Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

சுற்றுச்சூழல் பூங்காவில் படகு சவாரி மீண்டும் தொடக்கம் பெரியவர்களுக்கு கட்டணம் ரூ.20, சிறியவர்களுக்கு ரூ.15

Print PDF

தினத்தந்தி               26.06.2013

சுற்றுச்சூழல் பூங்காவில் படகு சவாரி மீண்டும் தொடக்கம் பெரியவர்களுக்கு கட்டணம் ரூ.20, சிறியவர்களுக்கு ரூ.15

சுற்றுச்சூழல் பூங்காவில் மீண்டும் படகு போக்குவரத்து தொடங்கப்பட்டு உள்ளது. பெரியவர்களுக்கு கட்டணமாக ரூ.20ம், சிறியவர்களுக்கு ரூ.15ம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

படகுசவாரி

மதுரை மாநகராட்சி அண்ணா மாளிகை வளாகத்தில் சுற்றுச்சூழல் பூங்கா உள்ளது. ஏராளமான அபூர்வ மரங்கள் உள்ள இந்த பூங்காவுக்கு தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் பொழுது போக்கிற்காக வந்து செல்கின்றனர்.

இந்த பூங்காவில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு படகு சவாரிக்காக சிறிய செயற்கை குளம் அமைக்கப்பட்டு படகு இயக்கப்பட்டது. அதன்பின் படகுகள் பழுது ஆனதாலும், குளத்தில் தண்ணீர் நிரப்புவதில் சிக்கல் ஏற்பட்டதாலும் படகு போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டது.

சீரமைக்கும் பணி

இந்த நிலையில் படகு சவாரியை மீண்டும் செயல்படுத்த மாநகராட்சி கமிஷனர் நந்தகோபால் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அதிகாரிகள் பம்பரமாக சுழன்று படகு சவாரிக்கான ஏற்பாடுகளை செய்தனர். அதன்படி செயற்கை குளத்தில் தேங்கி இருந்த குப்பைகள் அகற்றப்பட்டு, சுவர்களில் வர்ணம் அடிக்கப்பட்டது. அதன்பின் பழுதான படகுகள் சீரமைக்கும் பணி நடந்தது.

இந்த நிலையில் படகு சவாரியை மாநகராட்சி கமிஷனர் நந்தகோபால் முன்னிலையில் மேயர் ராஜன் செல்லப்பா நேற்று காலை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் நகர் பொறியாளர் (பொறுப்பு) மதுரம் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர். அங்கிருந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் படகு சவாரி மேற்கொண்டனர்.

கமிஷனர் தகவல்

இது குறித்து மாநகராட்சி கமிஷனர் நந்தகோபால் கூறியதாவது:–

பொதுமக்களின் பொழுது போக்கிற்காக நிறுத்தப்பட்டு இருந்த படகு சவாரி மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளது. இதற்காக செயற்கை குளத்தில் 150 லாரிகள் மூலம் தண்ணீர் நிரப்பப்பட்டு உள்ளது. முதல்கட்டமாக 2 படகுகள் மட்டும் விடப்பட்டுள்ளன. ஒரிரு தினங்களில் கூடுதலாக 4 படகுகள் விடப்படும். விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலையில் இருந்து இரவு வரை படகு சவாரி இருக்கும். மற்ற நாட்களில் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை இருக்கும்.

பெரியவர்களுக்கு கட்டணமாக ரூ.20–ம், சிறியவர்களுக்கு ரூ.15–ம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

 

குடிநீர் அபிவிருத்திப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா

Print PDF

தினமணி               26.06.2013

குடிநீர் அபிவிருத்திப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா

அந்தியூர் பேரூராட்சியில் ரூ.3.24 கோடி மதிப்பில் புதிய குடிநீர் திட்ட அபிவிருத்திப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

   மாவட்ட ஆட்சியர் வே.க.சண்முகம் தலைமை வகித்தார். அந்தியூர் எம்எல்ஏ எஸ்.எஸ்.ரமணீதரன், பேரூராட்சித் தலைவர் டி.எஸ்.மீனாட்சிசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஈரோடு மாவட்ட பேரூராட்சிகள் உதவி இயக்குநர் எஸ்.கலைவாணன் வரவேற்றார்.

   அந்தியூர் பேரூராட்சியில் ரூ.22 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய வணிக வளாகக் கட்டடத்தை அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் திறந்து வைத்ததுடன்,   குடிநீர் திட்டப் பணிக்கு அடிக்கலும் நாட்டினார்.

     இதில் அவர் பேசியது:   அதிமுக ஆட்சியில் தொலைநோக்குடன் மக்களுக்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. திமுக ஆட்சியில் பயனில்லாத திட்டங்களால் கஜானா காலி செய்யப்பட்டது. முதல்வர் ஜெயலலிதா 33 துறை அமைச்சர்களுடன் மதிநுட்பத்துடன் செயல்பட்டு நிதிநிலையை மேம்படுத்தியதோடு, வரியில்லாத நிதிநிலை அறிக்கையை அளித்துள்ளார்.

   சமத்துவ, சமதர்ம சமுதாயம் மலர கல்வித் துறைக்கு கூடுதல் முக்கியத்துவத்துடன் பல்வேறு சலுகைகளை அளித்து வருகிறார். மக்கள் நலத் திட்டங்களை அளிக்கும் முதல்வருக்கு நம்பிக்கையுடன் ஆதரவளிக்க வேண்டும் என்றார்.

    12 மகளிர் குழுக்களுக்கு ரூ.18.95 லட்சம் நேரடிக் கடன், அந்தியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கம் சார்பில் 5 மகளிர் குழுக்களுக்கு ரூ.6.7 லட்சம் சுழல் நிதி உள்பட 20 பயனாளிகளுக்கு ரூ.26.10 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

வருவாய் அலுவலர் எஸ்.கணேஷ், ஊராட்சிக் குழுத் தலைவர் செல்வம், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர்.கோவிந்தராஜர், அதிமுக ஒன்றியச் செயலர் இ.செல்வராஜ், ஒன்றியக் குழுத் தலைவர்கள் அப்பாநாயக்கர் (அந்தியூர்), எஸ்.எம்.தங்கவேலு (பவானி), எஸ்.எஸ்.அய்யாசாமி (அம்மாபேட்டை), கோபி வேளாண் விற்பனை மைய இயக்குநர் வழக்குரைஞர் பி.யு.முத்துசாமி, செயல் அலுவலர் எம்.கருப்பணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

மாநகராட்சி சுற்றுச்சூழல் பூங்காவில் படகு சவாரி

Print PDF

தினமணி               26.06.2013

மாநகராட்சி சுற்றுச்சூழல் பூங்காவில் படகு சவாரி

மதுரை மாநகராட்சி சுற்றுச்சூழல் பூங்காவில் செவ்வாய்க்கிழமை படகு சவாரி துவக்கி வைக்கப்பட்டது. இதில் சவாரி செய்வதற்கு 15 நிமிடத்துக்கு பெரியவருக்கு ரூ. 20-ம், சிறியவருக்கு ரூ.15-ம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக, ஆணையர் ஆர். நந்தகோபால் தெரிவித்தார்.

இந்தப் பூங்காவில் செயல்படாமல் இருந்த படகு சவாரி குளம் ரூ. 2.60 லட்சத்தில் மராமத்து செய்யப்பட்டுள்ளது. இந்தக் குளத்தில் பழைய தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு, தளம் புதுப்பிக்கப்பட்டு நூறு லாரிகளில் நல்ல தண்ணீர் நிரப்பப்பட்டது. பின்னர் இரண்டு படகுகள்   வர்ணம் பூசப்பட்டு விடப்பட்டன.

  செவ்வாய்க்கிழமை   குளத்தில் படகு சவாரியை ஆணையர் ஆர். நந்தகோபால் முன்னிலையில், மேயர் வி.வி. ராஜன்செல்லப்பா துவக்கி வைத்தார்.

நகரப் பொறியாளர் (பொறுப்பு) அ.மதுரம், துணை ஆணையர்  (பொறுப்பு) சின்னம்மாள், செயற்பொறியாளர் சந்திரசேகரன், உதவிச் செயற்பொறியாளர் பாலமுருகன், பொறியாளர் இந்திராதேவி உள்ளிட்ட  அலுவலர்கள்  கலந்து கொண்டனர்.

பின்னர் ஆணையர்  கூறுகையில், இங்கு தினமும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை படகு சவாரி செய்யலாம். குளத்தை ஒருமுறை சுற்றி வருவதற்கு   பெரியவருக்கு ரூ. 20-ம், சிறியவருக்கு ரூ.15-ம் கட்டணம். தற்போது 2 படகுகள் விடப்பட்டுள்ளன. மேலும் 4 படகுகள் விரைவில் விடப்படும். மழை பொய்த்த நிலையிலும், பொதுமக்கள் பொழுதுபோக்கு அம்சத்தை கருத்தில் கொண்டு குளத்தில் தண்ணீர் தேக்கப்பட்டுள்ளது.

அடுத்தக்கட்டமாக, பிளாஸ்டிக் தென்னை மரங்களை பூங்காவில் நிறுவ ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்னும் ஒரு வாரத்தில் பல வண்ண மரங்கள் நிறுவப்படும். இது பொதுமக்களை வெகுவாகக் கவரும் என்றார்.

 


Page 151 of 841