பழனி நகராட்சி, பழனியாண்டவர் ஹாலில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு நகர்மன்றத் தலைவர் வேலுமணி தலைமை வகித்தார்.  துணைத் தலைவர் முருகானந்தம், நகராட்சி பொறியாளர், அலுவலர்கள், கவுன்சிலர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். 

   கவுன்சிலர்கள் செபாஸ்டியன், கந்தசாமி, முஜிபுதீன் உள்ளிட்டோர் பழனியில் நிலவும் குடிநீர் பஞ்சம் குறித்து கேள்வி எழுப்பினர். மேலும், நகராட்சி பெயரால் குடிநீர் விநியோகம் செய்யும் தனியார் லாரிகள், நகராட்சி நீரை சில தனியாருக்கு குடம் ரூ. 3 வீதம் விற்பனை செய்வதாகவும் புகார் செய்தனர். இதை ஏராளமான கவுன்சிலர்கள் ஆமோதித்தனர்.

   கவுன்சிலர் சுப்ரமணி தனது வார்டில் ஆழ்குழாய் அமைக்க வலியுறுத்தினார். வாக்காளர் கணக்கெடுப்பில் பலரது பெயர்கள் விடுபட்டுள்ள நிலையில் ஆதார் அட்டைக்கு தங்கள் பெயர்களை பதிய முடியாத நிலையில் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி இருப்பதாக ஏராளமான கவுன்சிலர்கள் தெரிவித்தனர்.

   கவுன்சிலர் சுரேஷ் பாலாஜி மில், ஓம் சண்முகா தியேட்டர் இட்டேரி ரோடு சந்திப்பு பகுதியில் பஸ் நிறுத்தம் அமைக்க வலியுறுத்தினார். இதை கவுன்சிலர்கள் குமார், கார்த்தி ஆகியோர் ஆமோதித்தனர். கவுன்சிலர் முருகபாண்டியன் நகராட்சி பகுதிகளில் அமையவுள்ள ஆவின் நிலையங்கள் அனுமதி பெற்ற பின்னரே வைக்க வேண்டும் எனத் தெரிவித்தார். 

   பெரியப்பா நகர் பகுதியில் அமைந்துள்ள உரக்கிடங்கால் நிலத்தடி நீர் மாசுபடுவது பற்றி கேள்வி எழுப்பிய போது உரக்கிடங்கில் உள்ள குப்பைகள் மூலம் மின்சாரம் தயாரிக்க மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு வருவதாக தலைவர் பதிலளித்தார். கவுன்சிலர் பத்மினி முருகானந்தம் கோடைகால நீர்த்தேக்கத்தை தூர்வார வேண்டும் எனத் தெரிவித்தார். 

   கவுன்சிலர் சுந்தர் அஞ்சலக சாலையில் தனியாரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தை நகராட்சி எடுக்க வேண்டும் எனத் தெரிவித்த போது, சம்பந்தப்பட்ட இடப் பிரச்னை நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதாகத் தெரிவித்தார். பஸ்  நிலையத்தில் கடைக்கு முன்பு மூன்று அடி வரை பயன்படுத்த அனுமதித்தும், ஆக்கிரமிப்பின் போது அவை அகற்றப்பட்டதாக கவுன்சிலர்கள் தெரிவித்தனர். அப்போது மூன்று அடி பயன்படுத்த அனுமதியில்லை எனத் தலைவர் பதிலளித்தார்.

 

அம்மா உணவகத்தில் முன்னாள் படைவீரர்களுக்கு வேலை வாய்ப்பு

Print PDF

தினமணி               02.09.2013

அம்மா உணவகத்தில் முன்னாள் படைவீரர்களுக்கு வேலை வாய்ப்பு

அம்மா உணவகத்தில் பாதுகாவலர் பணியிடங்களுக்கு முன்னாள் படைவீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சென்னை, ஆலந்தூர் மற்றும் நுங்கம்பாக்கம் பகுதிகளில் செயல்படும் அம்மா உணவகத்திற்கு பாதுகாவலர் பணியிடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய 78 முன்னாள் படைவீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.9 ஆயிரத்து 958 வழங்கப்படும்.

விருப்பமுள்ளவர்கள், தங்களுடைய முன்னாள் படைவீரர் அடையாள அட்டை, படைவிலகல் சான்று, பென்சன் பெறுவதற்கான ஆணை, ரேஷன் அட்டை, இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றோடு திங்கள்கிழமைதோறும் காலை 10 மணியளவில் பொது மேலாளர், டெக்ஸ்கோ, எண்.2, மேற்கு மாடவீதி, சின்னமலை, சைதாபேட்டை, சென்னை-600 015. என்ற முகவரியைத் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு உதவி இயக்குநர், முன்னாள் படைவீரர் நல அலுவலகம், திருவள்ளுர் என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


Page 104 of 841