Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

மாநகராட்சி ஊழியர்களுக்கு கண் சிகிச்சை முகாம்

Print PDF
தினகரன்        02.08.2013

மாநகராட்சி ஊழியர்களுக்கு கண் சிகிச்சை முகாம்


திருப்பூர், : திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட நான்கு மண்டலங்களில் பணிபுரியும் அனைத்து துப்புரவு தொழிலாளர்களுக்கும் பொது மருத்துவ பரிசோதனை முகாம் மற்றும் கண் சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, லோட்டஸ் கண் மருத்துவமனை சார்பில், திருப்பூர் மாநகராட்சியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இலவச கண்சிகிச்சை முகாம் நேற்று நடத்தப்பட்டது. முகாமை மேயர் விசாலா ட்சி தொடங்கி வைத்தார். இதில் 106 பேருக்கு கண் பரிசோதனை மற்றும் ஆலோ சனை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், துணை மேயர் குணசேகரன், மாநகர் நல அலுவலர் செல்வக்குமார், உதவி ஆணையர் (கணக்கு) சந்தானநாராயணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 

இரண்டு மாதங்களில் மலிவு விலை உணவகத்தில் 8 லட்சம் இட்லி விற்பனை

Print PDF
தினகரன்        02.08.2013

இரண்டு மாதங்களில் மலிவு விலை உணவகத்தில் 8 லட்சம் இட்லி விற்பனை


ஈரோடு, : ஈரோடு மாநகராட்சி சார்பில் ஆர்.என்.புதூர், சூளை, காந்திஜிரோடு, கொல்லம்பாளையம், ஏ.பி.டி.ரோடு, கருங்கல்பாளையம், பெரிய அக்ரஹாரம், நாச்சியப்பா வீதி, சூரம்பட்டி சமயபுரம் மாரியம்மன் கோயில், மரப்பாலம் ஹெம்மிங்வே மார்க்கெட் பகுதி ஆகிய 10 இடங்களில் மலிவு விலையில் உணவு வழங்கும் மலிவு விலை உணவகங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகம் தொடங்கப்பட்டு 2 மாதங்கள் ஆன நிலையில் இதுவரை 7 லட்சத்து 99 ஆயிரத்து 399 இட்லியும், 2 லட்சத்து 36 ஆயிரத்து 722 சாம்பார் சாதமும், ஒரு லட்சத்து 97 ஆயிரத்து 168 தயிர்சாதமும் விற்பனையாகியுள்ளது.

மலிவு விலை  உணவகத்திற்கு தேவையான காய்கறிகள் தினசரி வெளிச்சந்தைகளில் இருந்து அன்றைய விலையில் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள வரி தண்டலர்கள் முன்பணமாக 10 ஆயிரம் ரூபாய் பெற்று தேவையான காய்கறிகளை வாங்கி கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த உணவகங்களுக்கு உணவு பாதுகாப்பு லைசென்ஸ் பெறவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ஒரு உணவகத்திற்கு 2,550 ரூபாய் வீதம் 25 ஆயிரத்து 500 ரூபாய் செலவிடப்படவுள்ளது.
 

சென்னை மாநகராட்சி இடைநிலை பள்ளிகளில் போலி சான்றிதழ் மூலம் ஆசிரியர்கள் நியமனம்

Print PDF

தினத்தந்தி              02.08.2013

சென்னை மாநகராட்சி இடைநிலை பள்ளிகளில் போலி சான்றிதழ் மூலம் ஆசிரியர்கள் நியமனம்

சென்னை மாநகராட்சி இடைநிலை பள்ளிகளில் போலி சான்றிதழ் கொடுத்து ஆசிரியர்கள் பணி நியமனம் பெற்றது தெரிய வந்துள்ளது.

284 பள்ளிகள்

சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டின் கீழ் 284 பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில் 122 தொடக்க பள்ளிகளும், 92 நடுநிலை பள்ளிகளும், 36 உயர்நிலை பள்ளிகளும், 32 மேல்நிலைப்பள்ளிகளும், 30 மழலையர் பள்ளிகளும் அடங்கும். மேலும் ஒரு உருது, தெலுங்கு மேல்நிலைப்பள்ளிகளும் செயல்பட்டு வருகிறது. மாநகராட்சி பள்ளிகளில் 4 ஆயிரத்து 41 ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள். 122 தொடக்க பள்ளிகளில் மட்டும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் உள்ளனர். இதில் பெரும்பாலான இடைநிலை ஆசிரியர்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நேரடியாக பணி நியமனம் பெற்றவர்கள்.

திடுக்கிடும் புகார்

இவர்களில் 7 ஆசிரியர்கள் போலி சான்றிதழ் மூலம் ஆசிரியர் பணி பெற்றதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் புகார் எழுந்தது. அப்போது சென்னை மாநகராட்சியின் ஆணையராக இருந்த எம்.பி.விஜயகுமார் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களை பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும் இதுதொடர்பாக முழு விசாரணை மேற்கொண்டார். பின்னர் திடீரென்று எம்.பி.விஜயகுமார் இட மாற்றம் செய்யப்பட்டார். பின்னர் போலி சான்றிதழ் விவகாரம் மறைந்தது. இந்தநிலையில் போலி சான்றிதழ் கொடுத்து பணி நீக்கம் செய்யப்பட்ட 7 ஆசிரியர்கள், மேலும் பல ஆசிரியர்கள் போலி சான்றிதழ் மூலம் மாநகராட்சி பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணி பெற்றிருப்பதாக திடுக்கிடும் புகாரை சென்னை மாநகராட்சி கல்வித்துறைக்கு அளித்தனர்.

100 ஆசிரியர்களுக்கு தொடர்பு?

புகாரின்பேரில் இந்த விவகாரத்தில் முழு விசாரணை நடத்த மாநகராட்சி கல்வித்துறை உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து சென்னை மாநகராட்சி விஜிலென்ஸ் அதிகாரி சுப்பாராவ் தலைமையில் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் 26 இடைநிலை ஆசிரியர்கள் போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து, பணியில் சேர்ந்திருப்பது தெரிய வந்துள்ளது.

மேலும் 100–க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இதேபோன்று போலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்திருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக அவர்கள் அனைவரும் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் நடத்தப்படும் விசாரணை அறிக்கையை மாநகராட்சி விஜிலென்ஸ் அதிகாரிகள் இன்னும் 2 அல்லது 3 நாட்களுக்குள் சென்னை மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூரிடம் அளிக்க உள்ளனர். அப்போது போலி சான்றிதழ் மூலம் மோசடியில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது பணி நீக்கம் போன்ற கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது.

மாணவர்கள் அதிர்ச்சி

சென்னை மாநகராட்சி பள்ளிகள் மாணவர்களின் சேர்க்கை விகிதம் பெரும் அளவில் குறைந்து வரும் நிலையில், போலி சான்றிதழ் மூலம் ஆசிரியர் பணி நியமனம் நடைபெற்றுள்ளது பள்ளி மாணவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை மாநகராட்சி தீர்மானத்தை போலியாக விளம்பரப்படுத்தி கடந்த சில வருடங்களாக அனுமதி பெறாத பேருந்து நிழற்குடைகள் அமைத்து அதன் மூலம் பல கோடி ரூபாய் மோசடி நடைபெற்ற தகவல் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில் போலி சான்றிதழ் மூலம் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் ஆசிரியர் பணி நியமனம் நடைபெற்று இருப்பதாக வெளியாகி உள்ள தகவல் சென்னை மாநகராட்சி வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
 


Page 129 of 841