Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

நெல்லை மாநகராட்சி கூட்டம்

Print PDF

தினத்தந்தி              23.08.2013 

நெல்லை மாநகராட்சி கூட்டம்

 
 
 
 
 
 
 
 
 
மாநகராட்சி கூட்டம்

நெல்லை மாநகராட்சி கூட்டம் ராஜாஜி கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. மேயர் விஜிலா சத்யானந்த் தலைமை தாங்கினார். துணை மேயர் ஜெகநாதன் என்ற கணேசன், ஆணையாளர் த.மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் பகல் 11 மணிக்கு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் பகல் 11-45 மணிக்கு தான் தொடங்கியது. கூட்டம் சரியான நேரத்தில் தொடங்கவில்லை என்று தி.மு.க. கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கூட்டம் தொடங்கியதும் மேயர் விஜிலா சத்யானந்த், பேசுகையில், 67-வது சுதந்திர தின விழாவில் சென்னை கோட்டையில் கொடியேற்றிய முதல்-அமைச்சர் ஜெயலலிதா, தமிழக மக்களே என் குடும்பம், தமிழக மக்களே என் பிள்ளைகள், தமிழக மக்களின் நலனே என் நலன் என்று பேசிவிட்டு ராணுவ வீரர்களின் நினைவிடத்தில் வீரவணக்கம் செலுத்தினார். மேலும் சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு பென்சன் தொகையை உயர்த்தி வழங்கிய முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு, நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. கிறிஸ்தவ மதத்திற்கு மதம் மாறிய ஆதிதிராவிடர்களையும் பட்டியல் இனத்தில் சேர்க்க வேண்டும் என்று பிரதமருக்கு கடிதம் எழுதிய முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது, என்றார்.

இதைத்தொடர்ந்து நெல்லை மாநகராட்சி பகுதிக்கு அரியநாயகிபுரம் அணைக்கட்டில் இருந்து ரூ.230 கோடி மதிப்பில் குடிநீர் கொண்டு வருவதற்கான திட்டத்தின் முழுவிளக்கத்தை செயற்பொறியாளர் நாராயண நாயர், வீடியோ படக்காட்சி மூலம் விளக்கி கூறினார்.

புதிய குடிநீர் திட்டம்

மேயர் விஜிலா சத்யானந்த் பேசியதாவது:-

நெல்லை மாநகராட்சி பகுதிக்கு தற்போது 50.10 எம்.எல்.டி. குடிநீர் கிடைத்து வருகிறது. மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப புதிய குடிநீர் திட்டம் நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். கடந்த தி.மு.க. ஆட்சியில் பாபநாசம் அணையில் இருந்து நேரடியாக குடிநீர் கொண்டு வருவதற்கான திட்டத்தை அறிவித்தனர். நாங்கள் பொறுப்புக்கு வந்ததும் அந்த இடத்திற்கு சென்று ஆய்வு செய்தோம். அதில் 1½ கிலோ மீட்டர் தூரத்திற்கு புலிகள் சரணாலத்தின் வழியாக பைப் லைன் அமைக்கவேண்டி உள்ளது.

இது சாத்தியமில்லாதது என்பதால் அந்த திட்டத்தை மாற்றி, அரியநாயகிபுரம் அணைகட்டில் இருந்து தண்ணீர் எடுக்க முடிவு செய்து திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டது இதற்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா, உத்தரவிட்டு உள்ளார்.

ரூ.230 கோடி

இந்த திட்டத்தின் மூலம் நெல்லை மாநகராட்சி பகுதிக்கு மேலும் 50 எம்.எல்.டி. தண்ணீர் கிடைக்கும். இதற்கான மொத்த மதிப்பீடு ரூ.230 கோடியாகும். இதில் ரூ.92 கோடியை தமிழக முதல்-அமைச்சர் வழங்குகிறார். ரூ.69 கோடி ஜெர்மன் வங்கியில் கடனாக வாங்கப்படுகிறது. ரூ.46 கோடி மானியமாக வழங்கப்படுகிறது. மீதமுள்ள ரூ.23 கோடி மட்டும் மாநகராட்சி பங்களிப்பாக செலுத்த வேண்டி உள்ளது.

அரியநாயகிபுரம் அணைக்கட்டில் இருந்து எடுக்கப்படுகின்ற தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிப்பு செய்து மாநகராட்சி மக்களுக்கு வழங்கப்படும். இதனால் பராமரிப்பு செலவு ஆண்டுக்கு ரூ.11 கோடி ஆகிறது. எனவே வீட்டு குடிநீர் கட்டணம் ரூ.200 ஆக உயர்த்தப்படும். இந்த திட்டம் நடைமுறைக்கு வருகின்றபோது பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி 24 மணி நேரமும் குடி தண்ணீர் கிடைக்கும். திட்டம் நடைமுறைக்கு வருகின்ற போது தான் குடிநீர் கட்டண உயர்வும் நடைமுறைக்கு வரும்.

இவ்வாறு மேயர் விஜிலா சத்யானந்த் கூறினார்.

 

கோவை வ.உ.சி. பூங்காவில் பார்வையாளர்களை மிரளவைத்த கோதுமை நாக பாம்பு குட்டிகள்

Print PDF

தினத்தந்தி              23.08.2013 

கோவை வ.உ.சி. பூங்காவில் பார்வையாளர்களை மிரளவைத்த கோதுமை நாக பாம்பு குட்டிகள்

 

 

 

 

 

 

கோவை வ.உ.சி. பூங்காவில் புதிய வரவாக வந்த கோதுமை நாக பாம்பு குட்டிகள் பார்வையாளர்களை மிரள வைத்தது.

விலங்கியல் பூங்கா

கோவை மாநகராட்சி வ.உ.சி. உயிரியல் பூங்காவில் பெலிக்கான், மயில், மான், கடமான் உள்ளிட்ட விலங்குகள், பறவை இனங்களை சேர்ந்த 890 உயிரினங்கள் உள்ளன. அபூர்வ இனமான கண்ணாடி விரியன் உள்ளிட்ட கொடிய விஷம் கொண்ட பாம்புகளும் பராமரிக்கப்படுகிறது.

இந்த பூங்காவுக்கு கோவை மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதியை சேர்ந்தவர்கள் தங்கள் குழந்தைகளுடன் வந்து பூங்காவில் வளர்க்கப்படும் உயிரினங்களை பார்த்து செல்கிறார்கள்.

பூங்காவுக்கு புது வரவு

மாநகராட்சி பூங்காவில் உள்ள கோதுமை வகையை சேர்ந்த நாகப்பாம்புகளில் ஒரு பாம்பு 10 முட்டை இட்டது. அந்த முட்டைகளை தனியாக எடுத்து இங்குபேட்டரில் வைத்தனர். நேற்று அந்த முட்டைகளில் இருந்து 4 பாம்பு குட்டிகள் வெளியே வந்தன.

அவைகள் தனியாக ஒரு இடத்தில் வைக்கப்பட்டு உள்ளது. பூங்காவுக்கு வந்தவர்கள் அவற்றை ஆர்வத்துடன் பார்த்து சென்றனர். மேலும் பூங்காவில் இருக்கும் 80 ஜோடி புறாக்களில் ஒரு புறா நேற்று 2 குஞ்சுகளை பொறித்தது.

இது குறித்து பூங்கா இயக்குனர் டாக்டர் அசோகன் கூறியதாவது:-

பராமரிப்பு

கடந்த சில வாரத்துக்கு முன்பு பூங்காவில் உள்ள அரியவகை பாம்புகளில் ஒன்றான, கொடிய விஷம்கொண்ட 2 கண்ணாடி விரியன் பாம்புகள் 40 குட்டிகளை போட்டது. கொடிய விஷம் கொண்டது என்பதால், குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் அவற்றை பராமரிப்பதில் சிரமம் உள்ளது. எனவே சில நாட்கள் பராமரிக்கப்பட்ட பின்னர் அவைகள் வனப்பகுதியில் விடப்படும். கோதுமை வகை நாகப்பாம்புக்கு விஷம் குறைவாகதான் உள்ளது. அந்த வகையை சேர்ந்த 4 பாம்பு குட்டிகளும் பூங்காவிலேயே பராமரிக்கப்படும். இவ்வாறு டாக்டர் அசோகன் தெரிவித்தார்.

இந்த பாம்பு குட்டிகளை பார்க்க ஏராளமானோர் திரண்டனர். பாம்பு குட்டிகள் அங்கும் இங்கும் சீறியபடி நெளிந்ததால் அதை பார்த்து பார்வையாளர்கள் மிரண் டனர்.

 

ஓட்டல் அமைக்க இடம் கிடைக்காததால் நடமாடும் அம்மா உணவகம் அறிமுகம்: மாநகராட்சி ஏற்பாடு

Print PDF

மாலை மலர்             22.08.2013

ஓட்டல் அமைக்க இடம் கிடைக்காததால் நடமாடும் அம்மா உணவகம் அறிமுகம்: மாநகராட்சி ஏற்பாடு
 
ஓட்டல் அமைக்க இடம் கிடைக்காததால் நடமாடும் அம்மா உணவகம் அறிமுகம்: மாநகராட்சி ஏற்பாடு
 
ஏழை, எளிய மக்கள் பயன் அடையும் வகையில் அம்மா உணவகங்களை முதல்–அமைச்சர் ஜெயலலிதா 6 மாதங்களுக்கு முன்பு திறந்து வைத்தார். சென்னை நகரில் மாநகராட்சி சார்பில் வார்டுக்கு ஒன்று வீதம் 200 அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன. இங்கு ஒரு ரூபாய்க்கு இட்லி, 5 ரூபாய்க்கு சாம்பார் சாதம், பொங்கல், கறிவேப்பிலை சாதம், எலுமிச்சை சாதம், 3 ரூபாய்க்கு தயிர் சாதம் ஆகியவை விற்பனை செய்யப்படுகிறது.

இதன் காரணமாக அம்மா உணவகங்களுக்கு அமோக வரவேற்பு உள்ளது. எனவே, சென்னையில் அதிக எண்ணிக்கையில் அம்மா உணவகங்களை திறக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

இதன்படி சென்னை நகரில் மாநகராட்சி சார்பில் 1000 அம்மா உணவகங்களை இந்த ஆண்டுக்குள் அமைக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது. கவுன்சிலர்களுக்கு ஒதுக்கப்படும் வார்டு வளர்ச்சி நிதி மூலம் இந்த உணவகங்கள் அமைக்கப்பட உள்ளன.

கூடுதலாக அம்மா உணவகங்களை அமைப்பதற்கான இடங்களை தேர்வு செய்யும் நடவடிக்கைகளில் வார்டு கவுன்சிலர்கள் ஈடுபட்டுள்ளனர். என்றாலும் அதற்கு பொருத்தமான இடங்கள் கிடைக்காத நிலை உள்ளது.

எனவே, கூடுதலாக அம்மா உணவகங்கள் அமைக்க பொருத்தமான இடம் கிடைக்காததால் வார்டு பகுதிகளில் நடமாடும் அம்மா உணவகங்களை, அமைக்க வேண்டும், என்று பெரும்பாலான கவுன்சிலர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

விரைவில் இந்த நடமாடும் அம்மா உணவகங்கள் அமைக்கப்படுவதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிதாக அம்மா உணவகங்கள் அமைக்க இடம் கிடைக்காத பகுதிகளில் இந்த நடமாடும் அம்மா உணவகங்கள் செயல்பட உள்ளன.

தற்போது அமைக்கப்பட்டுள்ள 200 அம்மா உணவகங்கள் மூலம் 2 ஆயிரத்து 400 பெண்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். உணவு சமைப்பது, அதை பரிமாறுவது போன்ற வேலைகளை இவர்கள் செய்து வருகிறார்கள்.

நடமாடும் அம்மா உணவகங்கள் உள்பட ஆயிரம் உணவகங்கள் தொடங்கப்பட்டால் இதன் மூலம் மேலும் 10 ஆயிரம் பெண்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். குறைந்த விலையில் உணவு கிடைப்பதால் கூலி வேலை செய்பவர்கள் போதிய வருமானம் இல்லாத ஏழை எளியவர்கள் மிகுந்த பயன் பெறுவார்கள். எனவே, நடமாடும் அம்மா உணவகங்கள் உள்பட 1000 அம்மா உணவகங்களை விரைவில் சென்னை நகரில் திறக்கும் நடவடிக்கையில் சென்னை மாநகராட்சி இறங்கி உள்ளது.

 


Page 109 of 841