Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

வேலூரில் மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் கலெக்டர் கொடியசைத்து தொடங்கிவைத்தார்

Print PDF

தினத்தந்தி            11.07.2013

வேலூரில் மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் கலெக்டர் கொடியசைத்து தொடங்கிவைத்தார்


வேலூரில் மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

விழிப்புணர்வு ஊர்வலம்

வேலூர் மாநகராட்சி அலுவலகம் அருகில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம், விழிப்புணர்வு வாகனத்தை நேற்று கலெக்டர் சங்கர் கொடியசைத்து தொடங்கிவைத்தார். நிகழ்ச்சிக்கு மேயர் கார்த்தியாயினி முன்னிலை வகித்தார்.

ஊர்வலத்தில் கலந்து கொண்ட மாணவ–மாணவிகள் தங்கள் கைகளில் மழைநீர் சேகரிப்போம், மண் வளம் காப்போம், விண்ணின் மழைத்துளி, மண்ணின் உயிர்த்துளி, மழைநீர் சேகரிப்போம், மண் அரிப்பை தடுப்போம், மழைநீர் சேகரிப்போம், நிலத்தடி நீரை பாதுகாப்போம் என்பன போன்ற வாசகங்கள் அடங்கிய அட்டைகளை வைத்திருந்தனர். அத்துடன் கோஷமும் போட்டுக்கொண்டு சென்றனர். துண்டு பிரசுரங்களும் வினியோகிக்கப்பட்டது.ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாகச்சென்று பழைய மாநகராட்சி அலுவலகம் சென்று நிறைவடைந்தது.

யார்–யார்

நிகழ்ச்சியில் மண்டலக்குழுத்தலைவர் குமார், நகரமைப்புக்குழு தலைவர் அன்பு மற்றும் கவுன்சிலர்கள், என்ஜினீயர் தேவக்குமார், நகரமைப்பு அலுவலர் கண்ணன், கட்டிட ஆய்வாளர் மதிவாணன், துப்புரவு ஆய்வாளர்கள் சிவக்குமார், லூர்துசாமி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
 

தூத்துக்குடியில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி மேயர் சசிகலாபுஷ்பா தொடங்கி வைத்தார்

Print PDF

தினத்தந்தி            11.07.2013

தூத்துக்குடியில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி மேயர் சசிகலாபுஷ்பா தொடங்கி வைத்தார்


தூத்துக்குடியில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணியை மாநகராட்சி மேயர் சசிகலாபுஷ்பா தொடங்கி வைத்தார்.

மழைநீர் சேகரிப்பு

தமிழ்நாட்டில் கடந்த 2003–ம் ஆண்டு அனைத்து கட்டிடங்களிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்பு வைக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது. அதன்படி பெரும்பாலான வீடுகள், கடைகள், வணிக வளாகங்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் வைக்கப்பட்டன. தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள 1 லட்சத்து 28 ஆயிரம் கட்டிடங்களில் 64 ஆயிரம் கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு உபகரணம் அமைக்கப்பட்டு உள்ளது.

தற்போது இதில் சேதம் அடைந்ததை புதுப்பிக்கவும், மழைநீர் சேகரிப்பு உபகரணம் அமைக்காத கட்டிடங்களில் அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மழைநீர் சேகரிப்பு அமைப்பை ஏற்படுத்தாதவர்களின் சட்டம் 295 ஏ பிரிவின் கீழ் குடிநீர் இணைப்பை துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

விழிப்புணர்வு பேரணி

இதனால் தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் மழைநீர் சேகரிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நேற்று காலை நடந்தது. பேரணியை மாநகராட்சி மேயர் சசிகலாபுஷ்பா தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஆணையாளர் சோ.மதுமதி முன்னிலை வகித்தார். பேரணியில் தூத்துக்குடி மாநகர பகுதியில் உள்ள 34 பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை சேர்ந்த மாணவ–மாணவிகள் சுமார் 2 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.

பேரணி தூத்துக்குடி புதிய மாநகராட்சி அலுவலகத்தில் தொடங்கி, பாளையங்கோட்டை ரோடு, டபிள்யூ.ஜி.சி. ரோடு வழியாக பழைய மாநகராட்சி அலுவலகத்தை வந்தடைந்தது. பேரணியில் சென்ற மாணவ–மாணவிகள் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்களை ஏந்தியபடி சென்றனர்.

பாதுகாக்க..

இது குறித்து மேயர் சசிகலாபுஷ்பா கூறும் போது, மழைநீரை சேகரிக்க முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டு உள்ளார். தூத்துக்குடி கடல் நீர் உள்ளே புகும் அபாயம் உள்ள பகுதி. இங்கு மழைநீரை பூமிக்குள் செலுத்துவதன் மூலம் நிலத்தடி நீரை பாதுகாக்க முடியும். இதனால் அனைத்து கட்டிடங்களிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்பு வைக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த பேரணி நடத்தப்படுகிறது என்று கூறினார்.பேரணியில் துணை மேயர் சேவியர், மாநகராட்சி என்ஜினீயர் ராஜகோபால், இளநிலை என்ஜினீயர் சரவணன் மற்றும் கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 

கோவை மாவட்டத்தில் அடையாள அட்டைக்கு 7 லட்சம் பேர் புகைப்படம் எடுத்துள்ளனர்

Print PDF

தினத்தந்தி            11.07.2013

கோவை மாவட்டத்தில் அடையாள அட்டைக்கு 7 லட்சம் பேர் புகைப்படம் எடுத்துள்ளனர்

கோவை மாவட்டத்தில் அடையாள அட்டைக்கு 7 லட்சம் பேர் புகைப்படம் எடுத்து உள்ளனர். மாவட்டம் விட்டு மாவட்டம் இடம் பெயர்ந்தவர்கள் புகைப்படம் எடுக்க சிறப்பு வசதியும் செய்யப்பட்டு உள்ளது.

அடையாள அட்டை

கடந்த 2010–ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கின்படி கோவை மாவட்டத்தில் 32 லட்சம் மக்கள் உள்ளனர். அவர்களில் பலருக்கு ஆதார் அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது.

அந்த அட்டைக்கு பதிலாக கூடுதல் தகவல்கள் கொண்ட தேசிய குடியுரிமை அடையாள அட்டை (ஸ்மார்ட் கார்டு) வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில் கோவை மாவட்டத்தில் ஒவ்வொரு பகுதியாக புகைப்படம் எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

புகைப்படம் எடுக்கும் பணி

தற்போது கோவை மாநகராட்சியில் மத்திய மண்டலத்துக்கு உட்பட்ட 45, 47, 48 ஆகிய வார்டுகளிலும், பொள்ளாச்சி தாலுகாவில் சூலேஸ்வரன்பட்டி, ஜமீன்கோட்டம்பட்டி, ஊஞ்சவேலம்பட்டி ஆகிய பகுதிகளிலும், கோவை வடக்கு தாலுகாவில் கூடலூர் பேரூராட்சியிலும், மேட்டுப்பாளையத்தில் சிறுமுகையிலும், வால்பாறை நகராட்சியில் 10–வது வார்டிலும் ஸ்மார்ட் கார்டுக்கு புகைப்படம் எடுக்கும் பணி நடந்து வருகிறது.

இதற்காக புகைப்படம் எடுக்கும் பணி நடக்கும் பள்ளிகளுக்கு சம்பந்தப்பட்ட பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் சென்று புகைப்படம் எடுத்து செல்கிறார்கள்.

இதுவரை கோவை மாவட்டத்தில் ஸ்மார்ட் கார்டு அடையாள அட்டைக்கு எத்தனைபேர் புகைப் படம் எடுத்து உள்ளனர் என்று அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:–

7 லட்சம் பேர்

ஸ்மார்ட் கார்டில் ஒருவரின் 10 விரல் ரேகை, கருவிழி படல உருவம் இருக்கும். இந்த கார்டை எதற்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். அந்த கார்டில் குடும்பத்தில் உள்ள அனைத்து நபர்களின் பெயர், தொழில் உள்பட அனைத்து விவரங்களும் பதிவு செய்யப்பட்டு இருக்கும். 5 வயது முடிந்த அனைவருக்கும் இந்த அடையாள அட்டை வழங்கப்படுகிறது.

கோவை மாவட்டத்தில் இதுவரை 7 லட்சம் பேர் புகைப்படம் எடுத்து உள்ளனர். இன்னும் 25 லட்சம் பேர் புகைப்படம் எடுக்க வேண்டும். புகைப்படம் எடுத்தவர்களுக்கு ஒப்புகை சீட்டு வழங்கப்பட்டு வருகிறது. அனைவருக்கும் புகைப்படம் எடுத்த பின்னர் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும்.

இடம் பெயர்ந்தவர்களுக்கு வசதி

ஒரு இடத்தில் புகைப்படம் எடுத்த பின்பு அங்கு விடுபட்டவர்கள் இருந்தால், மீண்டும் அந்த இடத்துக்கு சென்று புகைப்படம் எடுக்கப்படும். புகைப்படம் எடுக்க செல்லும் பொதுமக்கள் தங்களிடம் இருக்கும் ஏதாவது ஒரு ஆவணங்களையும் கண்டிப்பாக எடுத்துச்செல்ல வேண்டும்.

மேலும் மாவட்டம் விட்டு மாவட்டம் இடம் மாறி வந்தவர்கள், தங்கள் பகுதியில் நடக்கும் புகைப்படம் எடுக்கும் பகுதிக்கு சென்று தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். பின்னர் அவர்களுக்கு 3 மாதம் கழித்து புகைப்படம் எடுக்கப்படும். ஒரே மாவட்டத்திற்குள் இடம் பெயர்ந்தவர்கள், தங்களிடம் இருக்கும் தேசிய மக்கள் தொகை கணக்கீட்டின்போது கொடுக்கப்பட்ட ரசீதை கொண்டு சென்று புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம்.

15–ந் தேதி கிழக்கு மண்டலம்

மேலும் கோவை மாநகராட்சியில் கிழக்கு மண்டலத்தில் வருகிற 15–ந் தேதியும், தெற்கு மண்டலத்தில் 21–ந் தேதியும் புகைப்படம் எடுக்கப்பட உள்ளது. பின்னர் ஆகஸ்டு மாதத்தில் வடக்கு மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளுக்கு புகைப்படம் எடுக்கப்படும்.

இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

 


Page 141 of 841