Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

பேரூராட்சி அலுவலக கட்டடம் திறப்பு விழா ஆலோசனை கூட்டம்

Print PDF

தினகரன்               14.08.2013

பேரூராட்சி அலுவலக கட்டடம் திறப்பு விழா ஆலோசனை கூட்டம்

இளம்பிள்ளை:  இளம்பிள்ளை பேரூராட்சிக்கு புதிய அலுவலக கட்டிடம் ரூ 24.50 லட்சத் தில் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா கடந்த ஜூலை மாதம் 27ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. பேரூராட்சியில் தீர்மானம் நிறைவேற்றாமல், பேரூராட்சி தலைவரை அழைக்காமல் விழா நடத்துவதை எதிர்த்து ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து விழா ரத்து செய்யப்பட்டது.

இதன் பின்னர் பேரூராட்சி அவசர கூட்டம் நடத்தி, கடந்த 9ம் தேதியன்று திறப்பு விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அமைச்சரை அழைக்காமல் விழாவை நடத்தக்கூடாது என்று செயல் அலுவலர் கலைராணி, ஐகோர்ட்டில் மற்றொரு மனு தாக்கல் செய்தார். இதை தொடர்ந்து இந்த விழாவும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் பேரூராட்சி அலுவலகத்தை திறப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற உள்ளது.

இதுகுறித்து பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் பழனியம்மாள் வெளியிட்டுள்ள அறிக்கையில், இளம்பிள்ளை பேரூராட்சி அலுவலக கட்டிடம் திறப்பு விழா தொடர்பாக சேலம் கலெக்டர் அலுவலகத்தில் 14ம் தேதி (இன்று) மாலை 4.30 மணியளவில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் பேரூராட்சி தலைவர், துணை தலைவர், கவுன்சிலர்கள் மற்றும் செயல் அலுவலர் ஆகியோர் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். 

 

மாநகராட்சி அண்ணா பூங்கா பராமரிப்பு குத்தகை: ரூ. 64.50 லட்சத்துக்கு ஏலம்

Print PDF

தினமணி           14.08.2013

மாநகராட்சி அண்ணா பூங்கா பராமரிப்பு குத்தகை: ரூ. 64.50 லட்சத்துக்கு ஏலம்

சேலம் மாநகராட்சிக்குச் சொந்தமான அண்ணா பூங்கா பராமரிப்புக்கான குத்தகை ஏலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பூங்கா பராமரிப்பு அனுமதி ஒப்பந்தம் கடந்த ஆண்டை விட 5 மடங்கு தொகைக்கு ஏலம் போனது.

சேலம் மாநகராட்சிக்குச் சொந்தமான அண்ணா பூங்கா பெரியார் மேம்பாலம் அருகே உள்ளது. பூங்காவைப் பராமரிப்பதற்கான குத்தகை ஒப்பந்தம் ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட்டு தனியாருக்கு வழங்கப்படுகிறது.

2013- 2014-ஆம் ஆண்டுக்கான குத்தகை அனுமதிக்கான ஏலம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் உதவி ஆணையர் (வருவாய்) ராஜா, அஸ்தம்பட்டி மண்டல உதவி ஆணையர் ப்ரீத்தி ஆகியோர் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஏலத்தில், மொத்தம் 9 பேர் தலா ரூ. 5 லட்சம் வீதம் முன் பணமாகச் செலுத்தி கலந்து கொண்டனர். ஏலதாரர்களில் ஜெயவேல் அதிகபட்சமாக ரூ. 64.50 லட்சத்துக்கு ஏலம் கோரினார். இதையடுத்து, நிகழ் ஆண்டுக்கான பூங்கா பராமரிப்பு ஒப்பந்த அனுமதி ஜெயவேலுக்கு வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு பூங்கா பராமரிப்பு ஒப்பந்தம் ரூ. 13.99 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டது. தற்போது பராமரிப்பு ஒப்பந்த அனுமதி கடந்த ஆண்டைக் காட்டிலும் 5 மடங்கு அதிகமான தொகைக்கு ஏலம் விடப்பட்டுள்ளது.

நுழைவுக் கட்டணம் உயரும்: அண்ணா பூங்காவைப் பராமரிக்க குத்தகை அனுமதி பெறும் ஒப்பந்ததாரர்கள் பொதுமக்களிடம் நுழைவுக் கட்டணத்தை வசூலிக்கின்றனர். தற்போது 3 வயது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரூ. 5 நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பூங்காவுக்குள் அமைக்கப்பட்டுள்ள ராட்டினம், ரயில் பயணம், பலூன் அரங்கு போன்ற குழந்தைகள் விளையாட்டுச் சாதனங்களை அதிகபட்சம் 10 நிமிஷங்கள் வரை பயன்படுத்த ரூ. 20 முதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இந்த நிலையில், பூங்கா பராமரிப்பு அனுமதி கடந்த ஆண்டை விட 5 மடங்கு அதிகமான தொகைக்கு ஏலம் விடப்பட்டுள்ளதால், நுழைவுக் கட்டணம், கேளிக்கை பொருள்கள் பயன்பாட்டுக் கட்டணம் உயர்த்தப்படும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

ஏற்கெனவே, பூங்காவினுள் கட்டணமில்லா குழந்தைகள் விளையாட்டுச் சாதனங்கள் அதிக அளவில் பயன்பாட்டுக்கு இல்லை. மேலும், குடிநீர், கழிப்பிடம் போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லை. இந்த நிலையில், அடிப்படை வசதிகள் கூட இல்லாத அண்ணா பூங்காவுக்கு வரும் பொதுமக்கள் தங்களது குழந்தைகளை மகிழ்விக்க கூடுதல் கட்டணத்தைச் செலுத்தி விளையாட்டுப் பொருள்களைப் பயன்படுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

 

மழைநீர் சேகரிப்புவிழிப்புணர்வு பேரணி

Print PDF

தினமணி           14.08.2013

மழைநீர் சேகரிப்புவிழிப்புணர்வு பேரணி

மாமல்லபுரத்தில், பேரூராட்சி சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரூராட்சித் தலைவர் எம்.கோதண்டபாணி தொடங்கி வைத்த இப்பேரணியில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ மாணவிகள் 100-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள், அட்டைகளை ஏந்தியபடி மாமல்லபுரம் முக்கிய தெருக்கள் மற்றும் சாலைகள் வழியாக மாணவ, மாணவிகள் பேரணியாகச் சென்றனர்.

 பேரணியில் துணைத்தலைவர் தேவேந்திரன் உள்ளிட்ட கவுன்சிலர்கள் பலர் கலந்து கொண்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கினர்.

 


Page 119 of 841