Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

அண்ணாமலை நகர் பேரூராட்சி கூட்டம்

Print PDF

தினமலர்            27.07.2013

அண்ணாமலை நகர் பேரூராட்சி கூட்டம்


சிதம்பரம்:சிதம்பரம் அண்ணாமலை நகர் பேரூராட்சி கூட்டம் அலுவலக மன்றக் கூடத்தில் நடந்தது.

பேரூராட்சி தலைவர் கீதா கலியமூர்த்தி தலைமை தாங்கினார். செயல் அலுவலர் சேவியர் அமலதாஸ், துணைத் தலைவர் செந்தில்குமார், அனைத்து கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், அண்ணாமலை நகர் பேரூராட்சிக்குட்பட்ட பலபட்டறை சுடுகாட்டில் அமைக்கப்பட்டுள்ள நவீன எரிவாயு தகனமேடை பராமரிப்பு பணியினை மூன்று ஆண்டு காலம் அண்ணாமலைநகர் காஸ்மோபாலிடன் அரிமா சங்கத்திற்கு அளிக்க ஒப்புதல்.

பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் எம்.எல்,ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் பணிகள் செய்வது. 5வது வார்டு வடக்கிருப்பு தெருவில் பொதுநிதி மூலம் வடிகால் வாய்க்கால் அமைப்பது.

கே.ஆர்.எம்., நகரில் சிறுவர் விளையாட்டு பூங்கா அமைப்பது.திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்திற்கு பிளாஸ்டிக் தூள் ஆக்கும் இயந்திரம் வாங்க அனுமதி. குடிநீர், சுகாதார பணிகள், தெருவிளக்கு பராமரிப்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்படுவது உள்ளிட்ட தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

 

ஈரோடு மாநகராட்சி 30–வது வார்டில் 2,269 குடும்பங்களுக்கு மிக்சி, கிரைண்டர்–மின்விசிறி அமைச்சர் கே.வி.ராமலிங்கம் வழங்கினார்

Print PDF

தினத்தந்தி             27.07.2013

ஈரோடு மாநகராட்சி 30–வது வார்டில் 2,269 குடும்பங்களுக்கு மிக்சி, கிரைண்டர்–மின்விசிறி அமைச்சர் கே.வி.ராமலிங்கம் வழங்கினார்

ஈரோடு மாநகராட்சி 30–வது வார்டில் 2 ஆயிரத்து 269 குடும்பங்களுக்கு மிக்சி, கிரைண்டர், மின்விசிறியை அமைச்சர் கே.வி.ராமலிங்கம் வழங்கினார்.

அமைச்சர் வழங்கினார்

தமிழக அரசு சார்பில் தமிழகம் முழுவதும் ஏழை–எளியவர்களுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர் மற்றும் மின்விசிறி வழங்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாநகராட்சி 30–வது வார்டு பகுதிக்கு உள்பட்ட பொதுமக்களுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர் மற்றும் மின்விசிறி வழங்கும் விழா கருங்கல்பாளையம் காமராஜர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிக்கூடத்தில் நேற்று நடந்தது. விழாவுக்கு தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கம் தலைமை தாங்கி, அந்த பகுதியை சேர்ந்த 2 ஆயிரத்து 269 குடும்பங்களுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர் மற்றும் மின்விசிறி வழங்கினார்.

நிகழ்ச்சியில் ஈரோடு மாநகராட்சி மேயர் மல்லிகா பரமசிவம், துணை மேயர் கே.சி.பழனிசாமி, மண்டல தலைவர்கள் ரா.மனோகரன், காஞ்சனா பழனிச்சாமி, கவுன்சிலர் காவிரி செல்வன், மாநகர் மாவட்ட வக்கீல் அணி செயலாளர் துரைசக்திவேல், இளைஞர்–இளம்பெண்கள் பாசறை செயலாளர் பி.பி.கே.மணிகண்டன், நகர அவைத்தலைவர் பாலச்சந்தர், மகளிர் அணி செயலாளர் பானுசபியா, ஈரோடு தாசில்தார் சுசீலா, வருவாய் ஆய்வாளர் பரிமளா, கிராம நிர்வாக அதிகாரி நாட்ராயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நலத்திட்ட நிகழ்ச்சிகள்

முன்னதாக நேற்று தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கம் பல்வேறு விழாக்களில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்தார். ஈரோடு காசிபாளையம் சுப்பிரமணியநகரில் எம்.எல்.ஏ. தொகுதி நிதியில் கட்டி முடிக்கப்பட்ட அங்கன்வாடி புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். சேனாதிபாளையத்தில் எம்.எல்.ஏ. நிதியில் கட்டப்பட்ட புதிய ரேஷன் கடையையும், திண்டல் புதுக்காலனி பகுதியில் அம்மா திட்ட முகாமில் பெறப்பட்ட மனுக்களின் பேரில் தேர்ந்து எடுக்கப்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கினார்.

பேரோடு ஊராட்சிக்கு உள்பட்ட மேட்டுப்பாளையம் பகுதியில் புதிய குடிநீர் தொட்டியை அமைச்சர் கே.வி.ராமலிங்கம் திறந்து வைத்தார். மேலும் காலிங்கராயன்பாளையத்தில் நடந்த அம்மா திட்ட முகாமிலும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

சென்னிமலை ஊராட்சி ஒன்றியம் கவுண்டச்சிபாளையம் ஊராட்சியில் முதியோர்களுக்கு உதவித்தொகை வழங்கியும், குட்டப்பாளையம் ஊராட்சியில் ஏழைகளுக்கு தலா 4 ஆடுகள் வழங்கியும் பொதுமக்கள் மத்தியில் பேசினார். இந்த நிகழ்ச்சிகளில் ஈரோடு மாவட்ட வருவாய் அதிகாரி கணேஷ் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள், அ.தி.மு.க. பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

 

மாநகராட்சியில் மக்கள் குறைதீர் கூட்டம்

Print PDF

தினமணி              24.07.2013

மாநகராட்சியில் மக்கள் குறைதீர் கூட்டம்

திருநெல்வேலி மாநகராட்சியில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் மேயர் விஜிலா சத்தியானந்த் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஆணையர் (பொறுப்பு) த. மோகன் முன்னிலை வகித்தார். பல்வேறு பகுதி மக்கள் குறைகள் தொடர்பாக மேயரிடம் மனு அளித்தனர்.

மேலப்பாளையம் ஆமீம்புரம் 7, 8, 9, 10 மற்றும் 11-வது தெரு மக்கள் மேயரிடம் அளித்த மனு விபரம்: ஆமீம்புரம் 7 முதல் 11-வது தெரு வரை கடந்த 6 மாதங்களாக சரியாக குடிநீர் வரவில்லை. பல முறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எங்கள் தெருக்களை மாநகராட்சி தொடர்ந்து புறக்கணித்து வருகிறது.

இப்போது ரமலான் நோன்பு காலமாக இருப்பதால் தண்ணீர் இல்லாமல் மக்கள் மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர். எனவே, எங்கள் பகுதிக்கு முறையான குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர் அவர்கள்.

திருநெல்வேலி நகரம் ரங்கநாதபுரம் பகுதி மக்கள் மேயரை சந்தித்து அளித்த மனு விவரம்: ரங்கநாதபுரம் கிழக்குப் பகுதியில் வாய்க்கால் ஓரமாக மாநகராட்சி சார்பில் நடைபாதை அமைக்கப்பட்டது.  இந்த நடைபாதையை நீண்ட காலமாகப் பயன்படுத்தி வருகிறோம். இந்நிலையில் இந்த நடைபாதையை சிலர் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளனர்.

இந்த ஆக்கிரமிப்பை அகற்றி நடைபாதையை பொதுமக்கள் தொடர்ந்து பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர் அவர்கள்.
 


Page 134 of 841